Wednesday, August 20, 2014

9.Thai Mann.

   விஜயனுக்கு தனது சொந்த மண்ணை நெருங்க நெருங்க அந்த மண்

சம்பந்தப் பட்ட எல்லா விஷயங்களும் அலைஅலையாய் வந்து மனதில்

மோதி மோதி சென்றன.ஒரு பக்கம் இந்த இருபது வருடங்களாக சொந்த

மண்ணை மிதிக்காமல் அதாவது மதிக்காமல்  இருந்த விளைவால், உற்பத்தி

ஆகிக் கொண்டேயிருந்த அந்தக் குற்ற உணர்வு அவனை தகித்துக்

கொண்டிருந்தது. இன்னொரு புறம் தன் அன்புத் தாயையும்,தன்  அன்பு

சகோதரியையும் இதுவரை கடிதங்கள் மூலம் பார்த்தும்,பேசியும் வந்துக்

கொண்டிருந்த கனவுத் தருணங்கள் இப்போது நிஜத் தருணங்களாக மாறும்

நெகிழ்வு நெருங்கிக் கொண்டிருப்பதை எண்ணும்போது பாசமும்,நேசமும்

மாறி ,மாறி அவன் நெஞ்சில் மோதி அவனைத் திக்குமுக்காடச் செய்தன.


   விஜயன் தான் கொண்டு வந்த பொருள்களை எல்லாம் சரிபார்த்து விட்டு

விமான நிலையத்திற்கு வெளியே வந்தான்.மிகவும் அதிகமான

பொருள்கள்தான்.விமானத்தில் அனுமதிக்கப்பட்ட எடை வரை பலதரப்பட்ட

பொருள்கள் அவன் முன்னால் பரந்து விரிந்து கிடந்தன.பலதரப்பட்ட

சொந்தங்களுக்கும்  தன் பாசத்தையும், நேசத்தையும் , மரியாதையையும்

 உணர்த்தும் விதமாக அவரவர் இயல்புக்கு ஏற்ப அளிக்கப்பட வேண்டிய

பொருட்கள்.பெரிய வண்டியாகவே பார்த்தான். 


   விஜயன் பயணம் செய்த அந்த வண்டியின் ஓட்டுனர் விஜயனின் தாய் மொழி

பேசுபவர்தான்.முதலில் மிகவும் உற்சாகமாக பேச்சைத் துவக்கினார்.ஆனால்

விஜயனின் உற்சாகமற்ற பதிலைக் கேட்டதும்,அவர் தன் விசாரணையை

நிறுத்திக் கொண்டு,வண்டியில் இசைத்துக் கொண்டிருந்த இசையின் ஒலி

அளவை சற்று அதிகப்படுத்திவிட்டு,சாலையில் கவனம் செலுத்தினார்.    உண்மையில் அந்த ஓட்டுனரின் பாடல் தொகுப்பு மிகவும் சிறப்பானதாக

இருந்தது.பயணத்திற்கு மிகவும் ஏற்றதாக இருந்தது.ஒவ்வொருப்

பாடலும் பயணம் செய்பவரை அவருக்கு அறிமுகமான ஏதாவது  ஒரு

பிராயத்திற்கோ அல்லது அவருக்கு அறிமுகமான ஏதாவது ஒரு

சூழ்நிலையின் பின்னணிக்கோ சென்று சேர்த்து,சேர்த்து ,மீட்டு,மீட்டு

வந்தது.   உண்மையில்,உற்சாகமான மன நிலையில் பயணம் செய்பவர்கள்

அந்தப் பாடல்களின் தொகுப்பை மனமார இரசித்திருப்பார்கள்.அந்த இனியப்

பாடல்களின் தொகுப்புக்கு உரிமையாளரான அந்த வண்டி ஓட்டுனரையும்

வெகுவாக பாராட்டி இருப்பார்கள்.இன்னும் சொல்லப்போனால் பயணம்

செய்பவரின் பிராயத்திற்கு ஏற்ப நேர்த்தியான நல்லப் பாடல்களை இசைக்கச்

செய்வதில் அந்த ஓட்டுனருக்கு ஒரு சாதுரியம் இருப்பதாகத் தோன்றியது.

ஆனால்,இதை எல்லாம் உள்வாங்கும் மனநிலையில் விஜயன் இல்லை.

அதாவது அவன் மனம் அவனிடத்தில் இல்லை.அதுதான் உண்மை.
   அது மட்டுமின்றி விஜயனுக்கு  இன்னொரு முக்கியமான விஷயமும்

புரியவில்லை.புரியவில்லை  என்பதை விட பெரும் புதிராக வேறு இருந்தது.

அவனை அயல் நாட்டில் இருக்க விடாமல் இப்படி இரும்புப் பிடியாய்

இழுத்துக் கொண்டு வருவது எது என்பதை அவனால் அனுமானிக்கவே

முடியவில்லை." ஒருவேளை அம்மாவின் இறுதிக் காலம் நெருங்கி

விட்டதோ! ".அந்த எண்ணம் அவனைத் தூக்கி வாரிப் போட்டது.பெரும்

திகிலடைந்துப்  போனான்.


   விஜயனை அவ்வப்போது கவனித்துக் கொண்டு வந்த அந்த நடு வயது

வண்டி ஓட்டுனருக்கு,விஜயனின் முகபாவம் மிகவும் கலக்கம் ஏற்படுத்தியது.

அவர், வண்டியின் இசையை முற்றிலும் நிறுத்தினார்.வண்டியின் வேகத்தை

படிப்படியாகக் குறைத்து வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தினார்.நன்றாக

விஜயன் பக்கம் திரும்பி,"ஸார்! இன்னும் ஒரு கால் மணி நேரத்தில் ஊர் வந்து

விடும்.ஆனால் உங்களுக்கு ஏதோ உடம்புக்கு முடியலை போலிருக்கு.போற

வழியில் எனக்குத் தெரிந்த டாக்டரிடம் காட்டி விட்டுப் போவோமா!

