Wednesday, October 25, 2017

34. Thai Mann.

     தூரத்தில் கண்ட காட்சியை கண்டு துணுக்குற்ற செல்லம்மா, வேகமாக

அருகில் சென்றாள்.அங்கு தன் வயதை ஒத்த,தனக்கு தெரிந்த,தன் பாட்டி

ஊரை சேர்ந்த பெண் ஒருத்தி அரண்டு போய் நின்றிருந்தாள்.அவளும்,

செல்லம்மாவை போலவே,அருகில் இருக்கும் நகரத்தில் பட்ட படிப்பு

படித்துக் கொண்டிருக்கும் பெண்தான்.அவள் எதிரில் நவ நாகரிகமான,

வாட்டசாட்டமான வசீகரிக்கும் தோற்றத்தில் ஒரு வாலிபன் நின்று கொண்டு

இருந்தான்.நிச்சயமாக அவன் நகர் சார்ந்த வாலிபனாகத்தான் இருக்க

வேண்டும்.இல்லை என்றால் இப்படி ஒரு கிராமத்திற்குள் காலடி எடுத்து

வைத்து, கிராமத்தின் கலாச்சாரம் தெரியாமல் ,ஒரு யுவதியிடம் பேசும்

தைரியம் வந்திருக்காது.


      கலவரத்துடன் நின்று கொண்டிருந்தவளிடம்  "என்ன சித்ரா ! என்ன

விஷயம் ? " என நிதானமாக விசாரித்தாள். " வந்துட்டயா செல்லம்மா ! "

செல்லம்மாவை பார்த்ததும் நன்றாக தெளிந்து போனாள் சித்ரா. " இந்த

ஆள்  கொஞ்ச நாளா பஸ் நிறுத்தம் வரைக்கும் தொடர்ந்து வந்துகிட்டு

இருந்தான்.இப்ப என்னடானா ஊருக்குள்ளேயே வந்துட்டான் செல்லம்மா ".

" அது சரி ! அவன் எங்க வந்த என்ன ? நீ ஏன் இப்படி இருக்கே ? சக்தியின்

வடிவமடி நீ !அது புரியாமே விரைச்சு போய் நிக்கறே நீ ! ". இப்படி செல்லம்மா

சித்ராவின் சக்தியை அவளுக்கே புரிய வைக்கவும், அவள், " அதானே ! "

என்றவள்,முந்தானையை வரிந்து கட்டிக் கொண்டு திடமாய் நிலத்தில்

காலூன்றி நின்று வந்தவனை நேருக்கு நேராய் பார்த்தாள் .


     விஷயம் விபரீதமாக போவதை பார்த்ததும்,வந்த வாலிபன் பின்வாங்க

தொடங்கினான்.செல்லம்மா அவன் பக்கம் திரும்பி, " ஏண்ணே  உன்னை

பார்த்த படித்த பெரிய இடத்து புள்ளை மாதிரி இருக்கு. இப்படி நடக்கலாமா !

உங்க அம்மா,அப்பாவுக்கு தெரிஞ்சா எத்தனை விசனம்.அண்ணனுக்கு ஒரு

விஷயம் புரியலேன்னு நினைக்கறேன். புள்ளைங்கனா ,அதுவும் பெரிய

இடத்திலே பிறந்த புள்ளைங்கனா ,அம்மா,அப்பா,வீட்டு கௌரவத்துக்கு

குந்தகம் வராம நடக்க தெரியணும்.இல்லே சாதாரண குடும்பத்திலே

பிறந்துட்டோமா!  அப்போ அம்மா,அப்பா,வீட்டு கௌரவத்தை படிப்படியா

மேலே கொண்டு போக தெரியணும். இதற்கு விவரம்  தெரிஞ்ச நாள்லே

இருந்து நம்மை நாமே செதுக்கிட்டு இருக்க தெரியணும்னு எங்க பாட்டி

சொல்லிட்டே இருப்பாங்க.அண்ணனுக்கு யாரும் இதை சொல்லி தரலேயா?

அட ! இதைத்தானே அண்ணே நாம படிக்கிற படிப்பும் சொல்லி தருது ".


      " இன்னும் சொல்லப்போனா,இப்ப நமக்கு  இருக்கற உறவுகளும்,இனிமே

வரபோற உறவுகளும் நம்மை பார்த்து , " இப்படி ஒரு நல்ல உறவை 

எங்களுக்குதந்ததற்கு எங்களோட ஆயுசுக்கும் நன்றி கடவுளே ! அப்படின்னு

கடவுளுக்கு தினம்,தினம் நன்றி சொல்லிட்டிருக்கவேணாமா ? " என்ற

செல்லம்மா வந்தவனை உற்றுப் பார்த்தாள்.வந்தவன் கூனிக் குறுகி

போனான். இத்தனை விஷயங்கள் தன்னை சார்ந்து இருப்பது அவனுக்கு

இப்போதுதான் பிடிப்பட்டது..இருவரையும் பார்த்து, " ஸாரி ! எனக்கு என்னோட

அடிப்படையே என்னனு இப்பதான் புரிஞ்சது. அதை எனக்கு புரியவைச்சதுக்கு

ரொம்ப தேங்க்ஸ் ".  என்று  உண்மையை உணர்ந்து சொன்னான்.


       அதற்குள் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், " என்ன செல்லம்மா ! என்ன

விஷயம் ? என்று கேட்டுக் கொண்டு வந்தார்கள். " ஒண்ணும் இல்லே மாமா !

இந்த அண்ணண் வழி தவறி வந்துட்டாரு. இப்பதான் சரியான வழியை

காட்டினோம்.இப்ப சரியா புரிஞ்சுகிட்டு இருக்காப்பலேதான் தெரியுது ".

என்றவள்,அந்த வாலிபனிடம் , " என்ன அண்ணே ! புரிஞ்சுதில்லே ! " என்று

சாதாரணமாக கேட்டாள். அவன் நன்றியோடு தலையசைத்து விடை

பெற்றான்.


       இந்த விவரத்தை எல்லாம் மிகுந்த ஆச்சரியத்துடன் விஜயனின்

கடிதத்தில் படித்துக் கொண்டிருந்தது விஜயனின் குடும்பம்.ஆனால்,

கடிதத்தின் முடிவில், அவன் எழுதியிருந்த இன்னொரு முக்கியமான

விஷயம் என்று குறிப்பிட்டு  எழுதி இருந்த விஷயத்தை படித்ததும்

அனைவரும் அயர்ந்து போனார்கள்.






                                                                                          தொடரும்.............






Saturday, October 21, 2017

33. Thai Mann.

     காந்தி தாத்தா,செல்லம்மாவின் இயற்கையான சுபாவத்தைப் பற்றி இப்படி

பல விஷயங்கள் மூலம் தெளிவுப் படுத்தி கொண்டே வந்த போது ,

விஜயனுக்கு தன் மருமகள் மேல் இருந்த புரியாத புதிர் விடுபட்டுக் கொண்டே

வந்தது.செல்லம்மாவின் ஒரே சித்தாந்தம்,ஒன்றே ஒன்றுதான்.எல்லோரும்

ஒண்ணா இருக்கணும்;நல்லா  இருக்கணும்;இப்போதைய தொழில் நுட்ப

வளர்ச்சியில் எல்லாமே சாத்தியம்தான்.ஆனால் அதற்கு ஒரு தெளிவுப்

பெற்ற மனம் வேண்டும்.எல்லோரும், நான்,நான் என்று தன்னை தானே

பார்த்துக்  கொண்டிருப்பதில்,அறியாமைதான் மிதமிஞ்சி  நம்மை ஆட்-

-கொண்டிருக்கிறது.இதனால், நாம் எத்தனை எத்தனை அகம் ,புறம், நிதி

சந்தானங்களை  இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை யாரும் புரிந்து

கொள்ள தயாராக இல்லை. புரிந்து கொள்ள முயன்றால்தானே அந்த

சந்தானங்களை தக்க வைப்பதற்கான முயற்சியும் இருக்கும்.



         இப்போதுதான், தன் நிலையை பூரணமாக உணர்ந்து கொண்டான்

விஜயன்.தன்னை, தனக்கு உணர்த்திய  செல்லம்மாவை தன் மானசீக

குருவாக  நிறைந்த மனதுடன்  மனமாற   ஏற்றுக் கொண்டான்,

செல்லம்மாவிற்கு குருவாக இருக்க வேண்டிய செல்லம்மாவின்  தாய் 

மாமன் விஜயன்.



           அன்றும் எப்போதும் போல விஜயனிடமிருந்து வந்திருந்த கடிதத்தை

அயல் மண்ணில், விஜயனின் குடும்பம் மிகுந்த ஆவலுடன் படித்துக்

கொண்டிருந்தது. செல்லம்மாவை பற்றிய விஜயனின் மனநிலையே

அவர்களுக்கும் பற்றிக் கொண்டிருந்தது.பரிசுத்தமான மனதின் விவேகம்,

உலகின் எந்த பகுதியையும் ஸ்பரிசிக்கும் சக்தி உடையது. அந்த சக்தியை

விஜயனின் கடிதத்தை ஸ்பரிசிக்கும்போதே விஜயனின் மொத்த குடும்பமும்

பூரணமாக உணர்ந்தது.



          அன்று வந்த கடிதத்தில்,செல்லம்மா சம்பந்தபட்ட இன்னொரு

நிகழ்ச்சியைபற்றிய  விவரணம் இருந்தது. அன்று எப்போதும் போல ஒரு

மாலை நேரத்தில்தன் வேலைகளை எல்லாம் தன் இடத்தில் முடித்து விட்டு

தன் பாட்டிவீட்டுக்கு  வந்து கொண்டிருந்தாள் செல்லம்மா. வயல் வரப்புகளின்

மேல் நடந்து வந்துகொண்டே,தன் பாட்டி ஊரின் பரந்த வயல் பரப்புகளை

பாசத்தோடு பார்த்துரசித்தபடி வந்து கொண்டிருந்தாள்.மாலை நேரகதிரவனின்

செந்நிறஒளியிலும்,அதன் கதகதப்பிலும்,பயிர்கள் எல்லாம் ஆனந்தமாக

நடனமாடிகொண்டிருந்தன. செல்லம்மாவிற்கு விவசாயம் என்றால்உயிர்.தன்

ஊரிலும்  சரி, தன் பாட்டி ஊரிலும் சரி, விவசாய வேலைகளிலும்,அறுவடை

சமயங்களிலும்,சமயத்திற்கு ஏற்றவாறு,இரு ஊரார்க்கும் ஒரு கை

கொடுப்பாள்.படுக்கை ஆகி விட்டவர்களையும்,தவழும் குழந்தைகளையும்

தவிர ஒருவருமே வெறுமனே சுற்றிக் கொண்டிருக்கக் கூடாது.அவர்கள்

எப்பேர்ப்பட்ட உத்தியோகத்தில் இருந்தாலும் சரி;ஏதாவது ஒரு விதத்தில்

விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.இது செல்லம்மாவின்

எழுத படாத ஆணித்தரமான சட்டம்.


      இதற்கு அவள் வைக்கும் வாதம்,"என்னென்னவோ குறையுடன் மக்கள்

பிறக்கிறார்கள்.ஆனால் வயிறு இல்லை என்ற குறையுடன் பிறக்கிறார்களா ?

வாழ்க்கையை,ஆண்டு அனுபவித்து வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற

உத்வேகத்தை தருவதே வயிறுதானே ! எண்சாண்  உடம்புக்கு வயிறுதானே

பிரதானம்;அதனால் அவரவர் வயிற்றுக்கு ஏதாவது ஒரு விதத்தில்

விவசாயத்திற்கு  உறுதுணையாக இருப்பது ஒவ்வொருவரின் தார்மீக

கடமையாகும் " என்பது  அவளது அசைக்க முடியாத வேரூன்றிய எண்ணம்.


          இப்படிப்பட்ட செல்லம்மா விவசாயத்தை எப்படி நேசிக்கிறாள்  என்பது

உள்ளங்கை நெல்லிக்கனியாய் இரு ஊரார்க்கும் தெளிவாய் புரிந்த விஷயம் .

சுற்றும்முற்றும் பார்த்தபடி வயல்களின் அழகை ரசித்தபடி வந்து கொண்டு

இருந்தவள்,  தூரத்தில் ஒரு காட்சியை கண்டுத் துணுக்குற்றாள்.






                                                                                                     தொடரும்.................  

