Monday, June 23, 2014

14.penmanaikalukku udhava virumbu

    பொதுவாக பெண்மணிகளின் சிரமத்தை ,எல்லா  ஆண்களும்  புரிந்து

 கொள்வதில் ஒரு ஈடுபாடுக் காட்டினால் மிகவும் நலம் என்று தோன்றுகிறது.

ஆனால் பெரும்பாலான ஆண்கள்,பெண்களின் சிரமத்தை ஒருபோதும்

பொருட்படுத்துவதே இல்லை.இன்னும் ஒரு படி மேலே போனால் நம்ப

முடியாதபடி,  பெண்களேத்  தன்னைச் சார்ந்தப் பெண்களின் சிரமத்தைப்

புரிந்தும்,புரியாதது மாதிரி செயல்பட்டுக்   கொண்டிருப்பது ,

குடும்பத்திற்கு நன்மைப் பயக்கும் செயல் அல்ல.பணியிடங்களிலும் பண்பை

மேம்படுத்தும் செயல் அல்ல.இது குடும்பத்திலும்,பணியிடங்களிலும்  நிலவ

வேண்டிய ஆரோக்கியமான உறவை  மேம்படுத்தாது.


     குடும்பங்களிலும் சரி,பணியிடங்களிலும் சரி  பெண்ணிடம்

அனுசரணையுடன் செயல்பட வேண்டும்  என்ற அம்சம்  மிகவும்

முக்கியமானஅம்சமாகும்.இது எப்பொழுதுத்தோன்றும்?.குடும்பத்தில் எல்லா

உறவுகளும் தன்னைச் சார்ந்த பெண்  உறவுகளின்பால் அக்கரைத் தோன்றும்

போதுதான் இது சாத்தியமாகிறது.அதுபோலவே பணியிடங்களிலும்,நம்

நிறுவனத்தின் வளர்ச்சியில் நம்முடன் பணிப் புரியும் பெண்களின்  பங்கும்  

முக்கியமானது என்ற உன்னதமான உணர்வு உயிர் பெறும்போதுதான் இந்த

அனுசரணை என்ற அம்சம் சாத்தியமாகிறது.


   ஒரு பொறுப்புணர்வுள்ள பெண்மை,ஒரு இதமான மேன்மை.அவளின்

மனவலிமைக்கு நிகர் அவள்தான்.அதுதான், அவளை தன் இரத்த

பந்தங்களிலிருந்து பிரித்துக் கொண்டு வந்து எங்கு நட்டாலும்

துளிர்த்தெழுவாள்.அங்கு அவளுக்கு  சாதகமான சூழ்நிலையென்றாலும்

பாதகமான சூழ்நிலையென்றாலும்,தனக்கு அதை சாதகமாக்கி,ஒரு சிறந்த

இல்லத்தரசியாகி, மரமாகி,கிளைப் பரப்பி,காய்கனிகளுடன், கம்பீரமாக

நிற்பாள்.தனக்கு அனுசரணையாக நிற்கும் தன் குடும்பத்தையும் கம்பீரமாக்கி,

அதன் கம்பீரத்தையும்,கௌரவத்தையும் காத்து நிற்பாள்.இத்தகைய சிறப்பு

மிக்க இல்லத்தரசிக்கு,எது இன்றியமையாதது?தன் பொறுப்புகளை சிரமமின்றி

திறம்பட மேற்கொள்ள,அவளுடைய,சிரமங்களை புரிந்துக் கொண்ட

அனுசரணையாக செயல்படும் குடும்பம்தானே தேவை?.


   இத்தனை பெருமையுள்ள பெண்மை,கல்வி பெற்று,அதன் மேன்மை

உணர்ந்து செயல்படும்போது,அதன் சாதனைகளுக்கு எல்லையுண்டோ?

இம்மாதிரியான தருணங்களில் அவளுக்கு அவளது இல்லத்தைப் போலவே,

பணிப்  புரியும் இடங்களிலும்,அவளது சிரமம் புரிந்து ஒத்துழைக்கும்

இயல்பை அவள் எதிர்ப்பார்க்கிறாள். அதுக் கிட்டும்போது அவள்

பணியிடங்களிலும்,தன் பொறுப்பிற்கு தகுந்தபடி தாயாக,உடன்

பிறந்தவளாக,ஒரு நல்லத் தோழியாக தம் சகப் பணியாளர்களின் சிரமம்

குறைப்பாள்.