ஒவ்வொரு ஐந்து கிலோ மீட்டருக்கும்,ஒரு டாக்டரின் நம்பர் என்னிடம்

இருக்கிறது.என் வண்டியில் ஏறும் பயணிகளுக்கு  உதவத்தான் இந்த

 ஏற்பாடு .பாவம்!எவ்வளவு தூரத்திலிருந்து என்ன என்ன வேலை விஷயமாக

வருவார்களோ தெரியாது.என்னால் முடிந்த ஒரு சிறிய உதவி;நிறைய

பேருக்கு இந்த ஏற்பாடு மிகவும் உதவியாக இருக்கிறது ".என்று மிகவும்

பரிவுடன் பவ்யமாகக் கூறினான்.


   விஜயன் இப்போதுதான் அந்த வண்டியின் ஓட்டுனரைத் தெளிவாகப்

பார்த்தான்.தன் பணியில் ஒரு நிறைவுப் பெறும் ஒரு தெளிந்த முகம்.பார்க்க

விருப்பம் உண்டாகும் முகம்.அந்த முகத்தின் களையில் ஒரு வசீகரம்

இருந்தது.அகம் மலர்ந்தால்தான் இந்த மாதிரி ஒரு முகம் மலரும்.தன்னைக்

காண்போரை  எல்லாம் மலரச் செய்யும்.வியந்தான் விஜயன்.அந்த வியப்பின்

ஊடே," இல்லேப்பா!எனக்கு ஒன்றும் இல்லை.நானே ஒரு டாக்டர்தான்.அயல்

நாட்டிலிருந்து நிரம்ப நாள் கழித்து சொந்த ஊர் பார்க்க வர்றேன்.எனது

அம்மாவையும்,அவரை கவனித்துக் கொண்டிருக்கும் எனது அக்காவையும்

பார்க்கும்போது நிலைத் தடுமாறாமல் இருக்க வேண்டுமே என்ற

கவலைதான். ஆனாலும்,பயணிகளுக்கான உன்னுடைய சமயோசித ஏற்பாடு

மிகவும்  நல்ல ஏற்பாடு. கடவுள் என்றும் உன் நல்ல மனதிற்கு பக்க பலமாய்

இருப்பார்" என்று மனதார வாழ்த்தினான்.


   அந்த வண்டி ஓட்டுனருக்கு மனம் நிறைந்த மகிழ்ச்சி." நிரம்ப சந்தோஷம்

ஸார்!உங்களை மாதிரி பெரியவங்க வாழ்த்து என்னைப் போன்றோரை

இன்னும் நாலு நல்லது செய்ய உற்சாகப் படுத்தும் ஸார்! நான் சந்தோஷப்

பட்ட மாதிரியே உங்க சொந்த ஊரிலேயும் உங்களுக்கு நிறைய

சந்தோஷங்கள் காத்துக்கிட்டிருக்கும் ஸார் !.கவலைப் படாமே உங்க ஊர்

மண்ணிலே  உங்க கால்களை பதிய விடுங்க ஸார்!.இப்போ போலாமா ஸார்!"


    அந்த ஓட்டுனரின்,அந்த ' ஸார்!ஸார்! ' இல் இருந்த பவ்யமும்,அக்கறையும்

விஜயன் மனதை வெகுவாக இலகுவாக்கின.சீராகச் செல்லும் வண்டியைப்

போலவே விஜயனது எண்ணங்களும் சீராயின.அவனது சொந்த ஊரும்

நெருங்கிக் கொண்டிருந்தது.                                                                                     

 part10                                                                                                     தொடரும்............   

Monday, August 18, 2014

8.Thai Mann.

   ஒன்றை நாம் புரிந்துக் கொண்டால் நல்லது நடக்க வாய்ப்புகள்

அதிகம்.அதாவது, உலகத்திற்கான பொதுவான நியாயத்திற்கு உட்பட்டு நாம்

செயல்படுவோமானால்,ஒவ்வொரு விஷயத்திற்கும் நாம் நம் மனதுடன்

கலந்து ஆலோசிப்போம்.நம் மனதின் உன்னத குணமே உள்ளதை

உள்ளபடியே உணர்த்தும் குணம்தான்.


   நம் மனம்,ஒரு செயல் நடைமுறைப்படுத்தபடுவதற்கு முன்பே அதன் சாதக,

பாதகங்களை ஆராயும்.நமக்கும்,நம் மனதிற்கும் இடையே நிலவும்

ஆழ்ந்த,ஆரோக்கியமான  நட்பைப் பொறுத்து அதன் கணிப்பின் சதவீதம்

உயரும்.அந்த கணிப்பின்படி செயல்பட நமக்கு "உடுக்கை இழந்தவனுக்கு

கைப் போல " என்ற வள்ளுவன் வாக்குப்படி நமக்கு உற்ற நண்பனாய்

உண்மையாய்,உறுதியாய் நம்மோடு இணைந்து செயல்படும் தன்மை மற்றும்

வல்லமைக் கொண்டது.ஏறக்குறைய எல்லாமே அதனதன் பாதைகளில்

சரியாக செயல்படும்.