Sunday, October 15, 2017

31.. Thai Mann.

      செல்லம்மாவை பார்த்ததும்,திரு.குள்ளமணிக்கு முதலில் ஒன்றுமே

புரியவில்லை.ஆனாலும்., " வா !வா! செல்லம்மா ! நீ இந்த அண்ணனை

மறந்து ரொம்ப நாளாயிடுச்சேன்னு ரொம்ப வருத்தப்பட்டேன்.இப்பதான் வழி

தெரிஞ்சதாக்கும் ".என்று வாஞ்சையுடன் வரவேற்றான்.அதைக் கேட்டதும்,

தன் நெற்றியை தட்டியபடி செல்லம்மா, " அடக் கடவுளே ! நான் ஏன்

வரலேன்னு உன் புள்ளைக்கு தெரிஞ்ச விஷயம்கூட உனக்கு தெரியலயே !

இதுலே வேற,என்னோட ஆண்டு அனுபவிச்சிட்டிருக்கும், பெரியப்பாவுக்கும்,

பெரியம்மாவுக்கும் தலைச்சன் புள்ளையா வேற வந்து பொறந்திருக்கே

!"மனதிற்குள் மிகவும் அங்கலாய்த்து போனாள் செல்லம்மா.


     அதைக் கேட்டதும்,திடுக்கிட்டுப் போன திரு.குள்ளமணி, " என்ன

செல்லம்மா ! அப்ப இதுநாள் வரைக்கும்  ஏதோ ஒரு காரணத்தோடுதான்

வரமே இருந்தாயாக்கும்.ஏன் ? என்னாச்சு ?.என்று பதற்றத்தோடு கேட்டான்.

இனிமேல் தன் பருப்பு வேகாது என்று தெள்ளென புரிந்தது குள்ளமணிக்கு.

உள்ளே ஏதோ வேலை இருப்பது போல நழுவ பார்த்தாள். அதற்கு இடம்

தராமல் " என்ன அண்ணி !செய்ய கூடாததெல்லாம் செஞ்சு வச்சுட்டு,இப்ப

நழுவ பார்த்தா எப்படி ?  நம்ப ரெண்டு பேருக்கு நடுவுல இருக்கற இந்த

பஞ்சாயத்தை அண்ணனில்லே தீர்த்து வைக்கணும் ".குள்ளமணியின்

முகம் முழுவதுமாக இருண்டு போனது.


     தன் மனைவியின் முகம் போன போக்கைப் பார்த்துத் திடுக்கிட்டு போனான்

திரு.குள்ளமணி.செல்லம்மாவை பார்த்து , " ஏன் செல்லம்மா ! என்னாச்சு ? "

என்று மிகவும் பதற்றத்தோடு வினவினான்.செல்லம்மா " அண்ணன்கிட்டே

இப்படி ஒரு பிரச்சனையோடு வந்து முகம் பார்த்து பேச வேண்டியதா

ஆயிடுச்சேன்னு மிகவும் வருத்தத்தோடு வந்திருக்கேன் அண்ணே !ஆனாலும்

வேற வழியில்லை; பேசித்தான் ஆகணும் ". திரு. குள்ளமணிக்கு விஷயம்

பெரிய விவகாரமான விஷயம் என்று புரிந்து போயிற்று.


       எதுவும் பேசாமல் செல்லம்மாவை உற்றுப் பார்த்தான்.செல்லம்மா

தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு தொடர்ந்தாள். " அண்ணே ! தலைச்சன்

சம்சாரம் தாய்க்கு சமானம் அப்படிங்கற அர்த்தத்தை  நினைச்சு பாக்கறியா ".

கேட்டுவிட்டு திரு.குள்ளமணியை உற்றுப் பார்த்தாள் செல்லம்மா.எந்த

பதிலும் வரவில்லை. ஆனால்,திரு.குள்ளமணி இன்னும் உன்னிப்பாக

கவனிப்பது புரிந்தது. " அப்படின்னா, தலைச்சனா பொறந்திருக்கிறவன்

தந்தையா இருக்கணும்னுதானே அர்த்தம்.அப்படி அண்ணன் இருந்திருந்தா,

இப்படி ஒரு அனர்த்தம் நடந்திருக்குமா ? பெத்தவங்களையும்,கூட பிறந்த-

-வங்களையும் ஒரு கண்ணாவும், வாழ வந்தவளையும்,புள்ளை குட்டி-

-களையும் ஒரு கண்ணாவும்,பார்த்து நிக்கற,காத்து நிக்கற பக்குவம் வர

வேணாமா !.அப்படி இல்லாததனாலேதானே அண்ணி உங்க வீட்டு குருவிக்

கூட்டையும் கலைத்து விட்டு ,எங்க வீட்டு குருவிக் குருவிக் கூட்டையும்

கலைக்க பார்க்குறாங்க.நாம ஒண்ணா இருக்கணும்,நல்லா இருக்கணும்னு

யார் சொன்னாலும் நல்லா கேட்டு நடக்கணும்தானே அண்ணே ! ஏன்னா!

ஒண்ணா இருந்தாதானே நல்லா இருக்க முடியும். நல்லா இருக்கணும்னா

ஒண்ணா இருந்தாதானே அண்ணே முடியும்.அது புரியாமே,இப்படி எதிலுமே

கருத்தே இல்லாமே கண்ணு போன வழியிலும்,கால் போன வழியிலும்

போயிட்டு இருந்தா,குடும்பம்ன்ற கோயிலே சிதிலமாயிடாதா ? இப்படி

எல்லாம்அ ண்ணி என்னை பேச வச்சிட்டாங்களேன்னு எனக்கு ரொம்ப

வருத்தம் அண்ணே !"


      சொல்ல வேண்டியதை எல்லாம் ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள்

செல்லம்மா.இத்தனையும் கேட்டுக் கொண்டிருந்த திரு.குள்ளமணி,

செல்லம்மாவிற்கு எதிரில் வந்து நின்றான். " நெகிழ்ந்த குரலில் ," தாயீ !

இதில் உன் அண்ணியை குறை சொல்ல  எதுவும் இல்லை;அவளுக்கு

தெரிந்தது அவ்வளவுதான்;பக்குவப்படாத அவளது அறிவை நான்

நம்பினதுதான் பெரிய குற்றம். இனிமே நான் தலைச்சன் புள்ளையா,

தந்தைக்கு சமானமா நடப்பேன்.உன் அண்ணியும்,எனக்கு தோள்  தந்து

அவளும் தாயாக இருக்க அரவணைத்து செல்வேன்.என் கண்ணை திறந்த

காளியாத்தா தாயி நீ ". நெக்குருகி போனான் திரு.குள்ளமணி.விக்கித்து

போய் நின்றிருந்தாள் வெறும் குள்ளமணி.






                                                                                  தொடரும்...............

Saturday, October 14, 2017

32.Thai Mann.

       செல்லம்மா எதிர்பார்த்தபடியே அடுத்த ஒரு வாரத்தில் அந்த சினிமா

பைத்தியம் குள்ளமணியின் குடும்பம்,அதன் ஆணி வேரோடு ஐக்கியமானது.

காரணம்,வேறென்னாவாக இருக்க முடியும்?.குள்ளமணியின் கணவன்,மிக

பிரகாசமாகத் தெளிந்ததால்,எல்லா விஷயங்களும்,மிக எளிதாக,மிக நலமாக

மிக நன்றாகவே முடிந்தது.சான்றோர்கள் காலங்லகாமாக நமக்கு  திரும்பத்

திரும்ப அறிவுறுத்துவது என்ன?. அறியாமைதான் சகல துன்பங்களுக்கும்

காரணம் என்றுதானே!.அது எந்த வகை அறியாமையாக இருந்தாலும்,அந்த

அறியாமை நம்மிடம் இருக்கும்வரை, நமக்கு நாமேதான் பலதரப்பட்ட

இன்னல்களை வரவழைத்துக் கொண்டிருக்கிறோம் என்பது நிதர்சனத்திலும்

நிதர்சனம்.அது அந்த குள்ளமணியின் கணவனுக்கு மிக தெளிவாகவேப்

புரிந்தது.தெளிவின் வெளிச்சத்தில் அவன் தன் தவறை திருத்திக் கொள்வதில்

இன்னும் தெளிவானான்.


     அந்த திரு.குள்ளமணி தன் குடும்பத்துடன் ஆதர்சத்துடன் ஐக்கியமான

அந்த நல்ல நாளுக்கு பின், ஒரு நல்ல மனிதரின் மரியாதையை மதிக்க

தெரியாமல்  அவரது மரியாதைக்கு பங்கம் ஏற்படுத்த  இருந்த அவரது

வாரிசை சந்திக்க சமயம் பார்த்துக் காத்திருந்தான்.அது வேறு யாரும்

இல்லை.செல்லம்மாவின் இரண்டாவது அண்ணன்தான்.அதற்கு சரியான

ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது.அன்று பக்கத்து ஊரில் மாதம் ஒரு முறை

நடக்கும் பெரிய சந்தைக்கு இருவரும் ஒன்றாக போகும் வாய்ப்பை

திரு.குள்ளமணி ஏற்படுத்திக் கொண்டான்.செல்லம்மாவின் தமையனும்

அதற்காகத்தான் காத்திருந்தவன் போல இவனுடன் சேர்ந்து கொண்டான்.


      ஊரை விட்டு சிறிது தூரம் சென்றதும்,இருவரும் மனம் விட்டு பேசத்

துவங்கினர்.திரு.குள்ளமணி எப்படி விஷயத்தை ஆரம்பிப்பது என்று

ஆராய்வதற்குள்,செல்லம்மாவின் தமையன் நிதானமாக ஆரம்பித்தான்.

" அண்ணே ! நீங்க திரும்பவும் ஒண்ணுக்குள்ளே ஒண்ணு ஆனதிலே எனக்கு

ரொம்ப சந்தோஷம் அண்ணே !.அதற்கு என் தங்கச்சி செல்லம்மாதான்

காரணம்னு எனக்கு நல்லாவே தெரியும்.என் தங்கச்சிக்கு  எல்லாருக்கும் ,

எல்லாத்தையும் தெளிவாக்கற ஒரு பெரிய சக்தி இருக்கண்ணே !எங்க

வீ ட்டு உசுரே அவதான்னு எனக்கு இப்பத்தாண்ணே தெளிவாச்சு.அவ எங்க

வீட்டல வந்து பொறந்ததுக்கு நாங்க எல்லோரும்  ஏதோ பெரிய புண்ணியம்

 பண்ணியிருக்கோம்னு தோணுது அண்ணே ! ".


      " ஆமா தம்பி ! நிச்சயமா நீங்க எல்லோரும் பெரிய புண்ணியம்தான்

பண்ணியிருக்கணும்.எனக்கு என்ன தோணுதுன்னா,நீங்க மட்டுமில்லை தம்பி

! நம்ப  ஊரே ஏதோ பெரிய புண்ணியம் பண்ணியிருக்கணும்.இல்லேன்னா

நம்ப ஊருக்கே இப்படி ஒரு ஐயனாரு பொண்ணு மாதிரி பொறந்திருப்பாளா !

என்ன விவேகமான விவரம்:அவ முன்னாடி எனக்கு நானே ஒரு தூசி

மாதிரிதான் தெரியறேம்பா.இப்படி வெவரம் கெட்டு போய்

நின்னிருக்கோமேன்னு  ரொம்பவே விசனம் பட்டு போனேன் தம்பி !".

திரு.குள்ளமணியின் குரலில் உண்மையான வருத்தம் மேலோங்கியிருந்தது.

" ஆனாலும் தம்பி !செல்லம்மா சொன்னதற்கு அப்புறம்,என் வீட்டுக்காரி

எம்புட்டு பெரிய ஈனக் காரியம் பண்ண இருந்தாள்னு தெரிஞ்சதும் ஆடி

போய்ட்டேன் ! நீயும் என்னை மாதிரி விவரம் புரியாமே நிலை

தடுமாறிட போறியோனு ரொம்பவே கலங்கி போய்ட்டேன்.அப்புறம் உங்க

அப்பா முகத்தை என்னாலே  ஏறிட்டுதான் பாக்க முடியுமா சொல்லு.

அதனாலேதான் உன்னை எச்சரிக்கலாம்னுதான் அதற்கான சந்தர்ப்பத்தை

எதிர்பார்த்துக்கிட்டு இருந்தேன்.இப்பதான் அதற்கான சந்தர்ப்பம் கிடைச்சது.

