Wednesday, October 25, 2017

34. Thai Mann.

     தூரத்தில் கண்ட காட்சியை கண்டு துணுக்குற்ற செல்லம்மா, வேகமாக

அருகில் சென்றாள்.அங்கு தன் வயதை ஒத்த,தனக்கு தெரிந்த,தன் பாட்டி

ஊரை சேர்ந்த பெண் ஒருத்தி அரண்டு போய் நின்றிருந்தாள்.அவளும்,

செல்லம்மாவை போலவே,அருகில் இருக்கும் நகரத்தில் பட்ட படிப்பு

படித்துக் கொண்டிருக்கும் பெண்தான்.அவள் எதிரில் நவ நாகரிகமான,

வாட்டசாட்டமான வசீகரிக்கும் தோற்றத்தில் ஒரு வாலிபன் நின்று கொண்டு

இருந்தான்.நிச்சயமாக அவன் நகர் சார்ந்த வாலிபனாகத்தான் இருக்க

வேண்டும்.இல்லை என்றால் இப்படி ஒரு கிராமத்திற்குள் காலடி எடுத்து

வைத்து, கிராமத்தின் கலாச்சாரம் தெரியாமல் ,ஒரு யுவதியிடம் பேசும்

தைரியம் வந்திருக்காது.


      கலவரத்துடன் நின்று கொண்டிருந்தவளிடம்  "என்ன சித்ரா ! என்ன

விஷயம் ? " என நிதானமாக விசாரித்தாள். " வந்துட்டயா செல்லம்மா ! "

செல்லம்மாவை பார்த்ததும் நன்றாக தெளிந்து போனாள் சித்ரா. " இந்த

ஆள்  கொஞ்ச நாளா பஸ் நிறுத்தம் வரைக்கும் தொடர்ந்து வந்துகிட்டு

இருந்தான்.இப்ப என்னடானா ஊருக்குள்ளேயே வந்துட்டான் செல்லம்மா ".

" அது சரி ! அவன் எங்க வந்த என்ன ? நீ ஏன் இப்படி இருக்கே ? சக்தியின்

வடிவமடி நீ !அது புரியாமே விரைச்சு போய் நிக்கறே நீ ! ". இப்படி செல்லம்மா

சித்ராவின் சக்தியை அவளுக்கே புரிய வைக்கவும், அவள், " அதானே ! "

என்றவள்,முந்தானையை வரிந்து கட்டிக் கொண்டு திடமாய் நிலத்தில்

காலூன்றி நின்று வந்தவனை நேருக்கு நேராய் பார்த்தாள் .


     விஷயம் விபரீதமாக போவதை பார்த்ததும்,வந்த வாலிபன் பின்வாங்க

தொடங்கினான்.செல்லம்மா அவன் பக்கம் திரும்பி, " ஏண்ணே  உன்னை

பார்த்த படித்த பெரிய இடத்து புள்ளை மாதிரி இருக்கு. இப்படி நடக்கலாமா !

உங்க அம்மா,அப்பாவுக்கு தெரிஞ்சா எத்தனை விசனம்.அண்ணனுக்கு ஒரு

விஷயம் புரியலேன்னு நினைக்கறேன். புள்ளைங்கனா ,அதுவும் பெரிய

இடத்திலே பிறந்த புள்ளைங்கனா ,அம்மா,அப்பா,வீட்டு கௌரவத்துக்கு

குந்தகம் வராம நடக்க தெரியணும்.இல்லே சாதாரண குடும்பத்திலே

பிறந்துட்டோமா!  அப்போ அம்மா,அப்பா,வீட்டு கௌரவத்தை படிப்படியா

மேலே கொண்டு போக தெரியணும். இதற்கு விவரம்  தெரிஞ்ச நாள்லே

இருந்து நம்மை நாமே செதுக்கிட்டு இருக்க தெரியணும்னு எங்க பாட்டி

சொல்லிட்டே இருப்பாங்க.அண்ணனுக்கு யாரும் இதை சொல்லி தரலேயா?

அட ! இதைத்தானே அண்ணே நாம படிக்கிற படிப்பும் சொல்லி தருது ".


      " இன்னும் சொல்லப்போனா,இப்ப நமக்கு  இருக்கற உறவுகளும்,இனிமே

வரபோற உறவுகளும் நம்மை பார்த்து , " இப்படி ஒரு நல்ல உறவை 

எங்களுக்குதந்ததற்கு எங்களோட ஆயுசுக்கும் நன்றி கடவுளே ! அப்படின்னு

கடவுளுக்கு தினம்,தினம் நன்றி சொல்லிட்டிருக்கவேணாமா ? " என்ற

செல்லம்மா வந்தவனை உற்றுப் பார்த்தாள்.வந்தவன் கூனிக் குறுகி

போனான். இத்தனை விஷயங்கள் தன்னை சார்ந்து இருப்பது அவனுக்கு

இப்போதுதான் பிடிப்பட்டது..இருவரையும் பார்த்து, " ஸாரி ! எனக்கு என்னோட

அடிப்படையே என்னனு இப்பதான் புரிஞ்சது. அதை எனக்கு புரியவைச்சதுக்கு

ரொம்ப தேங்க்ஸ் ".  என்று  உண்மையை உணர்ந்து சொன்னான்.


       அதற்குள் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், " என்ன செல்லம்மா ! என்ன

விஷயம் ? என்று கேட்டுக் கொண்டு வந்தார்கள். " ஒண்ணும் இல்லே மாமா !

இந்த அண்ணண் வழி தவறி வந்துட்டாரு. இப்பதான் சரியான வழியை

காட்டினோம்.இப்ப சரியா புரிஞ்சுகிட்டு இருக்காப்பலேதான் தெரியுது ".

என்றவள்,அந்த வாலிபனிடம் , " என்ன அண்ணே ! புரிஞ்சுதில்லே ! " என்று

சாதாரணமாக கேட்டாள். அவன் நன்றியோடு தலையசைத்து விடை

பெற்றான்.


       இந்த விவரத்தை எல்லாம் மிகுந்த ஆச்சரியத்துடன் விஜயனின்

கடிதத்தில் படித்துக் கொண்டிருந்தது விஜயனின் குடும்பம்.ஆனால்,

கடிதத்தின் முடிவில், அவன் எழுதியிருந்த இன்னொரு முக்கியமான

விஷயம் என்று குறிப்பிட்டு  எழுதி இருந்த விஷயத்தை படித்ததும்

அனைவரும் அயர்ந்து போனார்கள்.






                                                                                          தொடரும்.............






No comments:

Post a Comment