   ஆனால்,உலக நியாங்களின் வழி முறைகளை புறக்கணித்து நம் சொந்த

நியாங்களை முன் நிறுத்தி சுயநலமாக  செயல் படுவோமானால்,நமது மனது

தனது முதல் எச்சரிக்கை மணியை ஒலிக்கும்.ஆனால்,நாம் அதை கேட்காதது

போல பாவனையுடன் மேலும்,மேலும் எதிர்மறையாக செயல் படும்போதும்

அது தன் எச்சரிக்கையை அவ்வப்போது தொடர்ந்துக் கொண்டே

இருக்கும்.பிறகுதான்  தன்  முயற்ச்சியை கைவிட்டு உறங்குவதாக பாவனை

செய்யும்.நம்முடைய ஆர்ப்பாட்டமான வாழ்க்கை முறையில்,நம் மனதின்

எந்த எச்சரிக்கையையும் நாம் கவனத்தில் கொள்ளும் நிலைமையில் நம்

நிலை இருக்காது. விளைவு; நமக்கும்" ஓய்வு "  என்ற அந்த காலத்தின்

கட்டாயமான தருணங்கள்,  நமது சகல ஆர்ப்பாட்டங்களையும் முடக்கும்

 தருணங்கள்,நமக்கு   இரண வலித் தரும் தருணங்களாக மாற வாய்ப்புகள்

அதிகம்.


   இப்போதுதான் நாம் நம் தனிமையை உணர்வோம்.நம் தனிமையை விரட்ட

பிறர் உதவியை நாடி,நாலாபுறமும் பார்வையை படர விடும்போதுதான்

நமக்கேத் தெரியும்.நாம் பொருள் குவிக்க மேற்கொண்ட முயற்சிகளில்,ஒரு

சதவீதமாவது ஒரு இதமான உறவை நம்முடன்  நிலை நிறுத்தும்

செயல்பாட்டில் இருக்கவில்லை என்ற உண்மை உறைக்கும்.போதாதக்

குறைக்கு வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சுவது போல,நமது மனதின்

உண்மையான ,உறுதியான,வலிமையான  நீதிமன்றத்தில்  குற்றவாளிக்

கூண்டில் நாம் நிறுத்தப் படுவோம்.தன் சுய நலத்திற்காக, சொந்த

நியாயங்களை முன் நிறுத்தி செயல்படும் எவருக்கும் இந்த நிரந்தர வலித்

தரும் தருணங்களிளிருந்து  தப்பவே முடியாது.


   இந்த நிலைமையில்தான் விஜயன் இருந்தான்.இறுதியாக அப்பாவின்

இறுதிச் சடங்கிற்கு வந்தது.இருபது ஆண்டுகள் உருண்டோடி விட்டன.

அப்போது,மகளுக்கு ஏழு  வயது.மகனுக்கு ஐந்து வயது.அப்பா வழி தாத்தா,

பாட்டியின் உறவையே, குழந்தைகள் இந்நாள் வரை உணராமல் இருந்த

குற்றத்திற்கு தான்தான் காரணமாகி விட்டோம்  என்று உணர்த்திய, உறுத்திய

உண்மையை எதிர் கொள்ள இயலாமல் மருகினான் விஜயன்.ஒரு வழியாய்

விமானப் பயணம் ஒரு முடிவுக்கு வந்தது.அம்மாவிற்கு தான் வரும்

விவரத்தை கடிதம் மூலம் முதலிலேயே தெரியப் படுத்தி இருந்தான்.


   ஆனால்  விஜயனுக்குத் தெரியாத விவரம் ஒன்று உண்டு. இன்னும் ஒரு

நூறு கிலோமீட்டர் தாண்டி,தன்  சொந்த கிராமத்தில் தான் கால் பதிக்கும்

போது,தனக்காக ஒரு மனித வெடி குண்டு ஆக்ரோஷத்துடன் காத்துக்

கொண்டிருப்பது விஜயனுக்கு தெரியாது.
part9                                                                                                         தொடரும்........  

   


Saturday, August 16, 2014

7.Thai Mann.

    விஜயன் விமானத்தில் பறந்துக் கொண்டிருந்த போது பலதரப்பட்ட

நினைவுகள் அவன் மனதில் அலைமோதிக் கொண்டிருந்தன.தன் தாயைப்

பற்றி எண்ணும்போது மனம் ஒரு நிலையில் இல்லை. தன்னைப் பெற்று,

வளர்த்து ஆளாக்கிய தன் அன்னைக்கு ஒரு சாதாரண  மகனாகக் கூட தான்

தன் அடிப்படைக் கடமைகளை செய்யவில்லை.சாதரணமாக சொல்லி

விடலாம் நம் பெற்றோர் நம்மைப் பெற்று வளர்த்து ஆளாக்கினர்  என்று.

ஆனால் ஒவ்வொரு பருவத்திலும் அந்தந்த பருவத்திற்கான கஷ்டங்கள்

 மாளாது.உயிர் போய் போய் வந்துக் கொண்டிருக்கும்.


     கரு உருவாகி அது வளரும் அந்த பத்து மாதங்களும் அந்தத் தாய் தன்

வாய் ருசி மறக்க மற்றும் மரக்கச் செய்யும் அந்த ஆரம்ப,மத்திய,இறுதி கால

சிசு வளரும் காலங்கள், அந்தந்த காலங்களின் சிரமங்கள்,பல வகையான

உடல்வாகும்,மனவாகும் கொண்ட  தாய்மார்களை , பல வகையான

இன்னல்களுக்கு உட்படுத்தும் சித்திரவதைகள்.பெறப் போகும் தாயின்

 நிலைமை இப்படி என்றால்,தந்தையின் நிலைமை வேறு விதமான

சித்திரைவதைகள்.


  முதல் சித்திரவதை தமது நினைவுக்கு வந்து வந்து அச்சுறுத்தும் தமது நிதி

நிலைமை.சுக பிரசவமாக வேண்டுமே என்றக் கவலை. பிரசவத்திற்கு பின்,

தாய் தெம்புடன் நடமாடும் வரை,மனைவி மேற்பார்வையிட்ட

அனைத்தையும்,தான் மேற்பார்வையிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்

நிலைமை.குழந்தை பிறந்ததும்,அதை கௌரவமாக வளர்த்து ஆளாக்க

வேண்டுமே என்ற கவலை.