ஆனால் அதற்கு தேவையே இல்லாமே நீ ரொம்பவே தெளிவா இருக்கே.

எனக்கு இப்பதான் போன உயிர் திரும்பிடுச்சுன்னு வச்சுக்கோயேன் ".


   " அண்ணே ! நீங்க வேறே ! என் வீட்டுக்காரி பேச்சுக் கேட்டு எம்மனசும்

ஒரு நிமிஷம் நிலை தடுமாறித்தான் போச்சு.ஆனா சமயத்திலே எங்க

செல்லம்மா என்னை கடுமையா எச்சரித்தாளோ! ,நான் முழிச்சிகிட்டேனோ!

போதுமடா சாமி ! நா மட்டும் என் வீட்டுக்காரி பேச்சை கேட்டு ஏதாவது எக்கு

தப்பா நடந்திருந்தேனா !,அந்த நினைப்பே சித்திரவதையடா சாமி! ".


   
            அந்த சித்திரவதையைத்தானே  திரு.குள்ளமணி மிக நன்றாகவே

அனுபவித்திருந்தான்.அந்த சித்திரவதையின் தாக்கம் , அந்த தாக்கத்தின்

 ஆழம் ,அவனுக்கு அவன் காலத்திற்கும் போதுமானதாக இருந்தது.

ஆனால் அந்த வலியிலும் ,வழி தவறி போய் விட்டோம் என்பது கூட

தெரியாமல் மேலும்,மேலும் தன் வழியை சிக்கலில் சிக்க வைத்துக்

கொண்டிருந்த அவனுக்கு  செல்லம்மா சரியான பாதையின் சரியான

புள்ளியை  மனதில் பதிய விட்டது ஒரு பெரிய பாக்கியமாக அமைந்து

போனது.இல்லை என்றால் அவன் இழக்க போகின்ற பாக்கியங்கள்

கொஞ்சமா ? நஞ்சமா ? அவன் அந்த வலியையும்,அந்த வலிக்கு ஒத்தடமாக

செல்லம்மா தந்த இதத்தையும் செல்லம்மா  வீட்டு  ஜீவனுடன் பகிர்ந்து

கொண்டான்.பகிர்தலில்தானே சகல சந்தானங்களும் வரிசை கட்டி

நிற்கும்.








               
                                                                                    தொடரும்......................


Thursday, October 12, 2017

30.Thai Mann.

     செல்லம்மாவிற்கு இந்த சின்ன அண்ணனின் இந்த விஷயத்தை இப்படியே

விடுவது சரியாக படவில்லை.எய்தவள் இருக்க அம்பை நோவதில் எந்த

பயனும் இல்லை.நேராக அம்பை எய்தவளிடம் சென்றாள்.


     செல்லாம்மாவை சிறிதும் எதிர்பார்க்காத அந்த அம்பு  எய்த அம்மணி என்ன

சொல்வது அல்லது என்னதான் செய்வது என்று எதுவும் புரியாமல்

வெலவெலத்து போய் நின்றிருந்தாள். தான் எய்த அம்பு ஒரு பெரிய

விவகாரமாக உருவெடுத்து நிற்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்து போயிற்று.

ஆனாலும்,தன்னை உலுக்கிக் எடுத்துக் கொண்டிருக்கும் தன் உதறலைக்

கூடிய மட்டும் மறைத்தவாறு செல்லம்மாவை வாயார வரவேற்றாள்.


     " என்ன  செல்லம்மா! இப்பதான் இந்த அண்ணன்,அண்ணி ஞாபகம்

வந்ததாக்கும்;எங்க வீட்டு பக்கமெல்லாம் வர உனக்கு எங்கே நேரமிருக்கும்

சொல்லு?".குத்தலாக கேட்டாள் குள்ளமணி அண்ணி.அவள் சற்றுக்

குள்ளமாக இருப்பதால் ஊரில் எல்லோரும் அவளை அப்படித்தான்

அழைப்பார்கள்.


      "ஆமா அண்ணி!   உங்க    வீட்டுக்கெல்லாம் வர எனக்கு நேரமே

இல்லைதான்; ஆனாலும்,நான் இங்கு வர ,நேரம் கண்டு பிடிச்சு வர மாதிரி

பண்ணிட்டிங்களே! சும்மா சொல்ல கூடாது;நீங்க பெரிய ஆளுதான்!"

பதிலுக்கு செல்லம்மாவும் குள்ளமணி அண்ணியை குதறினாள் .அந்த

குதறலில் குள்ளமணி  அண்ணி குன்றிதான் போனாள்.


      இவர்களது உரையாடல் சத்தம் கேட்டு,உள்ளிருந்து வெளியே வந்த

குள்ளமணியின் கணவனும், அவனது மூன்று குழந்தைகளும், வந்த

விருந்தாளி யார்? என பார்த்தவர்கள்,செல்லம்மாவை பார்த்ததும்

வியந்துதான் போனார்கள்.அவர்களில் மூத்தவன் பதினோராம் வகுப்பில்

அடி எடுத்து வைத்துள்ளான்.அவனுக்கும் எல்லோரையும் போலவே

செல்லம்மாவை மிகவும் பிடிக்கும்.ஆனால்,தன் அம்மாவின் பேச்சைக்

கேட்டு த் தன் அப்பா தனிக் குடித்தனம் வந்ததிலிருந்து,அவனுக்கு

செல்லம்மாவை  தொலைவில் கண்டாலே தன் வழித் தடத்தை மாற்றி

விடுவான்.செல்லம்மாவும்,இந்த அளவிற்காவது பையன் தெளிவாக

இருக்கிறானே என்று அவனை எதுவும் சொல்வதில்லை.தனக்கு அண்ணன்

முறையாகும் அவனது அப்பனுக்கே புத்தி வேலை செய்யாத போது இந்த

பிஞ்சை நொந்துக் கொள்வதில் என்ன பயன்? ஆனால்  இன்று வேறு

வழியில்லை.எல்லோரையும் ஒரு கை பார்த்து விட வேண்டியதுதான்.

செல்லம்மா,அவர்கள் எல்லோரையும் தீர்க்கமாக ஏறிட்டு பார்த்தாள்.


      அந்த பார்வையின் தீட்சணயத்தை தாங்க முடியாமல்,அண்ணன்தான்

முதலில் வாய் திறந்தார். " என்ன செல்லம்மா ! இந்த பக்கம்?நான் இந்த

வீட்டுக்கு வந்து வருஷம் இரண்டாவுது.வந்து எட்டி பாக்கவேயில்லையே ?

அந்த வீட்டிலே இருக்குறப்போ அண்ணே!அண்ணே!னு உங்க

அண்ணன்களுக்கு சமமா எங்கிட்டே பரிவு காட்டுவே ;இப்ப என்னாச்சு?

வரதேயில்லேயே ?."அண்ணன் வாஞ்சையுடன் விசாரித்தார்.


     " அடக்  கடவுளே! இந்த அண்ணன் இப்படியா அப்பிராணியா இருக்கணும்?"

செல்லம்மா ஒரு நொடி அயர்ந்து போனாள் .சரி அது அவர் பிரச்சனை.அதை

அவரே புரிந்துக் கொண்டு சரி செய்தால்தான்  உண்டு. நாம  இப்ப

விஷயத்திற்கு  வருவோம் என்று தீர்மானித்த செல்லம்மா ," அது சரி!நீ

எங்க நான் வரமாதிரி வச்சிருக்கே அண்ணே? "என்றாள்.அந்த குரலில்

அத்தனை கசப்பு. திடுக்கிட்டுப் போன அந்த அண்ணன்,பதறிப் போய் மேலும்

விசாரிக்கலானான் .





                                                                               தொடரும்............


   


Monday, October 9, 2017

29,Thai Mann.

       செல்லாம்மா என்றும் போல அன்றும் கொட்டடியில் பசுக்களுக்கான

பணிகளில் ஆத்மார்த்தமாக ஈடுப்பட்டிருந்தாள்.அப்பொழுது, அவளது சின்ன

அண்ணனும்,அண்ணியும் சுற்றும் முற்றும் பார்த்தபடி தயங்கி,தயங்கி

செல்லம்மாவிடம் வந்தார்கள்.அவர்களது பாவனைகள் யாவும் ரசிக்கத்

தக்கதாக  செல்லம்மாவுக்கு தோன்றவில்லை.அவர்களை ஏறிட்டுப் பார்த்து

விட்டுத் தன வேலையத் தொடர்ந்தாள்.


      முதலில் அண்ணிதான் பேச்சை மிகவும் தயக்கத்துடன் ஆரம்பித்தாள்.

" செல்லம்மா!உங்கிட்டே ஒண்ணு கேட்கலாம்னு வந்திருக்கோம்;உனக்கு

சரின்னு பட்டது அப்படின்னா,வீட்டிலே பெரியவங்க கிட்ட பேசி எங்களுக்கு

ஒரு நல்ல முடிவா சொல்லு" என்றவள் ஒரு பயம் கலந்த தயக்கத்துடன்

செல்லாம்மாவை ஏறிட்டு பார்த்தாள்.செல்லம்மா அண்ணியை உற்றுப்

பார்த்ததும் சின்ன அண்ணிக்கு உதறல் எடுப்பது வெளிப்படையாகவே

தெரிந்தது.செல்லம்மாவிற்கு அவர்களது இந்த அணுகுமுறை சரியாகவே

படவில்லை.அவளுள் ஒரு எச்சரிக்கை மணி ஒலித்திருக்க வேண்டும்.

நன்றாக திரும்பி தன் சின்ன அண்ணியை உற்றுப் பார்த்தாள் செல்லம்மா.

அவள் நின்ற தோரணையே வந்த இருவரின் வயிற்றிலும் புளியைக்

கரைத்தது.ஒரு நிமிடம் எதுவும் பேசாமல் திரும்பி விடலாமா என்று அவர்கள்

யோசிப்பது நன்றாகவே புரிந்தது.


      " சின்ன அண்ணனும்,அண்ணியும் சேர்ந்து வந்திருக்கிறதை பார்த்தால்

வந்த விஷயம் பெரிய விஷயம் போலத்தான் இருக்கிறது.ம்ம்... விஷயம்

என்னன்னு சொல்லுங்க! "செல்லம்மா ஆரம்பித்து வைத்தாள்.சின்ன

அண்ணன் எதுவும் பேசவில்லை.ஆனால் அண்ணி சிறிது தைரியம்

பெற்றவளாய் சற்று முன்வந்து செல்லம்மாவின் கைப்பற்றி," அதில்லை

செல்லம்மா! அண்ணன் இனியும்,அப்பா கீழேயே எல்லா வேலையையும்

பார்த்துட்டிருந்தா அவருக்கும் எப்போது பொறுப்பு வரும் சொல்லு?அதான்

எங்களுக்குனு கொஞ்சம் நிலபுலன்களையும்,அந்த தோட்டத்து வீட்டையும்

வீட்ல பெரியவங்ககிட்டே பேசி வாங்கி ..."அண்ணி முடிக்கவில்லை

செல்லம்மா இடைமறித்து " கொடுத்துட்டா என் அண்ணன் உங்களுக்கு

கீழே பொறுப்பா தினம்,தினம் சினிமா பாக்குற வேலை செய்வாரு

அப்படித்தானே ! என்ன இது ?அந்த சினிமா பைத்தியம் குள்ள மணியோட

யோசனையாக்கும் ? ".சீறினாள் செல்லம்மா.அந்த சீற்றம்  வந்த இருவரையும்

வாயடைக்க வைத்தது.மேலே எதுவும் பேசாமல் செல்லம்மாவை விக்கித்து

பார்த்தவாறு நின்று கொண்டிருந்தார்கள்.


