Monday, November 24, 2014

14.Thai Mann.

   கடிதம் வந்திருந்தது.மீனாவிற்கு கடிதம் வந்திருந்தது.அதுவும் அவளது தாய்

நாட்டிலிருந்து மீனாவிற்கு கடிதம் வந்திருந்தது.அதுவும் அவளது அன்புக்

கணவனிடமிருந்து வந்திருந்தது.மீனாவின் கையில் அந்த கடிதம் கிடைக்கப்

பெற்றவுடன்,அவளுக்கு ஒரு நிமிடம் அவள் உணர்வு அவளிடம் இல்லை.


   கடிதப் போக்குவரத்து என்பது அடியோடு நின்று விட்டக் காலக் கட்டமிது.

தன் குழந்தைகளுக்கும் கூட இதன் அருமை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தாங்களும்,ஒரு பெற்றோராக இதன் அருமையை புரிந்துக் கொள்ளத் தம்

குழந்தைகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரவில்லை.


   மீனாவின் எண்ணங்கள் இப்படி சிறகடித்துக் கொண்டிருந்தபோது அவள்

கையிலிருந்த கடிதம் ஸ்ரீதரால் பறிக்கப்பட்டது.திடுக்கிட்டு திரும்பினாள்

மீனா. " என்னம்மா இது! ஏதோ கடிதம் வந்திருக்கப் போலே இருக்கே!

அதிசயமா இருக்கு.யாரிடமிடருந்து வந்திருக்கு ". அதிசயமாய் கடிதத்தை

திருப்பிப் திருப்பிப் பார்த்தான் ஸ்ரீதர்.


   " ஆமாம்! அப்பாவிடம் இருந்துதான் வந்திருக்கிறது.அதிசயமாத்தான்

இருக்கு.அவர் நம் சொந்த ஊருக்கு போய் இரண்டு மாசமாச்சு.இதுவரைக்கும்

இப்படி கடிதம் எதுவும் வந்ததில்லை.இப்போது கடிதம் வந்திருப்பதைப்

பார்த்தால்,அவரிடம் நம்முடன் பகிர்ந்துக்க நிறைய விஷயம் இருக்கும்

போல.என்னனு பிரிச்சு படி!".மீனா சாவகாசமாக அமர்ந்தாள்.


     ஸ்ரீதர் பெரும் ஆர்வத்தோடு கடிதத்தை பிரித்து உரக்க  படிக்க

ஆரம்பித்தான்.கடிதம்மிகவும்  இயல்பான அன்புடன் அழகாக ஆரம்பிக்கப்

பட்டிருந்தது. " அன்பு மீனா! நான் நம் சொந்த மண்ணில் நமது அன்பான

உறவினர்களுடன் நலமாக இருக்கிறேன்.நலமாக இருக்கிறேன் என்பதை விட

ஒரு தெளிவுடன் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்றுக் கூறுவதுதான்

 சாலப் பொருத்தம் என்று நினைக்கிறேன் ".


   இந்த இடத்தில்,தாயும்,மகனும் ஒன்றும் புரிந்துக் கொள்ள இயலாமல்,

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.மேலே படிக்க சொல்லி மீனா

சைகை செய்ய ஸ்ரீதர் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தான். " இறைவன் அருளால்

நீங்கள் எல்லோரும் நலமாக இருக்கிறீர்கள் என நம்புகிறேன்.நாட்காட்டியை

பார்த்தால்,நம் சொந்த மண்ணில் நான் கால் பதித்து இரண்டு மாதங்கள்தான்

ஆகிறது.ஆனால் சொன்னால் உங்களால் நம்ப முடியாது என்று

நினைக்கிறேன்.ஆமாம் மீனா! எனக்கு பல யுகங்கள் ஆனது போல ஒரு

உணர்வு ".


    " இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம் என நினைக்கிறேன்.ஒன்று

எனது சொந்த மண்ணின் தாக்கம் இங்குள்ள ஒரு பொங்கி எழும் ஜீவன் மூலம்

எனக்குள் ஒரு தொட்டக் குறை விட்டக் குறையாக ஒரு பெரியத் தாக்கத்தை

ஏற்படுத்தி இருக்கும் என உணர்கிறேன்.இன்னொன்று உங்களை எல்லாம்

பிரிந்து வந்த ஏக்கம் மிகவும் வாட்டுகிறது என நினைக்கிறேன்.மீனா! எனது

உதவி இல்லாமல் உனது அன்றாடப் பணிகளில் சிரமம் இருக்கும் என்பது

எனக்குத் தெரியும்.ஆனால், நமது அன்புக் குழந்தைகள் எல்லா விதத்திலும்

உனக்கு பக்க பலமாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையும் என்னுள் ஆழமாக

பதிந்திருக்கிறது.அது சரி! உனது இப்போதைய பணியை எப்படி உணர்கிறாய்?

நலமாக இருக்கிறாயா? நமது குழந்தைகள் இருவரும் நலம்தானே?நமது

மாப்பிள்ளை,சம்பந்தி வீட்டாரை நான் மிகவும் விசாரித்ததாக அவர்களுக்கு

தெரியப்படுத்து.அருமையான மனிதர்கள் ".