    தனது நிலைமையைத் தாண்டி தனதுக் குழந்தைக்கு செய்யத் துடிக்கும்

மனது.ஆரம்பக் கல்வி முடியும் முன் தன் குழந்தைக்கு நல்லதை, நல்லது

அல்லாததை தெளிவாக்கும் முயற்சியில் தானும் தன் மனைவியும் அதன்

பருவத்திற்கு இறங்கி செயல் படும்போது அதற்கு புரிய வேண்டுமே

என்றக் கவலை.பத்து வயது வரைதான் குழந்தை.


   அடுத்த பகுதியில் இருந்து பள்ளி இறுதி வரை பல வகையான கவலைகள்

பெற்றோர்களுக்கு.ஆசிரியரிடமிருந்து எந்த விதமான புகார்களும் வராமல்

பார்க்க வேண்டும்.நல்ல நண்பர்களின் சேர்க்கை வேண்டும்.இனக்

கவர்ச்சியால் பாதிக்கப்படாமல் ஆண்,பெண்ணின் ஆரோக்கிய நட்பை

ஆரோக்கியமாக புரிந்துக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.

படிப்பின் முக்கியத்துவத்தை புரிய வைக்க வேண்டும். அதன் மூலம் தன்

கடமைகளை நிறைவேற்ற தேவையான வாழ்க்கை மேம்பாடுகள் பற்றிய

ஒருத் தெளிவை தன் குழந்தை மனதில் ஆழப் பதிய வைக்க வேண்டும்.

தனது இந்த செயற்பாட்டை தன் குழந்தை சரியாக உள்வாங்கிக் கொள்ள

வேண்டுமே என்ற பெருங்கவலை.


    இதையெல்லாம் சாத்தியமாக்கும் முயற்சியில் தன் நிலைமையைத் தாண்டி

செயல் படும் வேகம்.இந்த வேகத்தில்,தங்களது நலனையும்,சுக

துக்கங்களையும் மறந்து குழந்தையை ஆளாக்கி விட்டு,இப்போது நமக்கு

எல்லா விதத்திலும் பக்க பலமாக இருப்பான் என்று அவன் (ள் ) முகம்

பார்த்தால்,ஏதேதோ  காரணங்களைக் காட்டி,முதலில் ஒரு தற்காலிகப்

பிரிவை ஏற்படுத்தி,பிறகு ஒரு நிரந்தரப் பிரிவை ஏற்படுத்திக் கொள்ளும்

விஜயனைப் போல வாரிசுகளுக்கு எதுக் கிட்டும்.மனச் சிதைவு நோய்தான்

பரிசாகக் கிட்டும்.


   அதுவரை, தான் உறங்குவதாக பாவனை செய்துக் கொண்டிருக்கும் மனது,

தனது உடல் தளர்ந்த பிறகு,அதன் விளைவான அதன் இரைச்சல்களும் ஓய்ந்த

பிறகு, எழுந்து நிற்கும் பாருங்கள்.அது தன் சாட்சிகளுடன் நீதிக் கேட்க நிற்கும்

தோரணம் நம்மை அச்சத்தில் உறைய வைக்கும். பிறகு அது தன்

வலிமையான வாதங்களை தனது வலிமையான சாட்சிகளுடன் நிசப்தமான

பின்னணியில் உரக்க உரைக்கும்போது நமது சப்த நாடியும் ஒடுங்கி

விடும்.அந்த உண்மைகள் உரைக் கல்லில் பட்டுத் பட்டுத் தெறிக்கும் ஒலி,

நம் வாழ்நாள் முழுதும் நம்மை சித்திரைவதைகுட்படுத்தும்.
     அதைத்தான் விஜயன் தனது விமானப் பயணம் முழுவதும்

அனுபவித்துக் கொண்டிருந்தான்.                                                                                       
  part8                                                                                                  தொடரும்........

  

             Wednesday, August 13, 2014

6.Thai Mann.

   தாய் நாட்டிற்கு நிரந்தரமாக திரும்ப விஜயனும்,மீனாவும் முடிவெடுத்ததை

 அவர்களது குழந்தைகளால் ஒத்துக் கொள்ளவே முடியவில்லை.அதுவும்

தங்களை பேசி முடிவெடுக்காமல்,தன்னிச்சையாக தம் பெற்றோர் முடிவு

எடுத்ததை அவர்களால் நம்பவே முடியவில்லை.இருவருக்கும் கோபமோ

கோபம்.


   மீனாதான் அவர்களை மிகவும் சிரமப்பட்டு சாந்தப் படுத்தினாள்.முதலில்

ஸ்ரீதருக்குதான் தெரியபடுத்தினாள்.அவனது ஆர்ப்பாட்டத்தை பார்த்து,"ஸ்ரீ!

எதுவானாலும் முதலில் நானும்,அப்பாவும் பேசி ஒரு முடிவெடுத்து,அதற்கு

பின்தானே உங்களிருவரிடமும் கலந்து ஆலோசிக்க முடியும்.உங்களை

ஆலோசிக்காமல் நாங்கள் எப்படி ஒரு இறுதி முடிவு எடுக்க முடியும்?"


   ஸ்ரீதர் ஒன்றுமே பேசவில்லை.அவனுக்கு என்ன பேசுவதென்றே

தெரியவில்லை.அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.மீனா

தொடர்ந்தாள்." அப்பா,பணியில் இருந்து ஓய்வுப் பெற்ற பிறகு நம் பாட்டியுடன்

இருக்க விருப்பப் படுகிறார்.ஆனால் அவர் எந்த விதத்திலும் என்னை தன்  கூட

வரச் சொல்லி கட்டாயப் படுத்தவும் இல்லை.ஆனால் எனக்குதான்

 அவரை தனியாக அனுப்ப விருப்பம் இல்லை.அதனால்தான் நானும் அவர்

கூட செல்ல முடிவு செய்தேன்".