     செல்லம்மா வேறொன்றும் சொல்லவில்லை;தன் அண்ணிக்கு பின்னால்

நின்று கொண்டிருந்த தன் அண்ணனின் கையைப் பற்றி சற்று முன்னால்

இழுத்து அவன் முகம் பார்த்து  மிகத் தெளிவாக பேசினாள்." ஏண்ணே! ஒரு

பொண்ணு புகுந்த வீட்ல ஒரு நல்ல பெண்டாட்டியா எல்லா விதத்திலும்

புருஷனுக்கு பின்பலமா  நிக்கணும்;  முன்னாலே புருஷன் நின்னு கம்பீரமா

வேலை பாக்கணும்: பிறந்த வீட்ல பொண்ணு கம்பீரமா வலம் வரணும்;

அதற்கு  அவள் புருஷன் அவளுக்கு எல்லா விதத்திலும்  பின்பலமா

நிக்கணும்ணு நீ அண்ணிக்கு புரிய வைக்கலேயா? ".அண்ணன் எதுவும்

பேசவில்லை;அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். " அது சரி! உனக்கு அது

புரிஞ்சிருந்தாதானே நீ அண்ணிக்கு புரிய வைச்சிருப்பே! அதை நம்ப

அப்பா,அம்மாவையும்,நம்ப பெரிய அண்ணன்அண்ணியையும் பார்த்து

கத்துக்கிட்டிருக்க வேண்டாமா? எல்லார்கிட்டயும்இருக்குற

மாதிரி அறிவு,அறிவுன்னு  ஒண்ணு உங்கிட்டேயும் இருக்குணும்-

-தானே! அது கூட உனக்கு சரியான சகவாசம் உண்டா? இருந்திருந்தா அது

தப்பே பண்ணாதே;உன்னை சரியான வழியிலே இல்ல கூட்டிட்டு

போயிருக்கும்?".


          அந்த சின்ன அண்ணனுக்கு தன் எதிரில் நிற்கும் தங்கை,

தங்கையாக தெரியவில்லை.தாயாகத் தெரிந்தாள்.அவளது சாடலின் உச்சம்

அவளுக்கு தன்மேல் உள்ள அக்கறையின் உச்சிப்படி என்பது தெரிந்தது.இது

வரை செயலற்று இருந்த அவனது அறிவின் ஊற்றுக்கண் திறந்து

வெள்ளமாய்  பெருக்கெடுத்து ஓடியது.அது அவனது கண்களில் நிதர்சனமாக

தெரிந்தது.


         அதன் பிறகு அவன் வேறொன்றும் பேசவில்லை,திரும்பி மனைவியை

பார்த்தான்.திரும்பி தங்கையை பார்த்தான்.தன் அன்புத் தங்கையின்  முகத்தை

தன்  இரு கைகளால் ஒரு மலரை தாங்குவது போல தாங்கி கண்மூடி  உச்சி-

-முகர்ந்தான்.தன் மனைவி பின் தொடர அவ்விடம் விட்டு அகன்றான்.




                                                                                                   
                                                                                                         தொடரும்...........




Sunday, October 8, 2017

28.Thai Mann.

          வீடு வந்து சேர்ந்த பின்னும்,விஜயனால் தன்னை ஆசுவாசப்படுத்திக்

கொள்ள முடியவில்லை.காந்தி சித்தப்பா, செல்லாம்மாவை பற்றி

சொன்னதை எல்லாம் பிரமிப்போடு அசை போட்டுக் கொண்டிருந்தான்.அவர்

சொன்னமுதல் சம்பவம்:


           மாலை நேரம்.செல்லம்மா தன் பாட்டி வீட்டுக்கு கிளம்புவதற்கு

முன்னால் வீட்டிற்கு பின்புறம் அமைந்திருக்கும் கொட்டடியில் மாடுகளுக்கு

வைக்கோல் போட்டு தண்ணிக் காட்டி விட்டு எப்பொழுதும் போன்றே

அவைகளுடன் விடைபெறும்  பாவனையில்அவைகளை முதுகிலும்,கழுத்துப்

பகுதியிலும் ,முகத்திலும் வாஞ்சையாக தடவிக் கொண்டு பேசலானாள்.


         எல்லோருக்கும் மூத்ததாக இருக்கும் பசுவிடம், "சரி லட்சுமி ! நான்

ஆத்தாவை  பார்க்க கிளம்புறேன்.எல்லோருக்கு வயிறும் ,மனசும்

நிரம்பியிருக்கும்னு நம்பறேன்". மற்ற பசுக்களைக் காட்டி" எல்லோரையும்

பத்திரமா பார்த்துக்கோ என்ன! " என்றாள்.அந்த லட்சுமி பசுவும் புரிந்துக்

கொண்டதை  போல நன்றாகவே தலையாட்டியது.ஏனென்றால்,அதற்கும்,

மற்ற பசுக்களுக்கும் செல்லம்மா என்றால் உயிர்;உயிர் என்றால் அது

செல்லம்மா.


       செல்லம்மாவின் அம்மாகூட செல்லம்மாவை செல்லமாக திட்டிக்

கொண்டு இருந்தாள் ."ஏன் செல்லம்மா! நீ எங்களை யாரையும் கொட்டடி

பக்கமே விடாமெ நீயே எல்லாவற்றையும் பாத்துக்கிட்டா சரிப்படுமா!

நாளைக்கு நீ கல்யாணமாகி போன பிறகு,உனக்காக இவை ஏங்கி படுத்துடும்

செல்லம்மா!எனக்கு ரொம்பவே பயமா இருக்கு". "நீ ஏம்மா பயப்படறே?நான்

இதோ பக்கத்தில் இருக்கும் ஆத்தா  ஊரிலேதானே வாழ்க்கைப்படப்

போறேன்;நானே தினமும் வந்து கவனிச்சுக்கிறேன்.நீ எதற்கும் கவலைப்

படாமே வேலையை பாரு ".இது செல்லாம்மாவின் பதில்.மிகவும்

தெளிவானஉறுதியான பதில்.அம்மா அசந்து போவாள்.


      செல்லம்மாவின் பதிலில் தெரியும் தெளிவையும்,உறுதியையும் பார்த்து,

அம்மா ஆரம்பத்த்தில் சிறிது குழப்பத்துடன் கேட்டார் , "ஏன் செல்லம்மா!

ஆத்தா  ஊரிலே,உனக்கு யாரையாவது மனசுக்கு பிடிச்சிருக்கா? உன் கல்யாண

விஷயத்திலே இவ்வளவு உறுதியா இருக்கே!"."என்னம்மா பேசறே! வீட்டிலே

இத்தனை பேரு இருந்துட்டு எனக்கு பிடிச்சவனை நான்தான் பார்க்கணு-

-மாக்கும்! நல்ல கதையா இருக்கே! ". " அதில்லே  செல்லம்மா!ஆத்தா

ஊரிலேதான் வாழ்க்கை படுவேன் இவ்வளவு உறுதியா சொல்றியே!அதான்

கேட்டேன் ". அம்மா கேட்டு வாய் மூடவில்லை.காட்டமாக பதில் வந்தது

செல்லாம்மாவிடமிருந்து.



      " உன் உடன் பிறப்புக்கு தன் அம்மான்னு தோணி  இருந்திருந்தா  நான் ஏன்

அந்த ஊரிலேதான் வாழ்க்கை படணும்னு  இப்படி கிடந்து அல்லாடறேன்.

உன் உடன் பிறப்புக்கு அப்படியே வானத்திலிருந்து குதிச்சிட்டாத நினைப்பு.

அப்படியே குதிச்சுட்டு இருக்கும்போதே வளர்ந்து, படிச்சு முடிச்சு,  வேறே

மண்ணிலே வேலைக்கு போயிடுச்சு போல! பெத்த தாயை, தாய்மண்ணை ,

சொந்தபந்தத்தை, தன கடமையை  எல்லாத்தையும் குழி தோண்டி

புதைச்சுட்டு  பறந்து போயாச்சு. நன்றி கெட்ட ஜென்மம்! ".செல்லம்மாவின்

காட்டமான பதிலில் அவளது அம்மா உறைந்து போனாள்.அது மட்டும்

அல்ல.அந்த பதிலில்,  செல்லம்மா  தன் பாட்டியின் மேல் கொண்டிருக்கும்

நிதர்சனமான அன்பின்  ஆழமும், அந்த ஆழமான அன்பின்  வெளிப்பாடான

 ஒரு நித்ய பூரண கரிசனமும்  தெளிந்த நீரோடையாய் தெளிவாகி போனது

அவள் அம்மாவுக்கு. ஒரு ஆழ்ந்த பெருமூச்சுடன் அவ்விடம் விட்டு

 நகர்ந்தாள்.



         முதல் சம்பவத்தை அசை போடும்போதே விஜயன் அயர்ந்து போனான்.

எல்லாமே குடும்பத்திலிருந்துதான் அதாவது வீட்டிலிருந்துதான் ஆரம்பம்

என்பது எவ்வளவு எதார்த்தமான,நிதர்சனமான உண்மை.அதில் முதல்

ஆரம்பமாக இருக்க வேண்டியது உறவுகளின் உணர்தல்தான் என்று

விஜயனுக்குத் தோன்றியது.உறவுகளை உணரும்போதுதான் அந்த

உறவுகளின் தொடர்புகள் நைந்து போக விடாமல் பேண முயற்சிப்போம்.

அதன் காரணமாக நம் அருமையான உறவுகளின் தொடர்புகளை அழகான 

தொடர்கதையாக்க  விடாமல்  முளைக்கும் இடையூறுகளை  லாவகமாக

களையும் ஒரு நிதானமும், நேர்த்தியும்  நம்முள்  ஒன்றாக கைகோர்த்து,நம் 

உறவுகளை நிலைத்து செழிக்கச் செய்யும்.செல்லம்மாவிடம் அந்த 

உறவுகளின் உணர்தல் அவளுள் பொக்கிஷமாக நிரம்பியிருப்பது விஜயனுக்கு

தெள்ளத் தெளிவாக புரிந்து போனது.அதன் மூலம் உறவுகளை

மேம்படுத்துதலின் உன்னதத்தை ஆழமாக புரிந்து கொண்டான்.


       
       அடுத்த சம்பவத்தை அசை போடும் முன் தன்னை திடப் படுத்திக்

கொண்டான் விஜயன்.





                                                                                                   தொடரும்..............



         

Thursday, October 5, 2017

27.Thai Mann.

     வானில் நிலவும்,காந்தி சித்தப்பா சொன்னதை ஆமோதிப்பது போல மிக

வசீகரமான புன்னகையை சிந்தியபடி தன் பயணத்தை தொடர்ந்து கொண்டு

இருந்தது.வாய்க்கால் வந்து சேர்ந்தனர் இருவரும்."தம்பி! முன்னெல்லாம் "

இப்படி முறை வச்சு வாய்க்கால் திருப்பி விடற வேலை எல்லாம் இல்லை.

அம்புட்டு தண்ணி இருக்கும்.அதுவுமில்லாமே,இப்ப நடக்கற விவசாயத்தை

விட பல மடங்கு விவசாயம் நடந்தது.நடக்க ஆரம்பிச்ச குழந்தையிலிருந்து

படுக்கையாகி விட்ட பெரியவங்களை தவிர,ஊரிலே எல்லோருக்கும்,

விவசாய வேலை பின்னி எடுத்துரும்.


     விதை விதைக்கிறதிலிருந்து,

கதிர்களை,களத்துமேட்டுக்கு சேர்ப்பது வரை யாருக்கும்,சாப்பிடவும்,

குளிக்கவும்,இயற்கை உபாதைகளுக்கு ஒதுங்கவும் கூட நேரமிருக்காது.

ஊரில் உள்ள ஐயாக்களும்,ஆத்தாக்க்களும்தான்,எல்லா வயதினரையும்

மேற்படி விஷயங்களுக்கு சமயம் பார்த்து விரட்டி,விரட்டி அனுப்பி

வைப்பாங்க.எல்லா வயசுக்காரங்களும்,எல்லா வயசுக்காரங்களையும்

கலாய்க்கிறதென்ன! காய்ச்சி எடுப்பதென்ன!ஒருவருக்கு ஒருவர் காட்டும்

அழகான அக்கறை என்ன! எல்லாவற்றிலும்எல்லோருக்கும் பாங்காய் பங்கு

வைக்கும் பாந்தம் என்ன!அழகாய் எங்கே பார்த்தாலும் பச்சை பசேல்னு

கண்ணுக்கு குளிர்ச்சி.முகத்திற்கு மலர்ச்சி.ஓங்கி உயர்ந்த மரங்கள்,


பச்சை பயிர்களோட பிம்பங்கள் எல்லாம்,அங்கங்கே ஓடிட்டிருக்கிற

வாய்கால்லெ,தேங்கி இருக்கிற குளம் குட்டையிலே,ஏன்  கிணத்திலே கூட

தெரிகிற அழகிருக்கே ,அட!அட!அதையெல்லாம் காண கண் கோடி

வேணுமப்பா.எனக்கு நிறைய நேரங்களிலே இது சம்பந்தமா நிறைய

வருத்தம்.இந்த தலைமுறை இந்த சந்தோஷங்களை எல்லாம் இழந்து

நிக்குதே அப்படின்னு ".