   சுருங்கச் சொல்வதென்றால்,இல்லங்களில் ,"இது பெண்களுக்கானப்

பணி. "என்று ஒதுக்கி,விலகியிராமலும்,பெண்களின் சுறுசுறுப்பையும்,

அவர்களின் நேர்த்தியான செயல்பாட்டையும் தத்தம் சுயநலத்திற்கு

பயன்படுத்திக் கொள்வதை தவிர்த்து,அவளது உணர்வுகளுக்கு மதிப்பளித்து,

அவளது திறமைகளுக்கு வாய்ப்பளித்து, அவளுக்கு நியாயமான உதவிகள்

தேவைப்படும்போது,குடும்பம்முழுவதும் அனுசரணையாக நிற்கும்போது,

பாதுகாக்கப் படுவது அந்தப் பெண்ணின் உடல்,மன நலம் மட்டுமல்ல.அந்த

குடும்பத்தின் உடல்,மனநலமும் கூட.அது போலவே பெண்ணின் பணியிட

செயல்பாடுகளின் சிறப்புக்கள் அனுசரணையுடன் போற்றப் படும்போது

 பணியிடங்களின் செயல்பாடுகளும் எவ்வித சிக்கல்களுமின்றி

அமைதியுடனும் பாதுகாப்புடனும் செயல்படும்.அதன்  வளர்ச்சிக்கும்

வாய்ப்புக்கள் அதிகம்.


   இன்னும் தெளிவாக செப்ப வேண்டுமென்றால்,அகத்திலும்,புறத்திலும்,

நேர்த்தியாக செயல்படும் பெண்கள் மனமாரப்  போற்றப் பட வேண்டும்.

மனமார அவளுக்கு ஒத்துழைப்புத்  தரும் பண்பு வேண்டும்.அவ்வாறு இல்லை

 எனில், எங்கும்,எதிலும் வளர்ச்சியையும்,செழுமையையும் காண்பது அரிதாகி

விடும்.இது நிதர்சனமான உண்மையாகும்.   
.    


 


   


Thursday, June 19, 2014

13.Ennai uuri niiraada virumbu

நீராடுதல் சுகம்;சுகமோ சுகம்;

அதிலும்,

 நல்லெண்ணெய் ஊறி நீராடல்  பரம சுகம்.

அதிலும்,

ஆற அமர நிதானமாய் நீராடல்

 நினைவில் நிற்கும் சுகம்.

அதிலும்,



நல்லெண்ணெயுடன், மூத்தோர் சொற்படி

சேர்க்கும் பொருள் சேர்த்து இளஞ்சூட்டில்

அன்பானக் கரங்கள் அங்கம் அங்கமாக,

 அழகாக, இதமாக,பதமாக  பாசமுடன்,

 உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை தேய்த்து வர,

அந்த பரிவின் நினைவில் நீராடல்,

 என்றும் மனதில் நிறைந்து நிற்கும் சுகம்.




இந்த இதமான நினைவுகளால் மனம் குளிர,

பதமான எண்ணெய் நீராடலால்  உடல் குளிர,

அகமும்,புறமும் அமைதியும்,ஆனந்தமுமாக களிப்புற,

வேறென்ன வேண்டும்?நாளெல்லாம் நலமுடன் ஒளிர?



ஒரு நாள் எண்ணெயை நட்பாக்கி நீராடல் ,

அது வரும் ஒரு வாரம் அகம்,புறம் நலம் காக்கும்;

எனவே வாரந்தவறாது எண்ணெய் முன் வைத்து நீராடல்,

வருடம் முழுதும் நம் அகம்,புறம் ஆரோக்கியத்திற்கு உத்திரவாதம்.



