Saturday, January 3, 2015

16.Thai Mann.

   தமக்கையின் வீட்டிற்குள் நுழைந்ததும் வீட்டின் குளிர்ச்சி மிகவும் இதமாக

இருந்தது விஜயனுக்கு.உயரமான உத்தரங்களும்,விஸ்தாரம் மிகுந்த

அறைகளும்,விசாலமான முற்றமும்,பரந்து விரிந்த வாசலும்,நேர்த்தியான

பாராமரிப்பும், அதனுடன் ஒன்றியிருந்த  தூய்மையும் மனத்தைக் கொள்ளைக்

கொண்டது.தேவையற்ற சாமான்கள் கண்களுக்குத் தட்டுப் படவேயில்லை.

எல்லாம் அதற்கான தனியறையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.விஜயன்

அனுமானித்தான்.


   வீட்டில் எல்லோரும் முக மலர்ச்சியுடந்தான் இருந்தார்கள்.ஆனால்

அதையும் மீறி ஒருக் கலவரம் அவ்வப்போது எல்லோரையும்த் தொற்றிக்

கொண்டு வருவதும்,போவதுமாக இருந்தது.மாமா,"என்னத் தம்பி!ரொம்ப

நாளைக்கப்புறம் ஊர் ஞாபகம் வந்திருக்குப் போல!ஓய்வுப் பெற்றக்

கையோட அப்படியே கிளம்பி வந்துட்டிங்க போலிருக்கு.சௌக்கியமா

இருக்கீங்களா?வீட்டிலே எல்லோரும் சௌக்கியமா இருக்காங்களா?

குடும்பத்தை அழைச்சுட்டு வர சௌகரியப்படலையா?"


    மாமா என்னவோ சாதாரணமாக எதார்த்தமாகத்தான் பாந்தமாகத்தான்

 கேட்டார்.ஆனால் விஜயனுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அவனுக்கே

அவன் எதற்கு வந்தான் ஏன் வந்தான்?எது அவனை இவ்வளவு ஆக்ரோஷமாக

இழுத்துக் கொண்டு வந்தது?எத்தனை நாட்களுக்கு அவனது தாய் மண்ணில்

தங்க உத்தேசித்திருக்கிறான்?என்பது புரிபடாத போது குடும்பத்தை எப்படி

அழைத்துக் கொண்டு வருவது?.


    விஜயன் மெளனமாக மாமாவை ஏறிட்டுப் பார்த்தான்.மாமாவிற்கும்

அவனது சங்கடம் புரிந்திருக்கும் போல."சரி விடுங்க தம்பி! உங்களை

அழைச்சுட்டு வந்தாப்போல உங்க சொந்த மண்ணும்,ஊற்றும் அவங்களையும்

வெகு நாள் காக்க வைக்காமை இங்கே  அவங்க சொந்த இடத்திலே கால் பதிய

வைக்கட்டும்".மாமாவின் ஆதங்கம் தெளிவாகப் புரிந்தது.தன் குடும்பத்தை

பார்க்கும் ஆவல் அவரது ஒவ்வொரு வார்த்தையிலும்,அவரது உடலின்

ஒவ்வொரு  அசைவிலும் துல்லியமாகத் தெரிந்தது.உடலின் மொழியை நாம்

சரியாக மொழிப் பெயர்க்க தெரிந்தோமானால்,அது உண்மையைத் தவிர

வேறு எதையும் சொல்வதில்லை என்பது நிதர்சனமாகப் புரியும்.


    அதற்குள் அவனது தமக்கை,அவரது இரு மகன்கள் மற்றும் மருமகள்கள்

மற்றும் பேரக்குழந்தைகள் உதவியுடன்,ஒரு பெரிய மேசையை  நடு வீட்டில்

வைத்து,அதன் மேல் ஒரு மெல்லிய வெள்ளைத் துணி விரித்து மாலை நேர

பலகாரங்களை சுட சுட ஒன்றன் பின் ஒன்றாக அழகாக பரப்பி வைத்தார்.

அந்த பலகாரங்களின் பலதரப்பட்ட இதமான  வாசங்களும்,அது பரப்பி

வைக்கப்பட்ட அழகும்,கண்களையும்,நாவையும் ஒரு சேர சுவைக்க

அழைத்தன.


    எல்லோரும் ஒன்றாக அங்கங்கு அமர்ந்து அளவளாவிக் கொண்டே

ருசித்து உண்டனர்.ஒரு குடும்பத்தின்,அதன் அங்கத்தினர்களின்  அன்பின்,

கௌரவத்தின் பலமான,ஆழமான இழையை  நாம் சென்ற சிறிது

நேரத்திற்கெல்லாம் நம்மால் இனம் கண்டுக் கொள்ள முடியும்.விஜயனின்

தமக்கையின் குடும்பத்தில் அந்த அன்பான,பண்பான இழை எல்லோரையும்,

எல்லோருடனும் அந்தந்த உறவு முறைக்கேற்ப நேர்த்தியாக பிணைக்கப்

பட்டிருந்தது.அது மட்டுமில்லாது,ஒவ்வொரு தம்பதிகளுக்கு இடையிலான

அந்த காதலும்,நேசமும் அதை அவர்கள் வெளிபடுத்தும் விதமும்,இதமும்

தென்றல் எழுதும் கவிதை.


     ஒருவருக்கொருவர் உபசரிப்பதென்ன!ஒருவரை ஒருவர்

பரிகாசிப்பதென்ன!அவர்களது சரீரம்தான் வெள்ளந்தியாக அதிகம்

பேசியது.அதில் எல்லா வகையான அன்பின் ஆழமும் பிரதிபலித்தது.மிகவும்

இனிமையான ஒரு அனுபவம் விஜயனுக்கு.சிறிது நேரம் ரசித்து,ருசித்து

உண்டபின் விஜயன் கேட்டான்."ஆமாக்கா!எங்கே  நம்மக் கடைக்குட்டி

செல்லம்மா?"உடனே அங்கே சிறு சலனமும் இல்லாத நிசப்தம்.

தமக்கையிடமிருந்து ஒரு பெரும் பெருமூச்சுடன் ஒரு திகிலான பதில்

வந்தது.


     "அவசரப் படாதே தம்பி!அந்த பத்ரகாளியே ருத்ரதாண்டவமாடி உனக்கு

தரிசனம் தருவாள்".






                                                                                             தொடரும்..........