    விஜயன் எதுவும் பேசாமல்,பேச தோன்றாமல்,பேச இயலாமல்

அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.அவனால் அப்படித்தான் இருக்க

முடிந்தது.காந்தி சித்தப்பாவும்,தன் பேச்சு விஜயனை ஸ்தம்பிக்க வைத்து

விட்டதை போலத் தோன்றியதால்,விஜயனை சிறிது ஆசுவாசப் படுத்த

விரும்பினார்.அவனை பார்த்து வாஞ்சையுடன் புன்முறுவல் பூத்தார்.

அவரது  அந்த புன்முறுவல் அந்த நிலவொளியில்,அவரது முகத்தையும்,

அந்த சூழநிலையையும் இன்னும் பிரகாசமாக்கியது.விஜயன்,தன் தந்தையின்

அருகாமையை உணர்ந்தான்.


  " தம்பி! அதிக நேரமாயிட்டது ! தம்பிக்கும் பசிக்கும் போல;மீதியை

பிறகு பேசிக்கலாம்".என்றவாறு அவர் வந்த வேலையை லாவகமாக முடித்து

விட்டு கிளம்ப ஆயுத்தமானார்.பேசிக்கொண்டே,காந்தி சித்தப்பா ந்த  எந்த

இடையூறும் இல்லாமல்,தன் வேலையை லாகவமாக முடித்த பாங்கைக்

கண்டு விஜயன் ஆச்சரியப் பட்டான்.மனதில் சாந்தி இருந்தால் மட்டுமே இந்த

மாதிரியான லாவகம் சாத்தியம் என்று தோன்றியது.விஜயனுக்கு தானும்,

தன் குடும்பமும் இழந்த ஆனந்தங்கள் ஏராளம்,ஏராளம் என்று தோன்றியது.





                                                                                                       தொடரும்.........

                                                                                                             


Monday, October 2, 2017

26.Thai Mann.

     விஜயன் காந்தி சித்தப்பாவை உற்றுப் பார்த்தான்.இந்த காந்தி சித்தப்பாவே

செல்லாம்மாவை தன்  மனதில் தாங்கி பேசுகின்றார் என்றால்,அதில் ஒரு

ஆத்மீகமான ஒரு அர்த்தம் இருக்கும்.அவர் பேசுவதை உற்று கவனித்தபடி

அவருடனும்,பால் பொழியும் நிலாவுடனும்,நடை பயின்றான்.என்னவோ

தெரியவில்லை:குறிப்பிட்ட சில மனிதர்களுடன் இருக்க நேரிடும்போது

அவர்களது இருப்பு, தென்றலின் இதமாய்  மனதை வருடும்.மனதில் ஒரு

இனம் புரியாத ஒரு அமைதி,ஒரு சந்தோஷம் நிலவி நம்மை சாந்தப்-

-படுத்தும்.விஜயன் அதை பூரணமாக உணர்ந்தான்.


       விஜயன் தன்னை உற்றுப் பார்ப்பதை கவனித்த காந்தி சித்தப்பா மெல்ல

சிரித்தபடி மேலே நடந்தார்.அவரை தொடர்ந்த விஜயனிடம் திரும்பி "தம்பி!

எனக்கு பெரிய வருத்தம்தான்:ஏன்னா உன் மருமகளைப் பற்றி உனக்கே

தெரியவில்லையே  என்ற வேதனை.சரி அதை விடு.இப்பவாவது அந்தக்

குழந்தையை பற்றி தெரிந்துக் கொள்ள கடவுள் உனக்கு ஒரு வாய்ப்பை

 உருவாக்கித் தந்தாரே! அது பெரிய விஷயம்ந்தான்.நீ கண்டிப்பாக இதற்கு

ஒரு நாள் அந்த கடவுளுக்கு நன்றி சொல்வாய் " என்று ஒரு பெரிய

பீடிகையுடன் தொடர்ந்தார்.,அவர் சொன்னதைக் கேட்ட விஜயன்

அவரை வியப்புடன் மறுபடியும் உற்று நோக்கினான். அவரது முகபாவனை,

அவரது கருத்தை மிக பலமாக ஆமோதிப்பதை போல தெரிந்தது.



     உடல் மொழி சத்தியத்தைத்தான் செப்பும்.விஜயனுக்கு அன்று அந்த

உண்மை மிகத் தெளிவாகப் புரிந்தது.அவர் சொல்லப் போவதை உன்னிப்பாக

கவனிக்க தயாரானான்.அவனுடன் அந்த அழகு நிலாவும் தயாரானது.அதற்கு

இது மிக நன்றாக தெரிந்த விஷயமென்றாலும்,நமக்குத் தெரிந்த,நமக்கு

இதம்தரும்  நல்ல விஷயங்களை நமக்குத் தெரிந்த மற்றவர்கள் திரும்ப,

திரும்ப புதிதாக அறிமுகமானவர்களுக்கு  சேர்க்கும் தருணங்களின் போது

நாம் உடனிருப்பது ஒரு இனிமையான அனுபவம்.அந்த அனுபவத்தை

அனுபவிக்கத்தான் அந்த பால் நிலாவும் இவர்களை தொடர்ந்தபடி வந்து

கொண்டு இருந்தது.


       
      காந்தி சித்தப்பா தொடர்ந்தார்."தம்பி! நான் சொல்றது உனக்கு புரியுதான்னு

பாரு! இப்போதெல்லாம்  வயதுக்கேற்ற தெளிவுடன் இருப்பவர்களை பார்ப்பது

என்பதே ஒருஅரிதான  விஷயமாக  இருக்கிறது.அப்படி இருக்கும்போது தன்

வயதைதாண்டி தெளிவுடன் இருப்பது என்பது ஒரு கல்மிஷமில்லாத

மனதால்தான் தம்பி !முடிகிற காரியமாக தெரிகிறது.அந்த வகை மனதிற்கு

சொந்தக்காரிதான் நம்ப செல்லம்மா.எல்லோரையும் தன்னுள்  பார்க்கும்

பக்குவமும், எல்லோரிலும் தன்னை பார்க்கும் அந்த பாந்தமும்  உள்ள மனம் 

பெரிய வரம் தம்பி !நம்ப செல்லாம்மாவிற்குஅந்த வகை மனது.  தம்பிக்கு

நான் சொல்வது  புரிகிறதா?" விஜயனை உற்றுப் பார்த்தார் காந்தி

சித்தப்பா.


   
      விஜயனுக்கு புரிந்ததை போலவும் இருந்தது.புரியாததை போலவும்

இருந்தது.ஆனால் அடுத்தடுத்து செல்லாம்மாவைப் பற்றி காந்தி சித்தப்பா

சொன்ன விவரங்கள்,விஜயனை ஓர் உலுக்கு உலுக்கின.அவர் சொன்னதன்

அர்த்தம் மிகத் தெளிவாக விஜயனுக்கு விளங்கியது.தன்னை ஆசுவாசப் -

-படுத்திக்  கொள்ள மிகவும் திணறினான் விஜயன்.




   
                                                                                                            தொடரும்..........

    

Tuesday, September 26, 2017

25.Thai Mann.

     "  காந்தி சித்தப்பாவின் இயற் பெயரே மறந்து போய்,ஊரில் எல்லோரும்

அவரை காந்தி என்ற பெயருடன்அவரை அழைக்க வேண்டிய முறையையும்

சேர்த்து அழைத்து அவரை பெருமை படுத்துகிறார்கள் என்றால் அவர்தான்

எத்தனை காந்தி விஷயங்களை அவர்களிடம் கொண்டு சேர்த்திருப்பார்.ஊர்

மக்களும் அவர் சொன்னதை எந்த அளவிற்கு உள்வாங்கியிருந்தால் அவர்

மேல் இத்தனை மரியாதை கொண்டிருப்பர்.அப்படி என்றால்,இவர்கள் நம் தேச

பிதாவின் தரிசனத்தை இந்த காந்தி சித்தப்பாவின் மூலம் அனு தினமும்

தரிசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதானே அர்த்தம்.இவர்களது

சாத்வீகமான இந்த வாழ்க்கை முறைக்கு காந்தி சித்தப்பாவும் ஒரு முக்கிய

காரணமாக  இருந்துக் கொண்டிருக்கிறார்.இத்தனைக்கும் அவர் எட்டாவது

வரைதான் படித்திருக்கிறாராம்.ஆனால்,தினமும்  ஊருக்குள்ளே

இருக்கும் அந்த சிறிய நூலகத்திற்கு போய் ஏதாவது ஒன்றை படித்துக்

கொண்டே இருப்பாராம்.அவரிடம் விஷய ஞானம் நிறைய இருக்கும்

போல." விஜயனின் யோசனை பலமாக இருந்தது.


     " என்ன தம்பி! யோசனை பலமா இருக்கும்போல;பேச்சையே காணோம்;

வாய்கால் வரப்பு வரை கூட வர சம்மதந்தானே? ".திடுக்கிட்டு சுய நினைவுக்கு

வந்தான் விஜயன். ''என்ன சித்தப்பா! இப்படி கேட்டுட்டீங்க! இந்த அக்கா

பொண்ணு செல்லம்மா  தன்னோட நடவடிக்கைகளாலே என்னை தினமும்

புறந்தள்ளி ரொம்ப வேதனைபடுத்துறா;நானு தாய் மண்ணையும்,தாய் மண்

சொந்த பந்தங்களையும் புறந்தள்ளி சீமைக்கு போய்ட்டேனாம்.என்னோட

வேலைக்கான சூழ்நிலை அந்த மாதிரி ஆயிடுச்சு; அக்கா பக்கத்து ஊரிலேயே  

இருக்கிற தைரியத்திலே சீமைக்கு போய்ட்டேன்.திரும்பி பார்க்கரதுக்குள்ளே

வேலையிலிருந்து ஓய்வு பெற நாளும் வந்தாச்சு.ஆனாலும்,எனது தவறு

மன்னிக்கவே முடியாத பெரிய தவறுதான்.பிறந்த மண்வாசனையை  மறந்தது.

செல்லம்மாவோட ரௌத்ரமும் மிகச் சரியானதுதான்.ஒரே குழப்பத்தில்

இருக்கேன்.மனசு ரொம்பவே பாரமாகி போச்சு.அதான் மனசை கொஞ்சம்

காத்தாட விடலாம்னு வெளியே வந்தேன்.சாமியே வந்த மாதிரி நீங்க

வந்தீங்க.உங்க அருகாமையும்,இந்த நிலா வெளிச்சமும்,இந்த தென்றல்

காற்றும் எம்மனசு பாரத்தை ரொம்பவே ஏறக்கிடுச்சு சித்தப்பா ". தன்னை

ஆசுவாசப் படுத்திக் கொண்டான் விஜயன்.


     காந்தி சித்தப்பா இலேசாக புன்முறுவலித்தது அந்த நிலா வெளிச்சத்தில்

மிகத் தெளிவாகத் தெரிந்தது.விஜயனுக்கு இளம் முறுவலின் அர்த்தம்

புரியவில்லை. அவரை ஏறிட்டுப் பார்த்தான்.காந்தி சித்தப்பா,"தம்பி! நீங்க

இப்படி யோசித்து பார்த்திருக்கிங்காளா?.ஒரு விஷயத்தை எடுத்துக்கிட்டா,

அந்த விஷயத்தை,நம்ம சந்தர்ப்பத்திற்கு தகுந்த மாதிரி, நமக்கு வேணுமின்னா

நமக்கு சாதகம் தரும் சூழ்நிலையாகவும் மாத்திக்கலாம்.வேணாமின்னா,அந்த

விஷயம் நமக்கு பாதகம் தரும் விஷயம் மாதிரியான சூழ்நிலையாகவும்

மாத்திக்கலாம்.ஆனாலும்,உலக நியதின்னு ஒண்ணு இருக்கு இல்லேப்பா!

அதற்கு பேர்தானப்பா எதார்த்தமும்,கண்ணியமும் ".