  

Tuesday, June 17, 2014

12.Thavarugalai Unardhalaiyum,Unarthudhalaiyum Virumbu

   ஒரு கற்காலம்  தற்கால  நாகரீக வளர்ச்சியின் பற்பல பரிமாணங்களில்

மிளிர்ந்துக் கொண்டு பீடு நடையுடன் மேலும், மேலும் தன் பயணத்தில்

முத்திரை பதித்த வண்ணம் முன்னேறிக் கொண்டிருக்கிறதென்றால்,அதன்

பயணத்தில் நேரிடும்,இயற்கையான இடர்பாடுகளையும், செயற்கையான

தவறுகளையும் சரியாக்கி, சரியாக்க வாய்ப்புக்கள்ஏற்படுத்தி ,அதை

நேர்படுத்திக் கொண்டவருவதனால்தான்,எல்லாத் துறைகளிலும் வியத்தகு

வளர்ச்சி ஒரு நடைமுறை போல் தன் முத்திரையைப்   பதித்துக்  கொண்டே

வருகிறது. இதன் விளைவுகள்தான் பண்பாடுகளாகவும் பிரதிபலிக்கின்றன.


   இந்த விதி,தனிமனித வாழ்வியலுக்கும் சால பொருந்தும்.அதாவது,நம்

வாழ்வில் நேரிடும் அதே இயற்கையான இடர்பாடுகளையும்,செயற்கையான

தவறுகளையும்நாம்சரியாக்க,நேர்ப்படுத்தவாய்ப்பளிக்கத் தவறினோமானால்

நம் வாழ்விலும்,நம் உறவுகளிலும் எந்த  முன்னேற்றமும் ஏற்படாது.

முன்னேற்றமே ஏற்படாதபோது முத்திரைப் பதிக்கும் தருணத்திற்கு

வாய்ப்பேது?.


   தவறுகள் ஏற்பட ஏற்படும்போது ,அதனை சரிபடுத்தும் நம் முயற்சிகள்

வலுக்க வலுக்கதான் இல்லங்களிலும், உறவுகளிலும் நாகரீகமும்,பண்பாடும்

தலைத்தூக்க ஆரம்பிக்கும்.இயற்கையான தவறுகள்,தம் தவறுகள்

உணர்ந்ததும்,உணர்த்தப்பட்டதும் தெளிவுப்படும்.செயற்கையான தவறுகள்

தாமாகவும் தெளிவுப்படாது;தெளிவுப்படுத்த வாய்ப்புகளும்

அளிக்காது.இல்லங்களிலும்.உறவுகளிலும் ஒரு ஆனந்தமான அமைதி

நிலைப் பெற வேண்டுமெனில்,நம் செயல்பாடுகளில் உறுதியான ஒருதெளிவு

வேண்டும்.நம் உறவுகளும் இந்தத்  தெளிவுப் பெற  நாம்

உறுதுனையாகநிற்க வேண்டும்.


நம் செயல்கள் சரியானவையா?இல்லையா?;நமக்கு இது தேவையா?

இல்லையா? என சீர்த்தூக்கிப் பார்க்கும் தெளிவு நமக்கும் நம் உறவுகளுக்கும்

நிலை மாறாமல் இருக்கிறதா? என்று சரிபார்த்து, சரியாக்கிக்

கொண்டு    இருந்தாலே,நம் உறவுகளின் செயல்பாட்டில்

நாகரீகத்தையும்,பண்பாட்டையும் நிலை நிறுத்தலாம்.


   நம்மை விட்டு செல்வங்களாகக் கருதப்படும் எது நீங்கினும், நமக்கென்று

நான்கு மனித உறவுகள் எல்லா வகையான செல்வங்களாக நம்முன்

நம்பிக்கையின் சின்னமாக நிற்க வழிவகுக்க வேண்டுமெனில் நாமும்

நம்பிக்கைக்கு உரியவர்களாக மாற வேண்டும்.அதற்கு சிறந்த வழி

நாமும், நமது உறவுகளும் ஒருவருக்கொருவர் தத்தம் தவறுகளை சுட்டிக்

காட்டி தமக்குள் அதை சரி செய்துக் கொள்ளும்  மானசீகமான மதி

மந்திரிகளாய் ஒருவருக்கொருவர் இருக்க முயற்சிப்பது,அகத்திலும்,

புறத்திலும் மாண்புகள் நிறைந்த உறவுகளுக்கு வழி வகுக்கும்.      