   அப்பொழுதும் ஸ்ரீதர் ஒன்றும் பேசவில்லை.மீனாவே தொடர்ந்தாள்.

"அக்காவையும்,மாமாவையும் அழைத்து பேசலாம்.பிறகு எல்லோரும்

சேர்ந்து ஒரு முடிவெடுக்கலாம் ".ஆனால் ஸ்ரீதர் கூட ஒத்துக் கொண்டாலும்

ஒத்துக் கொள்வான் போல் தோன்றியது.ஷைலஜா ஒத்துக் கொள்ள

மறுத்தே விட்டாள்.அவளுக்கு ஒரு விதமான பயம் தோன்றியிருக்க

வேண்டும்.இதுவரை  பெற்றோரின் அருகாமை அவளுக்கு ஒரு

தெம்பையும்,அமைதியையும்,சந்தோஷத்தையும் தந்துக் கொண்டு

இருந்தது.இப்போது அவர்களது திடீர் முடிவு அவளை கலவரப் படுத்தி

இருக்க வேண்டும்.மிரண்டுப் போனாள்.அவளது நிலையை பார்த்து

விஜயனுக்கே மிகவும் சங்கடமாகி விட்டது.


   விஜயன்,தன் அன்பு மகளின் அருகில் வந்து அமர்ந்தான்.அவளை தன்

மீது ஆதரவாக சாய்த்து ஆசுவாசப் படுத்தினான்." ஷைலுமா! ரிலாக்ஸ்!

நாம் எல்லோரும் சேர்ந்து முடிவு எடுக்க இன்னும் மூன்று  மாதங்கள்

இருக்கின்றன்.அப்பொழுதும் உங்களால் ஒத்துக் கொள்ள சிரமமாய்

இருக்குமென்றால் ஒன்றும் பிரச்சனை  இல்லை.அம்மா உங்ககூட

இங்கேயே இருக்கட்டும்.இப்போதுதான் அம்மாவிற்கு பதவி உயர்வு வேற

வந்திருக்கு.அதனால்  நான் மட்டும் பாட்டியை பார்க்க கிளம்பறேன்.எனக்கு

பாட்டியை எப்படா  பார்க்கப் போறோம்னு இருக்கு.என்ன அப்பா

கிளம்பட்டுமா?"


   ஷைலஜாவிற்கு அப்பாவை பார்க்க பாவமாக இருந்தது.இத்தனை காலம்

பிரிந்திருக்கும் தன் தாயைப் பார்க்கும் ஏக்கம் ஏகத்திற்கு அவர் முகம்

முழுதும் வியாபித்திருந்தது.அவள் ஒரு முடிவுடன்,"சரி அப்பா ! நீங்கள்

முதலில் கிளம்பி செல்லுங்கள்.பிறகு ஒரு முடிவெடுப்போம்". என்றாள்.

ஆனால் மீனாதான்  இருதலைக் கொள்ளி எறும்பானாள்.


       அதன் பிறகு,மூன்று மாதங்கள்  முடிந்து பணி  ஓய்வுப்  பெற்ற விஜயன்,

ஒருவாறு தன் பணியிடம் நிர்வாகத்தையும், தனது இல்லத்து

அங்கத்தினர்களையும் சமாதானபடுத்தி விட்டு,ஒரு பக்கம் கனத்த

இதயத்துடனும், மறுப் பக்கம் தான் காணப்  போகும் தன்  தாயின்

சந்தோஷமான நினைவுகளுடனும் தன் தாய் நாட்டிற்கு விமானம்

 ஏறினான்.         


        
Part 7
                                                                                                         தொடரும்............

Tuesday, August 12, 2014

5.Thai Mann.

   விஜயனுக்கு மீனா கூறிய சந்தோஷமான செய்தி உண்மையிலேயே

மிகவும் நல்ல இனிமையான செய்தி.நம்மையும் நமது பணியையும்

அங்கீகரித்து,உனக்கு அளிக்கப்பட்ட பதவி உயர்வுக்கு உனது மேலாண்மை

திறமையும்,உனது பணியின் நேர்த்தியும் தகுதியானவைதான் என்று  நமது

நிர்வாகம் நமது தன்னம்பிக்கையை  உயர்த்தி, நமக்களிக்கும் உயர்ந்த

விருதுதான்  இந்த பதவி உயர்வு.தகுதியான பதவி உயர்வு,நிர்வாகம்  தன்

பணியாளர்களிடமிருந்து பெறும்  " விசுவாசம் " என்ற மிகப் பெரிய, மதிப்பு

 மிக்க " போனஸ் " ஆகும். ஆனால் இவ்வளவு நல்ல செய்தியைக் கேட்ட

பின்பும்,விஜயனின் கலக்கம் இன்னும் அதிகரிக்கிறது என்றால்,அவனது

மனதின் சங்கடம் ஆழமானதாகத்தான் இருக்க வேண்டும்.மீனா

அனுமானித்தாள்.


   விஜயன் இன்னும் மீனாவை பார்த்துக் கொண்டேயிருந்தான்.ஆனால்

அவனது கவனம் முழுவதையும் வேறெதுவோ ஆக்ரமித்துக் கொண்டு

இருப்பது மீனாவுக்குத் தெளிவாகப் புரிந்தது.விஜயனிடம்  இன்னும்

நெருங்கி அமர்ந்து,இன்னும் சிறிது கூடுதலான வாஞ்சையுடன் அவனது

கைகளை வருடியபடி, " ஜெய்! " என அவன் முகம் தொட்டுத் திருப்பினாள்.

திடுக்கிட்டுத் திரும்பினான் விஜயன்.


    மீனா,அவனை சகஜ நிலைக்கு திருப்ப அவனை சீண்டினாள்."என்னது!