      விஜயனுக்கு புரிந்தது மாதிரியும் இருந்தது;புரியாத மாதிரியும் இருந்தது;

ஆனாலும் காந்தி சித்தப்பா இதை பற்றியெல்லாம் கவலைப்படாமல்," உன்

காதில் போட்டு வைக்கிறேன்.அதை மனதிற்குள் பாதுகாப்பாக இறக்கி

வைத்துக்  கொண்டாலும்,உன் சமர்த்து;இல்லை,இந்த காதில் வாங்கி,

இன்னொரு காது வழியே சருகாக்கி காற்றோடு  பறக்க விட்டாலும் மகனே

அது உன் பாடு ".என்பது போல தொடர்ந்து பேசினார்.


     "  இந்த எதார்த்தமும்,அந்த எதார்த்தத்தை கண்ணியமா கையாள்ற மனுஷ -

-தானேப்பா மனுஷன்.எதார்த்தங்கதுதான் நமக்குன்னு வாய்க்கப்பெற்ற

கடமைகள்;அவைகளை " சுமைகள் "என்ற கணக்கில் சேர்க்காமே, "சுகமான

சுமைகள் " அப்படின்னு நம்ம அறிவிலே சேர்க்க நமக்கு தெளிவு பிறக்கணும்,

அதுதானே கண்ணியமங்கறது.அந்த கண்ணியத்தை,ஏதாவது சாக்கு போக்கு

சொல்லி,தவிர்ப்பது,தவிர்க்க நினைப்பது மரியாதயை மதிக்க தெரியாதவன்

நிலை தம்பி!. தம்பியை, செல்லம்மா அந்த நிலையிலேதான் பாக்குது.அதுலே

எந்த தப்பும் இருக்கறதா எனக்குப் படலை".ஏன்னா,நம்ம செல்லம்மா,இந்த

எதார்த்தத்தையும்,கண்ணியத்தையும் ரெண்டு கண்களா பாவிச்சு அவை

காட்டுற வழியிலே போய்கிட்டு இருக்கு தம்பி! ".


      திடுக்கிட்டுப் போனான் விஜயன்.அவன் நிலையை கண்டதும்,காந்தி

சித்தப்பா," தம்பி செல்லம்மாவை பார்க்கும் போதெல்லாம் நான் பலமுறை

நினைப்பதுண்டு காவல் தெய்வம்தான் செல்லம்மாவாக பிறந்து

வந்திருக்கிறதோனு என்றவர்,செல்லமாவின் இன்னொரு பரிமாணத்தை

விஜயன் முன் வைக்க திகைத்துப் போனான் விஜயன்.





                                                                                                             தொடரும்.........  



   




  



     

Sunday, September 24, 2017

24.Thai Mann.

       மேலும் ஒரு வாரம் போனது.விஜயனின் நிலைமை அவனது தாய்க்கு

புரிந்து போனது.பேத்திக்கும்தான்.ஒரு நாள் மாலை பேத்தி வருவதற்கு முன்

தன் மகனிடம் இதைப் பற்றி பேச முடிவெடுத்து,பேச்சைத் தொடங்கினார்

தாய். " ஏன் தம்பி ! இன்னும் எத்தனை நாளைக்குதான் இப்படியே இருந்துற

முடியும்? தம்பியோட வேலையெல்லம் பாதிக்குமில்லே! தவிரவும்,

தம்பியோட குடும்பமும்   தம்பிய பாக்க தவிச்சுட்டு இருக்குமில்லே? ".


      "  ஆமா! தம்பியோட குடும்பந்தான் தவிச்சுட்டு இருக்கும் ! தம்பியோட

பெத்த ஆத்தா எப்படி போனா என்னா! எங்கிட்டு போனாத்தா என்ன?முந்துன

உறவையும்,பிந்துன உறவையும் தாய் மண்ணிலே ஒண்ணாக்க பாலமாகற

பொறுப்பை உதறி தள்ளிட்டு,அசலூருலே, மண்ணோடு மண்ணாகற

வரைக்கும், காசு பின்னாடியே  ஓடற பெரிய்ய்ய்ய பொறுப்பு மட்டும்தானே

இருக்கு?".

     " ஒம்பிள்ளைக்கு.பெத்தவங்க வேண்டாம்: கூட பொறந்த பொறப்பும்

வேண்டாம்.பொறந்த மண்ணும் வேண்டாம்.அது மண்ணாங்கட்டியாகவே

போகட்டுமே! நமக்கென்னா போச்சு?என்னவோ சாமி சொல்லிடுச்சுங்கறதை

போல,ஒலகத்து காசையெல்லாம் தன்னோட கைபையிலே போட்டதுக்கு

அப்புறம்தான் மறு வேலைன்ற மாதிரி அப்படி என்னா காசு பின்னாடி

கண்ணுமண்ணு தெரியாமை ஓடிட்டிருக்கு நீ பெத்த புள்ளை!நெசமாலுமே

எனக்கு எதுவும் புரியலே ஆத்தா!". பொரிந்துத் தள்ளினாள் ஆத்தாவின்

பேச்சை கேட்டுக்கொண்டே வந்த செல்லம்மா.அவள் குரலில் அத்தனை

வெறுப்பு மண்டி கிடந்தது.


      திரும்பி பார்த்த ஆத்தா ஆற்றாமையில் அரற்றினார்;என்னவென்று;

"அதுதான் செல்லம்மா எனக்கும் புரியலே! ".சப்த நாடியும் ஒடுங்கி போயிற்று

விஜயனுக்கு. பாட்டியும்,பேத்தியும் உள்ளே போய் வெகு நேரமாகியும் திக்

பிரமைப் பிடித்து போய் அமர்ந்திருந்தான் விஜயன்.பிறகு நேரம் பார்த்தான்.

மணி எழரை தாண்டிவிட்டது.வெளியே சிறிது காற்றாடி விட்டு வரணும்

போல இருந்தது.தாயிடம் சொல்லிவிட்டு வீட்டை விட்டு இறங்கினான்.

தெருவிற்கு வந்து இரு புறமும் பார்வையை படர விட்டான்.நிலா ஒளி

குளுகுளுவென்று ஒரு நிறைவான இதம் தந்தது.எங்கிருந்தோ வந்த

மலர்களின் கதம்பமான வாசம் விஜயனுக்கு புத்துயிரூட்டியது.


     " என்ன தம்பி! நிலா வெளிச்சத்திலே காத்தாட வந்தீங்களா? " அடுத்தத்

தெரு காந்தி சித்தப்பா அருகில் வந்தார்.அவரு எப்பவும்,காந்தியை பற்றியே

பேசிக் கொண்டிருப்பதால்,அவருக்கு ஊரில் அந்த பெயர்.வயது ஒரு எழுபது

எழுபத்தைந்து இருக்கும். அவருக்கு மார்கண்டேயன் என்று இன்னொரு

பெயரும் உண்டு. ஊரில் நிறைய பேர்,அவர்களுக்கு விவரம் தெரிந்த நாளில்

இருந்து இவருடைய தோற்றம் அப்படியேத்தான் இருக்கிறதாம்.அம்மா

சொல்ல கேள்விப்பட்டிருக்கிறான் விஜயன்.எப்போதும் ஒரு குறும்புத்தனம்

அரும்பிக் கொண்டிருக்கும் மலர்ந்த முகமாக இருப்பார்.ஆண்,பெண்

வித்தியாசம் இல்லாமல் எல்லா வயதினருடனும் இயல்பாய்,சகஜமாய்

அளவளவாடுவார்.பாசமும்,பரிகசிப்பும் நிறைந்த அவரது பேச்சிற்கு நடுவில்

வரம்பு தாண்டும் விஷயங்களில் குட்டவும் தவற மாட்டார்.குறு மொழியில்

மனது நிறைய செய்து விடுவாராம்.எல்லாம் அம்மா சொல்ல கேள்வி.

விஜயனும் பலமுறை அவரது இனிய சொல்லையும்,இனிய முகத்தையும்

சந்தித்து கடந்திருக்கிறான்.


      "  வாய்காலுக்கு தண்ணி திருப்ப போய்கிட்டு இருக்கேன்தம்பி !

 பேச்சுத் துணைக்கு வர முடிஞ்சா வாங்க!ஒரு மணி நேரத்திலே

திரும்பிடலாம்".வாஞ்சையோடு அழைத்தார்.விஜயனுக்கும்,அது,அந்த

" பேச்சுத் துணை " தேவையாக இருந்தது.அவரை உள்ளே அழைத்து

உபசரித்தான்.பேச்சு சத்தம் கேட்டு,அம்மாவும்,செல்லம்மாவும் வெளியே

வந்தார்கள்.அவரது குசல விசாரிப்பு,கேட்பவர் மனதை நிறைத்தது.அம்மா

ஏதாவது சாப்பிட சொல்ல வற்புறத்த,அவர் திரும்பி வருபோது சாப்பிடுவதாக

வாக்களித்துவிட்டு,விஜயனை அழைத்துக் கொண்டு கிளம்பினார்.


      வழி நெடுக அவர் சொன்ன விஷயங்கள் யாவும் விஜயனை ஒரு புது

உலகத்திற்கு அழைத்துச் சென்றன.




                                                                                                     தொடரும்.........






                                                                                           


        

Friday, September 22, 2017

23.Thai Mann.

    விஜயன் ஊர் வந்து விளையாட்டாய் மூன்று மாதங்கள் கடந்து

விட்டன.அவன் குடும்பம் இருந்த சீமையிலிருந்து ஆளாளுக்கு எப்போது

திரும்பி வருவீர்கள் என்ற நச்சரிப்பு தொடர்ந்து கொண்டேயிருந்தது.விஜயன்

ஒன்றை கவனித்தான்.செல்லம்மா,தினமும் கல்லூரிக்கு கிளம்பும் நேரம்

குறைந்தது ஒரு நான்கைந்து பேராவது தங்கள் மருந்து சீட்டையும்,நகரத்தில்

மட்டுமேகிடைக்கும் வேறு,வேறுபொருட்களுக்கான விண்ணப்பத்தையும்

அதற்குஉண்டான தொகையையும்  செல்லம்மா கையில் தந்துவிட்டு

செல்வார்கள்.செல்லம்மாவும் கரிசனமாக அவரவர்களுக்கான

மருந்தையும், மீதி தொகையையும் சரியாக கொண்டு வந்து சேர்த்து

விடுவாள்.


     செல்லம்மாவை பார்க்கும் போதெல்லாம்,விஜயனுக்குள் ஒரு புதிய

சக்தி பிறப்பதை அவன் உணர்ந்தான்.அவள் தேனி போல சுறுசுறுப்பாய்

இயங்குவதை நாளெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.இந்த இளம்

வயதிலேயே அவளுக்கு ,தனக்கு எது தேவை?எது தேவையில்லை? என்பதில்

மிகத் தெளிவாக இருந்தாள்.அனாவசியமான,அர்த்தமற்ற வார்த்தைகள்

அவளிடமிருந்து பிறக்காது.அடுத்தவர்களிடமிருந்தும் பிறக்க விட மாட்டாள்.

இயன்றால், அடுத்தவர்களுக்கு உதவுவாள்.இயலவில்லை எனில்,தெளிவாக

கூறி  விடுவாள்.ஆனால்,தவறை,தவறு என்று சரியாக கூறுவதில் அவளுக்கு

நிகர் அவள்தான்.அதில் எந்த விதமான  பாராபட்சமும் இருக்காது.


     செல்லம்மாவின் சமையல்,அவளது ஆத்தாவின் சமையல் போலவே

அத்தனை சுவையாக இருக்கும்.இன்னும் சொல்லப் போனால்,அவளது

ஆத்தாவை கேட்டு,கேட்டு,விஜயனுக்கு பிடித்ததை எல்லாம் பிரியமாக

சமைத்து வைத்திருப்பாள்.அதன் ருசியே அவளது பாசத்தை அங்குலம்

அங்குலமாக புரிய வைக்கும்.ஆனால்,அவன் பொருள் தேடச் சென்றவன்,

பெற்றத் தாயை மறந்து,உற்றார்,உறவினர்களை மறந்து,தன் குடும்பத்திற்கு

உறவுகளை  பாலமாக்க மறந்து,இத்தனைக் காலமாக பொருளைத் தேடிக்

கொண்டே இருப்பது ,உண்மையில் அவளுக்கு புரியாத பெரும் புதிராக

இருந்தது.


      ஆனால்,தாய்க்கும்,பிள்ளைக்கும் நடுவில் பாசப் பிணைபபுக்கான அதிக

சந்தர்ப்பங்களை உருவாக்கியபடி இருந்தாள் செல்லம்மா.அவளது ,பாங்கான

பக்குவமானநடவடிக்கைகள்  விஜயனை ஆச்சரியப்படுத்திக்கொண்டே

இருக்கும்.அவைகள் ஏராளமான படிப்பினைகளை தந்துக் கொண்டே இருந்தன.