   


     


Thursday, June 12, 2014

11.Aasaiyudan Vilaiyada Virumbu.

ஓடி விளையாடு பாப்பா,

நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா.

கூடி விளையாடு பாப்பா;

ஒரு குழந்தையை வையாதே பாப்பா.


   இது பாரதியின் விளையாட்டோடு பிரியமாய் விளையாடும் வரிகள்.ஆனால்

இந்நாளில் இதன் முக்கியத்துவம் புரியாமல் அல்லது  புரிந்தும் புரியாதவராய்

அல்லது புரிந்தும் அதற்கு முக்கியத்துவம் தராமல் இருக்கும் மனிதர்களை

காணும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.


   விளையாட்டைப்  புறக்கணிப்பவர்களை,மனிதத் தன்மையை இழந்தவர்கள்

என்றேக் கொள்ளலாம்.ஏனென்றால் எல்லா விளையாட்டுகளுமே எல்லா

மனிதத் தன்மைகளையும்  குறிப்பிட்டு செப்புபவைகளாகவே இருக்கின்றன.


உதாரணமாக,

   கால்பந்து,கைபந்து மற்றும் அதிகம் பேர் பங்கெடுத்து விளையாடப்படும்

விளையாட்டுகள் -ஒற்றுமை மற்றும் ஒருவரை ஒருவர் அனுசரித்து போகும்

பண்பாடு,ஒருவருக்கொருவர் நாம் இருக்கிறோம் என்ற நம்பிக்கை,

ஒற்றுமையின் பலம் இவற்றை நாம் உணர வழி வகுக்கிறது.


   திறந்த வெளி விளையாட்டுக்களும் மற்றும் உள் கட்டமைப்பில்

விளையாடப்படும் விளையாட்டுக்களும்  நம் உடல் ஆரோக்கியத்தையும்,

மன ஆரோக்கியத்தையும் பேணிக் காக்கின்றன.இவ்விரண்டும் பலதரப்பட்ட 

விளையாட்டுக்களை  தினமும் விளையாடுவதன்  மூலம் மேம்பட்டுக்

கொண்டேஇருக்கும்.மனமும்,உடலும் ஒன்றையொன்று சார்ந்துதானே

செயல்படுகின்றன.அந்த செயல்பாட்டில் ஒரே  மாதிரியான  சமநிலையுடன்

சீராக செயல்பட விளையாட்டுக்கள் பேருதவியாக இருக்கின்றன.


   இப்பொழுதைய காலக்கட்டத்தில் அடுக்கு மாடி குடியிருப்புக்கள் ஒரு வரப்

பிரசாதமாக இருக்கின்றன.ஏனென்றால், பணிநிமித்தம் தத்தம் பூர்வீக

மண்ணிலிருந்து  இடம் பெயரும் சூழ்நிலையில்,நம் பூர்வீக மண்ணிலேயே

நாம் வசிக்கும்  உணர்வை தருபவை இந்த அடுக்கு மாடி குடியிருப்புக்கள்.

ஆனால் இந்த உணர்வின் மகிமையை பெரும்பாலான குடியிருப்புகள்

புரிந்துக் கொள்ளாதது பெரிய வருத்தமான விஷயமாகும்.அவரவர்

பகுதியில் நாள் முழுதும் அடைப்பட்டுக் கொண்டே இருந்துக் கொண்டு,

ஒரே கூரையின்கீழ் வாழும் அக்கம்பக்கத்தினரிடம் கூட ஒரு தோழமை

நிலையை வளர்த்துக்கொள்ள தயாராக இல்லாமல் இருப்பது ஒரு

நாகரீகமான  செயல் அல்ல  என்றே கூற வேண்டும்.


    இப்படிப்பட்ட சூழ்நிலையில் குழந்தைகளுக்கு ஒருவருடன் பழகி,

விளையாடி தம் எண்ணங்களை  பகிர்ந்துக்கொள்ள எங்கனம் வாய்ப்புக்

கிட்டும்?.கல்வி  ஒன்றையேக் குறிக்கோளாக கொண்டு விளையாட்டை

தம் குழந்தைகள்  புறக்கணிக்க வழி வகுக்கும் பெற்றோர்களின்  அறியாமை

.குழந்தைகளின் மனநிலையை அதிகமாகவே பாதிக்கின்றன.