   மனம் நெகிழ்ந்து போனது மீனாவிற்கு.ஸ்ரீதருக்கு சைகைக்  காட்டி படிப்பதை

நிறுத்த செய்து விட்டு,தன்னை சிறிது ஆசுவாசப் படுத்திக் கொண்டாள்.

ஸ்ரீதருக்குக் கூடத் தன் தந்தையின் மாசற்ற அன்பினால் தோய்த்து எழுதப்

பட்ட அந்தக் கடிதம் ,அவரின் இயல்பான,இனிமையான அன்பை தன்னுள்

ஐக்கியமாக்கி விட்ட உணர்வு,அவனை, இதுவரை அறிந்திராத ஒரு புதிய

இதமான உலகிற்கு இட்டுச் சென்றது.அதை முழுவதுமாக உள் வாங்கிக்

கொண்டு,தன் தாயைப் பார்த்தான்.மீனா,மேலே படிக்க சொல்லி தலை

அசைத்தாள்.தொடர்ந்தான் ஸ்ரீதர்.


    " பாரேன் மீனா! இந்த கடிதம் செய்யும் ஜாலத்தை!தொலை பேசியில் பேசும்

போது தோன்றாத பல விஷயங்கள்,கடிதம் எழுத ஆரம்பித்தவுடன் எப்படி

முட்டி மோதிக் கொண்டு வருகின்றனவென்று.இங்கு ஓடியாடும்

குழந்தைகளை எல்லாம் பார்க்கும்போது,எனக்கு நம்ச்  செல்லக்

குழந்தைகளின் ஒவ்வொருப் பருவமும் என்னுள் வந்து என்னை களிப்புறச்

செய்கிறது.அம்மாவுடன் அதைப் பற்றி எல்லாம் பேசிப் பேசி,அம்மா, உங்களை

எல்லாம் பார்த்தே ஆக  வேண்டும் என்று என்னை வாட்டி எடுத்துக்

கொண்டிருக்கிறார்.அக்கா குடும்பத்தினரின் அருமையான அன்பின்

வெளிப்பாட்டினையும்,அக்கா  குடும்பத்தினரும்,நம் அம்மாவும்,அப்பாவும் நம்

ஊரில் சம்பாதித்து வைத்திருக்கும் மரியாதையையும் நீங்கள் நேரில் வந்து

உணர வேண்டும் என்று எனக்குள் ஓர் ஆழமான எண்ணம் இருக்கிறது.

இதற்கு விரைவில் ஒரு வாய்ப்பு ஏற்படுத்தித் தரும்படிஇறைவனிடம் மனதார

வேண்டிக் கொண்டிருக்கிறேன்".


    பின் குறிப்பு; " மீனா! அடுத்த பக்கத்தில் அம்மாவும் உங்கள் எல்லோருக்கும்

கடிதம் எழுதி இருக்கிறார்.நீங்கள் எல்லோரும் கண்டிப்பாக பதில் கடிதம்

எழுத வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அவருக்கு என்று நீங்கள் தனியாக எழுதினால்,மிகவும் களிப்படைவார்.

உங்கள் எல்லோருக்கும் உங்கள் உடல் நலத்தில் கவனம் இருக்கட்டும்.

மற்றவை  அடுத்தக் கடிதத்தில்.குறிப்பாக  பொங்கி,பொங்கி எழுந்து, என்னைச்

சித்திரைவதைப் படுத்திக் கொண்டிருக்கும்  அந்த ஜீவனைப் பற்றி அடுத்தக்

கடிதத்தில் விரிவாக எழுதுகிறேன். 

  

                                                                                                  உனது அன்பு

                                                                                                           ஜெய்.
                                                                                                   



 


Sunday, November 16, 2014

13.Thai Mann.

   மாலை  மணி ஐந்து ஆனதும்,விஜயன் தனது சகோதரியுடன்  அவரது

குடும்பத்தினரை சந்திக்க அவரது ஊருக்குக் கிளம்பினான்.அவனுக்கு

ஒரு விஷயம் புரியவில்லை.புரியவில்லை என்றால் புரியவே இல்லை.

அதாவது, ஏன் அக்கா குடும்பத்தார் ஒருவரும்,அவன் வந்து இவ்வளவு

நேரமாகியும்,அவனை சந்திக்க வரவில்லை  என்று அவனுக்குப்

புரியவில்லை.அதாவது புரியவே இல்லை.


   தனது  தாயிடம் காரணம் கேட்டதற்கு," அந்தி சாய்ந்ததும்,அக்காவுடன் நீ

அக்கா வீட்டிற்கு போய் எல்லோரையும் பார்த்துட்டு வாப்பா! உனக்கே

எல்லாம் புரியும்".நீண்ட பெருமூச்சுடன் அவன் தாய் எழுந்திருந்து வெளியே

போனார்.அவர் யாரையோ அழைக்கும் குரல் கேட்டது."முருகா இங்கே வா

சாமி.குதிரைக்கு தீவனம் போட்டு தண்ணி காட்டினையோ!".தன் தாயின்

பரிவான விசாரணையில் இளகிப் போனான் விஜயன்."ஆயிடிச்சு ஆத்தா!".