ஆனால் எக்காரணம் கொண்டும் விஜயன் பக்கம் அவள் திரும்புவதே இல்லை.

அவள்பாட்டிற்கு அவளது வேலைகளை பார்த்துக் கொண்டிருப்பாள்.விஜயன்

வந்ததிலிருந்து அவனது அக்கா எப்போதும் போல நித்தமும் வந்து மாலை

செல்லம்மா வரை தங்குவதில்லை.தினமும் காலையில் வந்து வேலையாட்-

-களுக்கு என்ன வேலையோ சொல்லி விட்டு,அம்மா,தம்பியோடு சிறிது நேரம்

அளவளாவி விட்டு சென்று விடுவாள்.


      கிராமம் ஆனதால்,காலையிலிருந்து,மாலை வரை ஏதாவது ஒரு

காரணத்தினால் யாராவது குசலம் விசாரித்தபடி வந்து போய்க் கொண்டு

இருந்தார்கள்.பொதுவாக அவர்களது பேச்சு வெள்ளந்தியாக இருக்கும்.

விஜயனை அவர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளை போல விசாரித்து விட்டு

செல்வார்கள்.விஜயனும் அக்காவுடன் தோப்பு துரவுகளுக்கு அவ்வப்போது

சென்று வந்ததால்,ஓரளவிற்கு கிராமத்து வாழ்க்கை பிடிப்பட்டது.

செல்லம்மாவை தவிர, அக்கா குடும்பத்தினர் யாவருக்கும் மிகவும்

பிடித்தவனான். மாமாவும் அவ்வப்போது அக்கம்,பக்கம் அழைத்துக் கொண்டு

போய்,அவனை அவன்  பக்கத்து ஜனங்களுக்கு அறிந்த முகமாக்கினார்.


     ஒரு பக்கம், விஜயன் தன் தொலை தூரக் குடும்பத்தை நினைத்து

மிகவும் விசனப்பட்டான்.மறுபக்கம்,இந்த கிராமத்து சூழ்நிலைக்கு ஒன்றி

அம்மாவுடனும்,அக்கா குடும்பத்தினருடனும்  நிரந்தரமாக தங்கி விடலாமா?

என்றும் மனதில் பேரவா  இருந்தது.இருதலைக் கொள்ளி எறும்பாக தனக்குள்

தவித்துக் கொண்டிருந்தான் விஜயன்.





                                                                                                தொடரும்...........


 

22. Thai Mann.

    மறுநாள் மாலை நேரத்தில் எப்போதும் போல செல்லம்மா பாட்டி வீட்டிற்கு

வந்து சேர்ந்தாள்.முன்னால் கூடத்தில்,ஊஞ்சலில்,மெதுவாக ஆடியபடி ஒரு

புத்தகத்தில் மூழ்கி போயிருந்தான் விஜயன்.செல்லம்மாவை கண்டதும்,புன்-

-சிரிப்பை சிந்த விட்டான்.ஆனால் செல்லம்மா கண்டு கொண்டால்தானே!

அந்த கூடத்தில்,வெறும் ஊஞ்சல் மட்டும்தான் இருக்கிறது வேறு ஒன்றும்

இல்லை பாவனையில் சாதாரணமாக எப்போதும் உள்ளே போவது போல

உள்ளே போய் விட்டாள்.


    அம்மா சொன்னது நினைவிற்கு வந்தது.செல்லம்மா,இங்கிருந்து இருபது

கிலோமீட்டர் தொலைவிலுள்ள நகரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எட்.

படிப்பு படிக்கிறாளாம்.மாலையில் தன் வீட்டிற்கு சென்று,உடை மாற்றி விட்டு,

மறுநாள் கல்லூரிக்கு செல்ல தேவையான புத்தகங்களையும்,மாற்று உடை-

-களையும்,எடுத்துக் கொண்டு இங்கு அவளது பாட்டியின் துணைக்கு வந்து

விடுவாள்.காலையில் அவளது அம்மா வந்ததும் கல்லூரிக்கு கிளம்பி

விடுவாள்.பகல் முழுதும் அம்மா,பாட்டியையும்,பாட்டியின் வயல்

வரப்புகளையும்,பாட்டியின் வேலையாட்களின் உதவியுடன் கவனித்துக்

கொள்வார்.மாலையில் செல்லம்மா வந்ததும் தன் ஊர் பார்க்க கிளம்பி

விடுவார்.


    பாட்டியின் ஊர் இளவட்டங்களுக்கு செல்லம்மா  பேரில் கொள்ளை

ஆசை.ஆனால்,அருகில் செல்ல துணிச்சலில்லை.செல்லம்மா அவர்களிடம்

சொல்லி வைத்திருக்கிறாளாம்.தான்,தன் பாட்டியை கவனித்துக் கொள்ள,

பாட்டியின் ஊரில்தான் வாழ்க்கைப்பட போகிறாளாம்.ஆனால் யாருக்கு

என்று சொல்லவில்லை.அதனால் பாட்டி ஊரின் எல்லா இளைஞர்களும்

அடக்கி வாசித்தபடி வலம் வந்து கொண்டிருக்கிறார்களாம் .


    நேரே உள்ளே சென்ற செல்லம்மா," என்ன ஆத்தா! பார்க்க பரம சந்தோஷமா

 இருக்காப்பலே தெரியுது.புள்ளே  வந்த  உடனே என்ன ஒரு பூரிப்பு!ஒரு பத்து

பதினெஞ்சு வயசு குறைஞ்சு  அழகு கூடிடிச்சு போ!வயசு புள்ளையாட்டம்

வளைய,வளைய வந்து பம்பரமா வேலை பார்க்குறே!உன்னெயெ இப்படி

பாக்கத்தானே நா தவியாய் தவிச்சு கிடந்தேன்;மனசு நெறெஞ்சு போகுது

ஆத்தா!இந்த சந்தோஷம் ஒனக்கு ஆயுசுக்கும் கிடைக்கட்டும்னு ஐயனாரெ

வேண்டிக்கிறேன் ஆத்தா! பிறகு அவர் இஷ்டம் போல நடத்தட்டும் ".


   செல்லம்மா ஐயனாரை மனதார ஒரு நிமிடம் வேண்டிக் கொண்டாள்.

வேண்டுதல் முடிந்து நிமிர்ந்தவள், " ஏனாத்தா ! நீதான் இப்போ பரபரன்னு

சுறுசுறுப்பு ஆயிட்டேயே ! இனி நா எதுக்கு ஆத்தாவுக்கு,புள்ளைக்கு

 நடுவிலே?எத்தனே காலத்து கதெ பேச வேண்டியிருக்கு ஆத்தாவுக்கும்

புள்ளைக்கும் ? கதெ பேசிட்டே புள்ளைக்கும் வாய்க்கு வக்கணையா

சமைச்சுப் போட்டு சந்தோஷமா இரு ஆத்தா! என்ன சமாளிச்சுடுவே இல்லே?".

குரலில் ஏக கரிசனம்.


    வந்ததே கோபம் ஆத்தாவுக்கு." நல்ல இருக்கு புள்ளே நீ பேசற பேச்சு;

என்னோட  உசுரே நீதானே புள்ளே! நீ போயிட்டா, உசுரு இல்லமே வெறும்

சடலமா எம்புள்ளைய நானு எப்படி கொண்டாடரதாம்? ". பாட்டி முறுக்கிக்

கொள்வது தெரிந்தது. " சரி!சரி! ஒடனே கண்ணை  கசக்காதே! நா இருக்கேன்.

ஒம்புள்ளைக்கு என்னன்னா பிடிக்கும்னு சொல்லு! எல்லாத்தையும்தயார்

பண்றேன் ". பேசியபடியே  செல்லம்மா இன்னும் உள்ளே சென்று கொண்டி-

-ருந்தாள் .


    முற்றத்தில்  ஊஞ்சலில் மெதுவாக அசைந்தபடி  பாட்டிக்கும் பேத்திக்கும்

நடந்து கொண்டிருந்த உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தான் விஜயன்.

அந்த யதார்த்தமும்,கண்ணியமும் நிறைந்து தெளிந்த நீரோடையாக

சலனமின்றி பயணிக்கும் அந்த ஆழமான பாட்டிக்கும் பேத்திக்கும்

இடையிலான அன்பின் நிதர்சன ஸ்பரிசத்தை தென்றலாய் உணர்ந்தான்

விஜயன்.





                                                                                       தொடரும்......................   




 


   


Thursday, September 21, 2017

21.Thai Mann.

   அடுத்தநாள் முதல்,விஜயன்,தன் தாயிடம் சொல்லிவிட்டு,கிராமங்களின்

வயற் வரப்புகளில் நடை பயின்றான்.அவனது  யோசனையில் எல்லாம் கடும்

சீற்றத்துடன் வந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டுச் சென்ற அந்த புயல்

நினைவாகவே இருந்தது.எத்தனை பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும்

அந்தப் புயலை நேசிக்காமல் இருக்க முடியவில்லை.


   விஜயனின் தாய் எல்லாவற்றையும் விவரமாக சொன்னார்.தன் மகள்

வயிற்று  பேத்தியின் அருமை,பெருமைகளை விலாவாரியாக சொன்னார்.

அக்காவின் கடைக் குட்டி.படுச்சுட்டி.பெயர் பாரதி என்கிற செல்லம்மாவாம்.

அந்த பெயர் காரணத்தினால்--தானோ என்னவோ,சிறுமைகளை பொறுக்காத

 " அக்னி குஞ்சாக "இருக்கிறாள்.அக்காவின் வீட்டை, அக்காவும்,மாமாவும்

நிர்வகிப்பதில்லையாம்.இந்த அக்னி குஞ்சுதான் நிர்வகிக்கிறதாம்.


     இந்த அக்னி குஞ்சுவின் ஊரும்,அதன் பாட்டியின் ஊரும் அருகருகில்

இருந்ததனால்,இதற்கு மிகவும் கொண்டாட்டமாக போய்விட்டது.இல்லை

என்றால்,அதன் பாட்டியின் பாடு திண்டாட்டமாக  அல்லவா போயிருக்கும் ?

இது அதன் நிதர்சனமான வாதம்.தன் பாட்டி மீது ஏகத்திற்கு வாஞ்சை;

பாசம்;தன் பெற்றோர் மற்றும் தன் குடும்ப அங்கத்தினர்கள் ஒவ்வொருவர்

மீதும் உயிராக இருக்கிறதாம்.அவளுடைய அண்ணிமார்கள் இருவரும்

இவளிடம்தான் எல்லா நல்லது,நல்லது அல்லாத விஷயங்களையும் பகிர்ந்து

கொள்வார்களாம்.இருஊராருக்கும் செல்லப்பிள்ளையாம்.அதனால் இரு

ஊராரும் அவளைசெல்லமாக  " செல்லம்மா " என்றே அழைக்கிராற்களாம்,



    அம்மா சொல்ல,சொல்ல,விஜயனுக்கு செல்லம்மாவை மிகவும் பிடித்து

போனது.இந்தச் சுட்டிக் குழந்தையை பிறந்ததிலிருந்து,ஒரு தாய் மாமன்

ஸ்தானத்திலிருந்து அதன் குழந்தை பருவத்தை அங்குலம்,அங்குலமாக

ரசித்து, அதனுடன் ஆசை,ஆசையாய் விளையாடி,விரும்பியதல்லாம்

வாங்கித் தந்து,அழுதுக் கொண்டு வந்து நிற்கும் போதெல்லாம்,நான் " தாய்

மாமன் " இருக்கிறேன்  என்று அன்பாய் அரவணைத்து, இன்னும் அதன்

ஒவ்வொரு பருவத்திலும்,அதற்கு எழும் எல்லா சந்தேகங்களையும்,வயல்-

-வரப்புகள்  நடுவே கைப்பிடித்து அழைத்துக் கொண்டுச் சென்று,அதன்

வயதிற்கு ஏற்றவாறு புரியும்படி,சகல அங்க,அசைவுகளுடன் கதைகல் பல 

சொல்லிக்  கொண்டு செல்லும் அனுபவம்,அந்த வயல் வரப்பினூடே இந்த

மலர்செண்டு,அசைந்து,அசைந்து நடந்து வரும் அழகு,இன்னும் எத்தனை,

எத்தனையோ சந்தோஷங்களை இழந்த மிகப் பெரிய வருத்தத்தை விஜயன்

உணரலானான்.