   விளையாட்டுக்கள் நம்மை நாம் உணர வாய்ப்புக்களை ஏற்படுத்தி

தருகின்றன.அகமும்,புறமும் தத்தம் பலம் மற்றும் பலவீனங்களை உணர

வழி வகுக்கின்றன.தத்தம் வயதிற்கேற்ற பக்குவம் பெற வாய்ப்புக்கள்

உருவாகின்றன.அடிப்படை பண்பாடுகளை மெருகேற்றுகின்றன.பண்பாடுகள்

மெருகேற மெருகேற ஒருவரை ஒருவர் அனுசரித்து போகும் நாகரீகமும்

மெருகேறும்.மூளையின் செயல்பாடுகள் கூர்மைப் பெரும்.நமது மனம்

ஒருமுகப் படுத்தப்படும்.ஒன்றை ஒன்று சார்ந்து செயல் படும் அமைப்பில்

இருக்கும் நமது மனமும்,உடலும் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும்

சீராகவும் செயல்படுவதற்கான மேம்பட்ட வாய்ப்புக்களை, பலவகையான

விளையாட்டுக்கள் பல வகையான வாய்ப்புக்களை உருவாக்கித் தருவதால்

முரண்பாடுகளற்ற மகிழ்ச்சியான,எவ்விதமான நோய்களையும்,

அண்டவிடாத  சூழ்நிலை உருவாகும் வாய்ப்புக்கள் அதிகம்.அது நமது

 இல்லங்களிலும் பிரதிபலிக்கும்.


   அதனால் விளையாட்டின் பெருமையை உணர்த்தும், காலத்திற்கும் நிலைப்

பெற்றிருக்கும் நமது  கவி பாரதியின் கவிதைகளை மனதிலேற்றி,

விளையாட்டில்  நமது பங்களிப்பை மேம்படுத்துவது அறிவு பூர்வமான

செயல் என்பது திண்ணம்.


   


             


 

   

Sunday, June 1, 2014

10.Rasiththu,Rusiththu unna virumbu

எண்சாண்  உடம்புக்கு வயிறே பிரதானம்

தானத்தில் சிறந்தது அன்னதானம்.

மனம் நிறைந்த விருந்தோம்பலால் நிலைக்கும் உறவு,

 அதை நம் உடலுக்கு மறந்ததால்  ( மறுத்ததால் )  நம் ஆரோக்கியத்தில் சரிவு.


எதை உண்கிறோம்? ஏன் உண்கிறோம்?இந்த அசிரத்தை;

விளைவு;வஞ்சகமின்றி  நிற்கும் நோய்களின் வரிசை.

பாரம்பரிய உணவின் மகத்துவம் புரிந்துக் கொள்ள,

நம் உணவில் கவனம் செலுத்த வேண்டும்  மெல்ல.


விருந்தோம்பல் செப்பும் விருந்தின்  சிறப்பு ,

மனம் குளிர்ந்ததால் தூர நிற்கும் உறவில் கசப்பு .

நம் உடலுக்கு நம் விருந்தோம்பல்,அதன் மனதில் பதிய,

ஆர்வமாக உண்போம்,உண்ட அனைத்தும்  சரியாக செரிய.


துரித உணவு வகைகளைப் பின்தள்ளுதல் உத்தமம்;

துரிதமாக உண்பதையும் கண்காணித்தல் உத்தமம்;

ரசித்து, ருசித்து உண்ண பழகுவது மேலும் உத்தமம்;

அறுசுவை உணவை அன்புடன் பரிமாறும் அன்னை உத்தமத்திலும் உத்தமம். 


தூய நீரும்,பசுங்காய்கறிகளோடு தூய நல் பாலும்,

அவரவர் உடல்நலத்திர்கேற்ப அளவான புலாலும்,

உடற்பயிற்சியுடன் காலத்தோடு உண்ணப் பயின்றால்,

உடலும்,மனமும் ஒன்றாக,நன்றாக செயல்படுமன்றோ?