பரிவான விசாரணைக்கு வந்த பவ்யமான பதில் விஜயனின் மனதைத்

தென்றலாக வருடியது.அந்த பவ்யமான குரலுக்கு சொந்தக்காரனைக்

காண மனம் விழைந்தது.


   "இந்த சாமானை எல்லாம் வண்டியில் ஏத்திட்டு,அக்காவுக்கும்,தம்பிக்கும்

சேர்த்து தைரியத்தையும் ஏத்திட்டு நம்ப மாப்பிள்ளை ஐயா வீட்டுக்கு

போய்ட்டு வரணும்ப்பா! நம்ப வீட்டுக்குப்  பிள்ளையாய் பிறக்க வேண்டியவர்,

மறுப் பிள்ளையாய்,மாப்பிள்ளையாய் நம்பளை  காக்க வந்த சாமி புள்ளை !

நானும் என்னோட குடும்பமும் ஏதோ ஒரு சந்தர்பத்திலே ஏதோ ஒரு

உத்தமமான காரியம் பண்ணியிருக்கோம் போல.அதனாலதானோ

என்னமோ சாமி,தம் புள்ளையையே நம்ப வீட்டிற்கு மாப்பிள்ளையாய்

அனுப்பி வெச்சார் போல!".


    விஜயனுக்கு சுருக்கென்றது.மாமாவிற்கு அவரது பெரிய குடும்பத்தின்

பொறுப்புகளே ஏகத்திற்கு இருக்க,தானும் பொறுப்பில்லாமல்,தன்

 பொறுப்புக்களையும் சேர்த்து அவரின் பொறுப்பில் சேர்த்து விட்டது

என்றைக்கும் இல்லாமல் இன்று பெரிதும் சங்கடப் படுத்தியது.


   மாமாவின் உருவம் கண் முன்னால் வந்து நின்றது.கம்பீரமும்கண்ணியமும்,

எதார்த்தமான பேச்சும்,அவரது  நடை,உடை,பாவனை எல்லாம்.அவரை

ஒரு முறை சந்தித்து விட்டால்,எவருடைய எதிர்மறை எண்ணங்களும்

ஓரங்கட்டிவிடும்.அளவான,அர்த்தமுள்ள பேச்சு.அடுத்தவரது பேச்சும்,

அளவானதாக,அர்த்தமுள்ளதாக அமைய  வைக்கும் சாதுர்யம்.விஜயனுக்கே

அவரை சந்திக்க ஒருவிதமான தயக்கம் அவனுள் உருவாகிக் கொண்டு

இருந்தது.


     இருந்தாலும், சில விஷயங்கள் தவிர்க்க முடியாதவை.தவிர்க்கவும்

கூடாதவை.நேருக்கு நேர் சந்தித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில்

இருப்பவை.எனவே,விஜயன் ஒரு வழியாக மனதை திடப்படுத்திக் கொண்டு,

தன்  தாயிடம் விடைப் பெற்றுக் கொண்டு தன் நேசமான தமக்கையுடன்,

அவரது ஊருக்கு புறப்பட்டுச் சென்றான்.ஆனால்  தான்,தன் தமக்கையின்

ஊருக்குசென்று வர உத்தேசித்ததிலிருந்து,தான் தாயின் நடவடிக்கைகளிலோ,

தன் தமக்கையின் நடவடிக்கைகளிலோ ஒரு சுரத்தே இல்லாமலிருப்பதை

விஜயன் கவனித்தான்.அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.


     வண்டியில் ஏறி அமர்ந்ததும்,தன் தமக்கையின் முன்னிலையில்

வண்டியை செலுத்தும் முருகனிடம்," முருகா ! பெரியம்மாவும்,

சின்னம்மாவும் ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறார்கள்?உனக்கு ஏதாவது

விஷயம் தெரியுமா?" என்றுக் கேட்டான். வண்டியின் கடிவாளத்தை பிடித்து

அமர்ந்து,குதிரைகளை தட்டிக் கொடுத்து,அவற்றை பயணத்திற்கு தயார்ப்

படுத்திக் கொண்டிருந்த முருகன்,ஒரு நிமிடம் வண்டியின் உள்புறம் திரும்பி

விஜயனின் தமக்கையை பார்த்தான்.அவர் மெளனமாக அமர்ந்திருந்தார்.பின்பு

அவன் விஜயன் பக்கம் திரும்பி,"அங்கே போனபிறகு உங்களுக்கே

புரியுமுங்க ஐயா!" என்றவன்,மறுபடியும் சின்னம்மா பக்கம் திரும்பி,

"போலாங்களா அம்மா!" என்று உத்தரவு வாங்கியபின்,குதிரைகளை

பாந்தமாக தட்டி விட்டான்.


 


                                                                                                      தொடரும்...............