    இன்னும் சொல்லப் போனால்,தன் உடன் பிறந்த அன்பு சகோதரியின்

குழந்தைகளுக்கு ஒரு  தாய் மாமனாக, தான் எந்த விதத்திலும்,எந்த வித

சந்தோஷத்தையும்  அந்தக் குழந்தைகள் தம்மிடம் பெறுவதற்கு தான் வாய்ப்பு

ஏற்படுத்தி தரவில்லை என்றக் குற்ற உணர்வால் குறுகிப் போனான் விஜயன்.

முதலில் தன் பெற்றோருக்கு ஒரு நல்ல மகனாக இருந்திருந்தால்தானே

அவர்களை சார்ந்த எல்லா உறவுகளும் திடமாக தொடர்ந்து கொண்டு

 இருந்திருக்கும். தெறித்த உண்மை அவனை சுட்டெரித்தது.


   " சரி இழந்ததை பற்றி யோசித்து,யோசித்து விசனப் படுவதால் யாருக்கு

என்ன பயன் விளைய போகிறது?.அவையெல்லாம் கடன் என்றுதான்

கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.அதாவது  " நன்றிக் கடன் " என்று.

இனி ஒவ்வொருவருக்கும் அந்த நன்றிக் கடனை திருப்பி செலுத்த

என்னென்ன வழி வகைகள் உண்டு என்பதை ஆராய்வதுதான் தனது

தலையாய பணி "  தெளிந்த விஜயன் நிமிர்ந்து, தன் நடையை தொடர்ந்தான்.

அதை ஆமோதித்த தென்றலும் விஜயனை ஆசுவாசப்படுத்தியது.







                                                                                         தொடரும் .............


 



Wednesday, September 20, 2017

20. Thai Mann.

    " புயலுக்குப் பின் அமைதி " என்று சாதாரணமாக கூறக்  கூடிய புயலா? வந்து

சென்றப் புயல்.அந்த புயலின் தோற்றமே " அச்சம் " என்ற சொல்லின் முழு

பரிமாணத்தை,தாய்,மகன் இருவரது மனதிலும் கருப்பு மையில் அச்சடித்தது

போல படிய வைத்து விட்டுப் போனது.அந்த ஆழமாக ,அழுத்தமாக ,மிகுந்த

ரணகள வலியுடன் படிந்து விட்ட அந்த கருப்பு மை அச்சை உணர்ந்த விஜயன்

சர்வ சக்தியையும் இழந்து சிலையாகி சமைந்து போனான்.அவனது தாயின்

நிலைமை விவரணைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது,


    நீண்ட நேர மயான அமைதிக்கு பிறகு விஜயனுக்கு ஒரு அடர் திரை விலகி,

தெளிவு பிறந்தது.எல்லாமே தெள்ளத் தெளிவாகின.இத்தனை ஆண்டுகளுக்கு

பிறகு, இத்தனை ஆயிரம் மைல்கள்  அப்பால் இருந்த தன்னை,அங்கு இருக்க

விடாமல்,தாய் மண்ணிற்கு சுண்டி இழுத்த சக்தி,இப்பொழுது  வந்து போனதே

இந்த புயலின் சக்திதான் என்பதை  அவனது உள்ளுணர்வு அவனுக்கு

உணர்த்தியது.


   அந்த மகா சக்தியின் மகிமையை உணர்ந்ததும்,விஜயன் தன்னை

சுதாரித்துக் கொண்டான்.அந்த சக்திக்கு தன் பாட்டியின் பால் கொண்டுள்ள

ஆழமான பரிவுதான்,அந்த அப்பழுக்கில்லாத பாசம்தான்,விஜயனின்

தலையாய பொறுப்பை உணர்த்தும் விதமாக அவனை கட்டி இழுத்து வந்து

அவனை தன்  தாயின்பால் சேர்த்திருக்கிறது.


   விஜயன் மனதின் வலிமையைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறான்.ஆனால்

இப்பொழுதுதான் அதன் வலிமையின் தீவிரத்தை,அதன் ஆக்ரோஷத்தை

நேரில் கண்டுக் கொண்டான்.அப்படியெனில் இத்தனை வலிமைப் பெற்ற

அந்த மனதில்,அது தன் பாட்டியின்பால் கொண்டுள்ள பாசமும் மிகவும்

வலிமையானதாகத்தான் இருக்க வேண்டும்.இந்த நிதர்சனத்தை சுளீரென

 சாட்டையடி வலியாய்  உணர்ந்தான்.தான் மறந்த அல்லது விலக்கிய தன்

தலையாய பொறுப்பை இந்த பிஞ்சு,தன் தோள் மீது சுமந்து,தன் பாட்டியின்

கௌரவத்தை கம்பீரமாக காத்து நின்றிருக்கிறது.தன்னை எண்ணி கூசிப்

போனான் விஜயன்.


   திரும்பி தாயை பார்க்க,அவனது தாய் அவனையே பார்த்துக் கொண்டு

இருந்தாள்.அதில் வேதனை மிகுந்திருந்தது.தன் மகனின் மரியாதையை

தன் பேத்திக் குன்ற செய்து விட்டாளே!தன் தாயின் பரிதவிப்பை உணர்ந்தான்

விஜயன்.எல்லா தாய்மார்களுக்கும் உள்ள நியாயமான பரிதவிப்புதான்.தன்

பிள்ளை எப்படிப் பட்டவனாயிருந்தாலும்,தன் கண் முன்னே யாரும்  தன்

மகனின் மரியாதைக்கு ஊரு விளைவிக்கக் கூடாது.என்னே ஒரு

தாய்மையின் நியாயத்தின் பெருமை.


    விஜயன் ஒரு முடிவுக்கு வந்திருப்பது போல தெரிந்தது,தன் தாயைப் பார்த்து

முறுவலித்தான்.அவனது தாய் அந்த முறுவலின் அழகை ரசிப்பது தெரிந்தது.

மெதுவாகத் தன்னை ஆசுவாசபடுத்திக் கொண்டான்  விஜயன்.





                                                                                      தொடரும்.............




Monday, September 18, 2017

19.Thai Mann.

   விஜயனின் கடிதம் மிகவும் சுவராஸ்யாமாக இருந்தது மீனாவிற்கு.

அந்தக் கடிதத்தை எத்தனை முறை படித்தாலும் சலிப்பு தட்டவேயில்லை.

மறுபடியும்,மறுபடியும்  படித்துக் கொண்டே இருந்தாள் .விஜயனிடமிருந்து

அடுத்தக் கடிதம் வரும்வரை இதையேதான் செய்துக் கொண்டிருப்பாள்

போலிருக்கிறது.விஜயனை சகட்டுமேனிக்கும் தூக்கியடித்த அந்தப் புயல்

இவ்வளவுத்தொலைவில் இருக்கும் மீனாவையும் விட்டு வைக்கவில்லை.

தனக்குள் வாரி சுருட்டிக் கொண்டது.மீனா,அந்த புயலுக்குள் ஒரு கதகதப்பை

உணர்ந்தாள். அந்த உணர்வு அவளுக்கு விசித்திரமாக இருந்தது.அந்த

விசித்திரத்தின் ஊடே மறுபடியும்,மறுபடியும் விஜயனின் கடிதத்தில்

 ஐக்கியமானாள் .


 
    இரண்டு நாளாக அம்மாவின் போக்கு ஸ்ரீதருக்கும் விசித்திரமாக இருந்தது.

அப்படி என்னதான் அப்பா எழுதி இருப்பார்.அப்பாவின் முதல் கடிதங்களை

எல்லாம் ஸ்ரீதரும் படித்திருக்கிறான்.சுகமான அனுபவம்தான்.மறுப்பதற்கு

இல்லை.ஆனால்,இந்த கடிதத்தை அம்மா இன்னும் படிக்க தரவேயில்லை.

அப்படி என்றால் ஏதாவது தனிப்பட்ட முறையில் எழுதி இருப்பாரோ?அப்படி

என்றால் அம்மா இப்படி பகிரங்கமாக படிப்பானேன்.ஒன்றும் விளங்கவில்லை

ஸ்ரீதருக்கு.அம்மா படித்து விட்டுத் தரட்டும் என்றபடி தொலைகாட்சி பெட்டிக்கு

உயிரூட்டினான்.அங்கிருந்தபடியே அம்மாவை அவ்வப்போது பார்வையால்

அளந்துக் கொண்டிருந்தான்,


   அம்மா அந்த கடிதத்தில் மூழ்கி போயிருந்தாள்.கடிதத்தில் விஜயன்

விவரித்த அந்தப்  பெண் புயலின் பிரவேசக் காட்சியை  நேரில் பார்த்துக்

கொண்டிருப்பது போலவே உணர்ந்தாள்.விஜயன் கடிதத்தில் தொடர்ந்தான்.


  " மாலையில் வந்த அந்த புயலில்,அதன்  வேகத்தில்,அதன் தாக்கத்திற்கு

ஈடாக ஒரு நேர்த்தியான அழகு ஒளிர்ந்து கொண்டிருந்தது. அந்த புயலின்

தாக்கம் சற்று மட்டுப்பட்டிருந்தால் கூட அந்த மாசு மருவற்ற அந்த

அழகை,ஆண்,பெண் என்ற வித்தியாசமும்,எந்த வயது வித்தியாசமுமின்றி

மிகவும் வாஞ்சையுடன் ரசித்திருப்பார்கள்.அத்தனை திருத்தமாக இருந்தது

அந்த பெண் புயல்".


   " அந்த பெண் புயலின் தாக்கத்தை  மனதாலும்,உடலாலும் எதிர் கொள்ளும்

சக்தியை,அம்மா,முழுவதுமாக இழந்து போனது அவரது தோற்றத்திலேயே

தெளிவாகிப் போனது.ஆனால் மீனா!எனக்கு அம்மாவை போல அந்த புயலின்

கடுமையான தாக்கம் அப்போதைக்கு உறைக்கவில்லை .அதன் சாத்வீகமான

அழகில் மெய் மறந்து போனேன்.நாம் இங்கிருந்து கிளம்பும்போது அதற்கு

இரண்டு வயது இருக்குமா?ஆனால் இப்பொழுது நீங்கள் எல்லோரும்

அதனைப்  பார்த்தால் அசந்துதான் போவீ ர்கள்.கிராமத்திற்கே உரித்தான அந்த

தெளிவான தைரியம்,அதன்  தோற்றத்திற்கு மெருகேற்றிக் கொண்டிருந்தது".


    "அந்தப்  பெண் புயல் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.ஏன் நான் அங்கு

நிற்பதையே ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.நேராக அம்மாவை

நோக்கிச் சென்றது.அம்மா அயர்ந்து போய் அமர்ந்திருந்தார்.அவர் முன்

தன்னை சரிபடுத்தி,நெறிபடுத்தி அமர்ந்தது.மேலும் தளர்ந்து போயிருந்த

அம்மாவின் முகவாயை உயர்த்திப்  பற்றி,அம்மாவின் கண்ணை உற்று

நோக்கியபடி அழுத்தமாக,திருத்தமாக,தெளிவாக கேட்டது .உருக்குலைந்துப்

போனேன் நான்".


   மீனாவிற்கு கடிதத்தை தொடர தைரியம் வரவில்லை.அப்படியே படிக்காமல்

விட்டு  விடலாமா? என்று முதல் முறை படிக்கும்போது தோன்றிய எண்ணம்

இப்போதும் தவறாமல் திரும்பவும் தோன்றியது.ஆனாலும் தொடர்ந்து

படித்தாள்.


   "அந்த பெண் புயல் கேட்டக் கேள்வி என்னத் தெரியுமா? "ஏனாத்தா?

எங்களுக்குத்தான் சொல்லிக் கொடுத்தியாக்கும் "தந்தை தாய் பேண் "

அப்படின்னு. உம்பிள்ளைக்கு சொல்லிக் கொடுக்க மறந்துட்டேப்போல".

அம்மாவிற்கும்,பிள்ளைக்கும் பலத்த சேதத்தை ஏற்படுத்தி விட்டு வெளியேறி

விட்டது அந்தக் கடும் புயல்.நான் அந்த புயலிலிருந்து மீண்டு வருவேனா மீனா

?.கடிதம் முடிந்திருந்தது,


 

                                                                                                தொடரும்...................