Thursday, October 5, 2017

27.Thai Mann.

     வானில் நிலவும்,காந்தி சித்தப்பா சொன்னதை ஆமோதிப்பது போல மிக

வசீகரமான புன்னகையை சிந்தியபடி தன் பயணத்தை தொடர்ந்து கொண்டு

இருந்தது.வாய்க்கால் வந்து சேர்ந்தனர் இருவரும்."தம்பி! முன்னெல்லாம் "

இப்படி முறை வச்சு வாய்க்கால் திருப்பி விடற வேலை எல்லாம் இல்லை.

அம்புட்டு தண்ணி இருக்கும்.அதுவுமில்லாமே,இப்ப நடக்கற விவசாயத்தை

விட பல மடங்கு விவசாயம் நடந்தது.நடக்க ஆரம்பிச்ச குழந்தையிலிருந்து

படுக்கையாகி விட்ட பெரியவங்களை தவிர,ஊரிலே எல்லோருக்கும்,

விவசாய வேலை பின்னி எடுத்துரும்.


     விதை விதைக்கிறதிலிருந்து,

கதிர்களை,களத்துமேட்டுக்கு சேர்ப்பது வரை யாருக்கும்,சாப்பிடவும்,

குளிக்கவும்,இயற்கை உபாதைகளுக்கு ஒதுங்கவும் கூட நேரமிருக்காது.

ஊரில் உள்ள ஐயாக்களும்,ஆத்தாக்க்களும்தான்,எல்லா வயதினரையும்

மேற்படி விஷயங்களுக்கு சமயம் பார்த்து விரட்டி,விரட்டி அனுப்பி

வைப்பாங்க.எல்லா வயசுக்காரங்களும்,எல்லா வயசுக்காரங்களையும்

கலாய்க்கிறதென்ன! காய்ச்சி எடுப்பதென்ன!ஒருவருக்கு ஒருவர் காட்டும்

அழகான அக்கறை என்ன! எல்லாவற்றிலும்எல்லோருக்கும் பாங்காய் பங்கு

வைக்கும் பாந்தம் என்ன!அழகாய் எங்கே பார்த்தாலும் பச்சை பசேல்னு

கண்ணுக்கு குளிர்ச்சி.முகத்திற்கு மலர்ச்சி.ஓங்கி உயர்ந்த மரங்கள்,


பச்சை பயிர்களோட பிம்பங்கள் எல்லாம்,அங்கங்கே ஓடிட்டிருக்கிற

வாய்கால்லெ,தேங்கி இருக்கிற குளம் குட்டையிலே,ஏன்  கிணத்திலே கூட

தெரிகிற அழகிருக்கே ,அட!அட!அதையெல்லாம் காண கண் கோடி

வேணுமப்பா.எனக்கு நிறைய நேரங்களிலே இது சம்பந்தமா நிறைய

வருத்தம்.இந்த தலைமுறை இந்த சந்தோஷங்களை எல்லாம் இழந்து

நிக்குதே அப்படின்னு ".


    விஜயன் எதுவும் பேசாமல்,பேச தோன்றாமல்,பேச இயலாமல்

அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.அவனால் அப்படித்தான் இருக்க

முடிந்தது.காந்தி சித்தப்பாவும்,தன் பேச்சு விஜயனை ஸ்தம்பிக்க வைத்து

விட்டதை போலத் தோன்றியதால்,விஜயனை சிறிது ஆசுவாசப் படுத்த

விரும்பினார்.அவனை பார்த்து வாஞ்சையுடன் புன்முறுவல் பூத்தார்.

அவரது  அந்த புன்முறுவல் அந்த நிலவொளியில்,அவரது முகத்தையும்,

அந்த சூழநிலையையும் இன்னும் பிரகாசமாக்கியது.விஜயன்,தன் தந்தையின்

அருகாமையை உணர்ந்தான்.


  " தம்பி! அதிக நேரமாயிட்டது ! தம்பிக்கும் பசிக்கும் போல;மீதியை

பிறகு பேசிக்கலாம்".என்றவாறு அவர் வந்த வேலையை லாவகமாக முடித்து

விட்டு கிளம்ப ஆயுத்தமானார்.பேசிக்கொண்டே,காந்தி சித்தப்பா ந்த  எந்த

இடையூறும் இல்லாமல்,தன் வேலையை லாகவமாக முடித்த பாங்கைக்

கண்டு விஜயன் ஆச்சரியப் பட்டான்.மனதில் சாந்தி இருந்தால் மட்டுமே இந்த

மாதிரியான லாவகம் சாத்தியம் என்று தோன்றியது.விஜயனுக்கு தானும்,

தன் குடும்பமும் இழந்த ஆனந்தங்கள் ஏராளம்,ஏராளம் என்று தோன்றியது.





                                                                                                       தொடரும்.........

                                                                                                             


No comments:

Post a Comment