Monday, December 29, 2014

15.Thai Mann

    விஜயனுக்கு இந்த வண்டிக்காரன் முருகன் போக்கும்,தன் சகோதரியின்

மௌனமும் பெரும் புதிராக இருந்தன.இவர்களிடமிருந்து எந்த பதிலும்

வராது என்று நிச்சயித்துக் கொண்ட,பின் ஒரு முடிவுக்கு வந்தவனாய்

தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.பிறகு பக்கவாட்டில் திரும்பி,

 தன்னை சுற்றிலும் உள்ள இயற்கைக் காட்சிகளை ரசிக்க ஆரம்பித்தான்.


   கிராமங்கள்  எல்லாம் ஒரு சாசுவதமான, அமைதியான, ஆரவாரமில்லாமல்,

மனதையும்,உடலையும் ஒருச்சேர சாந்தப் படுத்தும் தென்றலின் இதம்

போன்று நம்மை பல விதங்களிலும் பரவசப்படுத்துபவை.அதன் அழகை

பார்க்க ,ரசிக்க  ஆயிரம் கண்களோடு ஆயிரம் மனங்களும் வேண்டும்.அதுவும்

எவ்வித சலனங்களுமற்ற மனங்கள் என்றால்,பாரதி இயற்கையில் கண்ட

இறைவனை நாமும் அவனைப் போல மிகத் தெளிவாக உணரலாம்.அந்த

பரம்பொருளின் சித்து விளையாட்டுக்களை நமது ஐம்புலன்களும் உணரும்

போது " நான் " என்ற மமதை நம்முள் காணாமல் போகும் விந்தை  நமக்குப்

புரியும். மனம் ஒரு இனம் புரியா ஆழ்கடலில் அமைதியாக பயணம் செய்யும்.

அது ஒரு இனிமையான அனுபவம்.நம்மை அறியாமல் நம் கரம்,சிரம் எல்லாம்

இறைவன் புறம் குவியும்.


    விஜயனும் இதற்கு விதிவிலக்கல்லவே! அவன் தன்னை மறந்து,தான்

பயணம் செய்யும் திசையை மறந்து தன்னைச் சுற்றிலும் உள்ள இயற்கை

அழகில் மயங்கி,அதில் ஒன்றிப் போனான்.வண்டி தாலாட்டாய் போய்க்

கொண்டிருந்தது.வழியில்,அக்கம் பக்கத்து கிராம மக்கள், வயல் வேலை

முடிந்து சிறு சிறுக் குழுக்களாக வந்துக் கொண்டிருந்தார்கள.பலர்,தங்களுடன்

ஒரே வேலையாக ஆடு,மாடுகளையும் பற்றிக் கொண்டு வந்தார்கள்.வருகிற

வண்டி, அவர்களுக்கு எல்லாம் பழக்கமானதால்,நின்று விசாரித்து விட்டு

போனார்கள்.விஜயனை மிகவும் விசேஷமாக விசாரித்தார்கள்.அவர்களது

விசாரிப்பில்உண்மையான அன்பு கலந்த  எதார்த்தமே மேலோங்கி இருந்தது.

அவர்களது அப்பழுக்கற்ற விசாரிப்பு, ஒரு இதமான தென்றலாய்,உச்சி முதல்

உள்ளங்கால் வரை வருடிச் சென்றது.


    தமக்கையின் ஊர் வந்ததும்தான் விஜயனுக்கு தன் தமக்கையின்

குழந்தைகளின் நினைவு வந்தது.தன் தமக்கைக்கு மூன்று செல்வங்கள்.

இரண்டு மகன்கள்;ஒரு மகள்.அருமையான குழந்தைகள். தாயுடனும்,

தமக்கையுடனும் செல் போனில் பேசும்போது நிறைய விசாரணைகள்

உண்டு.என்றாலும்,அவர்களுடனோ,இல்லை மாமாவுடனோ ஒரு முறை

கூட பேசினதில்லை.பேசத் தோன்றியதில்லைஅவர்களது அடையாளம்

விஜயனுக்கு நினைவுக்கு வரவேயில்லை.விஜயனுக்கு மிகவும்

விசனமாகப் போனது.இப்போது, மாமாவையும்,குழந்தைகளையும் நேரில்

முகம் பார்த்து பேச இயலாமல்,ஒரு  இனம்புரியாத சங்கடம் வயிற்றைப்

பிசைந்தது.தாய்மாமன் உறவு எவ்வளவு ஒரு மகத்துவமான உறவு.தான்

அந்த அழகான உறவை கௌரவப் படுத்தவில்லை என்ற எண்ணம், ஒரு

ஆழமான வலியைத் தந்தது.


     விஜயன்,தன்னை சுதாரிப்பதற்குள்,தமக்கையின் இல்ல உறவுகள்

எல்லாம்,வண்டியை பற்றிக் கொண்டு அகமும்,முகமும் மலர ஒருவித

வெட்கத்துடன் வ ஒருசேர வரவேற்றனர்.எல்லோருக்கும்,முன்னதாக

மாமா அவனை வெகு கம்பீரமாக வரவேற்று,அணைத்தவாறு,வண்டியில்

இருந்து இறங்க உதவி செய்தார்.கூடவே இறங்கிய தமக்கை,ஒருவித

கலவரத்துடன் சுற்றும்,முற்றும் பார்வையை சுழல விட்டப் பின் ஒரு

ஆசுவாச பெருமூச்சு விட்டப்படி தம்பியை வீட்டுக்குள் அழைத்துச்

சென்றார்.    


 

                                                                                                    தொடரும்...........