இப்போவெல்லாம் ஐயா பலத்த யோசனைமயமாய் இருக்கிறீர்?உங்களது

சகதர்மிணிகிட்டேயும் சிறிது பகிர்ந்து கொண்டால் நலமாக இருக்கும்

அல்லவா?.மறுகணம் பக்கென்று சிரித்து விட்டான் விஜயன்.தன்  காதல்

மனைவியை இறுக அணைத்தபடி,"பெண்களை  ஏன் சக்திமயமாய் உருவகப்

படுத்துகிறார்கள் தெரியுமா?". "ஏனாம்"?.கொஞ்சினாள் மீனா.


   "அட இந்த அழகான கொஞ்சலுக்கு ஒரு ராஜ்ஜியத்தையே பரிசளிக்கலாம்.

ஆனால் ராஜ்ஜியத்துக்கு நான் எங்கே போவேன்?". என்று   நிஜமாகவே

கவலைப் பட்டான் விஜயன்."அதான் " சற்று யோசித்தவன் " நம் குடும்பம் "

என்று மனம் நிறைந்து வந்த ஒரு பெண், தான் வந்து சங்கமித்த குடும்பத்துடன்

 இழைந்து,எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் ஒரு தெளிவுடன் செயல்

படும் அந்த சக்தி பெண்களுக்கே உரியது மீனா!அதனால்தான் பெண்களை

சக்திமயமாய் உருவகப்படுத்துக்கிறார்கள் என தோன்றுகிறது". என்று

ஆழ்ந்த குரலில் அமிழ்ந்து கூறினான்.


   " எல்லாம் சரி! ஐயா இன்னும் விஷயத்திற்கே வரலேயே! ஏன்னா,

எனக்கு இந்த அன்பான ராஜா கிட்டேயிருந்து இன்னொரு ராஜ்ஜியமும் பெறக்

கொள்ளை ஆசை".விஜயனின் மனதை இலகுவாக்கினாள் மீனா.இப்போது

விஜயன் மனம் மிகவும் இலேசாகிப் போனது.மனம் தெளிந்தது. மீனாவின்

பக்கம் நன்றாகத் திரும்பி,"மீனா நான் சொல்றதை கேட்டப் பிறகு உன்

ஆலோசனையை சொல்லு".


    சற்று இடைவெளி விட்டுத் தொடர்ந்தான்." எனக்கு என்னமோ தெரியலே!

இப்போது எல்லாம் அம்மா ஞாபகம் அடிக்கடி வருது.ஊரில்

அக்காவின் மேற்பார்வையில் விட்டுட்டு வந்தாலும் மனது மிகவும் சங்கடப்

படுகிறது.அப்பாவின் காலத்திற்கு பிறகு, இந்த இருபது வருடங்கள்அம்மாவை

மிகவும்  தனிமைப் படுத்திவிட்டோமோ என்று மனம் மிகவும் சஞ்சலப்

படுகிறது மீனா! இதுவரை ஓய்வில்லாதப் பணியினால் எனக்கு இந்த

எண்ணத்தின் தாக்கம் புரியவில்லை என நினைக்கிறேன்.ஆனால் இப்போது

ஓய்வுப் பெற்றப் பிறகு இந்த எண்ணம் என்னை அனலில் இட்ட புழுவாக

வருத்தும் போல் இருக்கிறது.எனக்கு இனி அம்மா கூடவே  இருக்கலாம்

எனத் தோன்றுகிறது.உன்னையும் அழைத்துக் கொண்டு போகத்தான்

ஆசை.ஆனால் உன்னை நிர்பந்திக்க மாட்டேன்.வேண்டுமானால் நீயும்,

ஸ்ரீதரும்  இங்கே இருங்கள்.நான் போய் அம்மாவை அழைத்து வர மீண்டும்

ஒரு முறை முயற்சி செய்கிறேன்.அப்படி அவர் திரும்பவும் வர மறுத்தால்,

நான் ஒரு இரண்டு வருடம் அவருடன் இருக்கிறேன்.பிறகு சூழ்நிலை

எப்படி அமையும் என்று பார்ப்போம்".


     மீனா யோசிக்கவே இல்லை."அட! இது மிகவும் நல்ல விஷயம்தானே!

இதற்காகவா இவ்வளவு நாட்கள் இப்படி அல்லாடிக் கொண்டிருந்தீர்கள்?.

ஏறக்குறைய நானும்உங்கள் நிலமையில்தான் இருந்தேன்.எப்போடா  நம்ப

சொந்த பந்தமெல்லாம்  பார்ப்போம் என்றிருந்தது.அப்பாடா! இப்போதுதான்

மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.நாம் கிளம்புவதற்குள் சில ஏற்பாடுகள்

செய்ய வேண்டி இருக்கு.அதை நான் பார்த்துக் கொள்கிறேன்.இப்போதைக்கு

 நம்  ஸ்ரீதர்  இங்கேயே இருக்கட்டும்.நம் இருவரும் எப்போது கிளம்பலாம்

 என்று முடிவு செய்து விட்டு டிக்கெட்டிற்கு ஏற்பாடு செய்து விடுங்கள் ".

மிகவும் இயல்பாகச் சொன்னாள் மீனா.


    மீனாவின் இந்த இயல்பான பதிலில் அயர்ந்துதான் போனான் விஜயன்.    Part 6                                                                                             தொடரும்........


                                                                                             

                                                                                                                          

 


 


    

Friday, August 8, 2014

4.Thai Mann.

   இனிமையான இரவு நேரங்கள்,விஜயனுக்கும்,மீனாவுக்கும் மிகவும்

பிடித்தமான நேரங்கள்.ஒன்பதைரைக்குள் இரவு உணவை முடித்துவிட்டு,

மகனுடன் ஒரு அரை மணிநேரம் போல் அளவளாவுதல் மிகவும்

சந்தோஷமான தருணங்கள்.அதுவும் மகளும்,மகனும் சேர்ந்து விட்டால்,

தங்களது பெற்றோரின் தலைகளை உருட்டிக்கொண்டே இருப்பதுதான்

அவர்களது முழு நேர வேலையாக இருக்கும்.சிரிப்பு சத்தம் கேட்டுக்

கொண்டே இருக்கும்.


   அவர்கள் தன் தாய்க்கு வைத்தச்  செல்ல பெயர் ' ட்யுப் லைட் '.அவர்களது

'டைம்லி ஜோக்ஸ் ' எதுவும்அவளுக்கு எளிதில் புரியாது.ஏன்,தொலைக்காட்சி

விளம்பரங்கள் பலவும் குழந்தைகளின் விளக்கத்திற்கு பிறகுதான்

புரியும்.ஆனால் விஜயன் அவர்களுக்கு சரிக்கு சமமாக ஈடு கொடுப்பான்.

மீனா,விஜயனிடம் எப்போதும் ஆச்சரியப்பட்டுக் கொண்டே இருப்பாள்.

" இந்த தலைமுறைக்கு எப்படித்தான் எல்லா விஷயங்களும் மின்னல்

வேகத்தில் புரிகிறதோ ".சமயங்களில் இந்தத் தலைமுறையின் வேகம்

பயந்தரும் விஷயமாக கூடத் தோன்றும்.


   பல சமயங்களில் அவளுக்கு தோன்றுவதுண்டு.தனது தலைமுறை வரை

எல்லா வகையான மாற்றங்களும் ஒரு நிதானத்தில் மாறிக் கொண்டிருந்தன

என்றும்,ஆனால் இந்த தலை முறையிலிருந்து மாற்றங்களின்  வேகம்

தாக்குப் பிடிக்க முடியாததாய் இருக்கிறது  என்றும் தோன்றியது.

அதன் வேகத்திற்கு ஈடு கொடுப்பது  இயலாத காரியமாய் தோன்றியது.


   குழந்தைகளுடன் கொண்டாடிய சந்தோஷமான தருணங்களை கூடவே

அழைத்துக் கொண்டு அவைகளை மடியில் இருத்தி,தங்களது படுக்கை

அறையின் பால்கனியில்,இரவு நேரத் தென்றலை அனுபவித்தப்படி,

வானுலகை ரசித்தபடி ,தம்பதிகள் தங்களுக்கே தங்களுக்கான தருணங்களை

அளவளாவிக் கொண்டாடும் அருமையான அடுத்த அரை மணி நேரம்,

தம்பதிகள்  இருவருக்கும் மிகவும் பிடித்தமான நேரமாகும்.


   அன்றும் எப்போதும் போல எல்லா கலகலப்புகளையும் உள்வாங்கி படுக்க

செல்லும்போது மணி எப்போதும்போல பத்தரை ஆகிவிட்டது.சரி,விஜயனின்

வாட்டும் முகத்தை முதலில் நேராக்க தனது சந்தோஷ செய்தியை முதலில்

பகிர்ந்துக் கொள்ளலாம் என மீனா முடிவெடுத்தாள்." ஜெய்!உங்களுக்கு ஒரு

சந்தோஷமான விஷயம்".என்றபடி விஜயனின் கைகளை ஆசையுடன்

அள்ளித் தன் கைகளுக்குள் சிறைப் படுத்தினாள்.விஜயன் ஆவலுடன் அவள்

முகம் பார்த்தான்.


   " எனக்கு பதவி உயர்வுக் கிடைச்சிருக்கு".சொல்லும்போதே மீனாவின்

முகமெல்லாம் சந்தோஷத்தில் பூரித்திருந்தது.அதில் திளைத்தபடி," ஜெய்!

பதவி உயர்வினால் நமது பணியின் மதிப்பும்,நம் நிதி நிலைமையும் உயரும்

என்பதை விட,நமது பணியில், நமது செயல்பாட்டுக்கள், ஒரு சரியான

கோணத்தில்,ஒரு  சரியான அங்கீகாரம்  பெற்று, நமது உயர்வுக்கு வழி

வகுத்திருக்கின்றன என்பதை நினைக்கும் போதுதான்,நமது சந்தோஷம் ஒரு

நிறைவுள்ளதாக தோன்றுகிறது".என்று லயித்துக் கூறி  அவன்  முகம் பார்க்க,

 அந்த முகத்தின் கலக்கம் இன்னும் அதிகரிப்பதைக் கண்டு திகைத்துப்

போனாள்  மீனா.Part 5                                                                                                     தொடரும்....

 

  

Wednesday, August 6, 2014

3.Thai mann.

    விஜயனுக்குப் பெண் பார்க்க முடிவு செய்தபோது ஒரு குடும்ப நண்பர்

மூலம் மீனாவின் குடும்பம் அறிமுகமானது.விஜயனுக்கு பார்த்த முதல்

பெண் மீனா.முடிவானப் பெண்ணும் மீனாதான்.சாமிப் படங்களுக்கு

முன்னால் குத்து விளக்கு  நிதானமாக ஒளிரும்போது ஒரு அழகான

அமைதிப் பெறுவோமே,அது மாதிரி அழகுடன் அழைத்து வரப்பட்டாள்.

 
     மீனாவின் மாநிறத்திற்கு  அந்த இயற்கையான அலங்காரங்களும் ,சற்றுப்

பெரிய கண்களுடன்  இழைந்த மையும்,அளவான கூந்தலில் பெருமையுடன்

குடியிருந்த அளவான மலர்களும்,அதன் அளவான வாசனையும்,

எல்லாவற்றிற்கும் மேலாக,மீனாவின் இயற்கையான பதவிசும்,

விஜயனுக்கு மிகவும் வித்தியாசமாய் இருந்தன.அது மட்டுமின்றி தன்னை

ஒத்துக்கொண்டாலும்,நிராகரித்தாலும் அதனால் பாதிக்கப் படாதவள் போல்

தோன்றினாள்.


   அவன் பணிப் புரியும் அயல் நாட்டில் பளீர் பளீர் எனப் பெண்களை பார்த்து

விட்டு இந்தக் கண்ணை உறுத்தாத மென்மையான அழகு விஜயனை மிகவும்

வசீகரித்தது.தன்  பெற்றோரிடம் தன்  சம்மதத்தை தெரிவித்தான்.ஆனால்

மீனாவிற்கு விஜயனை பார்த்ததும் என்னவோ நெடுநாள் பழகிய நல்லத்

தோழனாய் தெரிந்தான்.திருமணத்திற்குப் பிறகு இந்த உணர்வைப் பற்றி

 பலமுறை   விஜயனிடம் சிலாகித்திருக்கிறாள்.


   திருமணம் இனிதே முடிந்தது.உற்றமும்,நட்பும் சூழ்ந்து மனம் நிறைந்து

வாழ்த்த, இறைவனின்உதவியையும்,வழிக் காட்டலையும் வேண்டிப்

பெற்றுக் கொண்டு,விஜயனும்,மீனாவும் தங்கள் இல்லறப் பயணத்தை

இனிதே தொடங்கினர்.


    மனைவியை மதிக்கத் தெரிந்த கணவன் விஜயன்.எந்த மனிதனுக்கு தன்

பெற்றோரை மனமார மதிக்கத் தெரிந்திருக்கிறதோ,அந்த மனிதனுக்கு தன்

மனம் நிறைந்த மனைவியையும் மதிக்கும் பண்பும்  தானாகவே தளிர்க்கும்.

மீனாவின் இயல்புக்கு ஏற்றாற்போல்,அவளது விருப்பப்படி மருத்துவமனை

நிர்வகிக்கும் படிப்பை படிக்க வைத்து,தனக்கு தெரிந்த வேறொரு மருத்துவ

மனையில், பகுதி நேரப் பணி கிட்ட ஆவன செய்தான் விஜயன்.


   மீனாவிற்கு மிக திருப்தியாக அமைந்தப் பணி.அவளது அகம்,புறம்

இரண்டையும்,இலகுவாக்கி கொண்டு செல்வதில் விஜயன் கண்ணும்,

கருத்துமாயிருந்தான்.இறைவன் அருளால் அருமையான இரண்டு

குழந்தைகள்.இப்பொழுது பெரியவளுக்கு அதே அயல் நாட்டில் வரன்

அமைந்தது.இரண்டு வயதில் ஒருக் குழந்தை இருக்கிறது.தம்பதிகள்

தத்தம் பணியில் அருமையாக ஜொலிக்கிறார்கள்.இருவரும் தத்தம்

பெற்றோருடனும் தத்தம் மாமியார்,மாமனாருடனும் கணிவாகத்தான்

 இருக்கிறார்கள்.என்றாலும் பெண்ணை  இன்னொரு இல்லத்திற்கு

இனிதாக அனுப்பியப் பிறகு சிறிது ஆரோக்கியமான இடைவெளி

இருப்பது இருக் குடும்பத்தார்க்கும் நல்லது என்று மீனவுக்குப் பட்டது.

அதன்படி நடந்து வருகிறாள்.

   மகனுக்கு இப்போது பெண் பார்த்தாலும் நல்லதுதான்;இல்லை ஒரு இரண்டு

வருடம்   அவனது பணியின் பயிற்சிக் காலம் முடிந்து பார்த்தாலும் சரிதான்.

எல்லாமே சரிதான்.ஆனால் சில நாட்களாக வாடிக் கொண்டிருக்கும்

விஜயனின் முகம்தான் சரியாகவே இல்லை.மிகவும் விசனப் பட்டாள்

மீனா.தன்னை கண்ணில் வைத்து இமை மூடி காக்கும் தன் அன்புக் கணவன்

இனியும் தானே தன்  மனதை திறப்பான் என்றிருப்பது பெரும் பிசகு என்றுத்

தோன்றியது.இன்றிரவு அவன் மனதின் சுமை இறக்க உதவி செய்வது என்று

உறுதிக் கொண்டாள்.மேலும் இவன் இப்படி இருக்கும்போது தனது

மகிழ்ச்சியான செய்தியை எப்படி பகிர்ந்துக் கொள்வது என விழித்தாள்

மீனா.                                                                                                 தொடரும்........

      
Part 4
 

 
  

Monday, August 4, 2014

2.Thai mann

   ஒருவரின்  உடலுக்கு ஓய்வுக் கிட்டும் போதுதான் தன் மனதிற்கும் ஓய்வுத்

தேவை என்பதை அந்த  உடலே அப்பொழுதுதான் உணரவே ஆரம்பிக்கும்.இது

இயற்கை.அந்த நிலைதான் இப்பொழுது விஜயனுக்கும்.கடந்த சில

தினங்களாகவே அவனது மனம் ஒரு நிலைக் கொள்ளாமல் தத்தளித்துக்

கொண்டிருந்தது.அது தன்  பணியை பாதித்து விடுமோ, என அவன் மிகவும்

கவலையுற்றான்.


   ஆனால் அவன் பணி என்றும்  இறை பணி  என்பதை அவன் என்றும்  மனதில்

இருத்திக் கொண்டதாலோ என்னவோ,இறைவன் அருளால்அவனது

பணியிடத்தில் அவனது மனம் முழு ஈடுபாட்டுடன் ஒத்துழைத்தது.

ஆனால் பணி  முடிந்து வீடு திரும்பியதும்,அவனது மனம் எதற்கோ ஏங்கி

தவித்தது.அதன் ஏக்கம் எதை சார்ந்ததாக இருக்கும்?.விஜயனால் இனம் காண

இயலவில்லை.


    அவனது வீட்டில் அவனது அன்பு மனைவி மீனாவிற்கு தன் சிநேகிதக்

கணவனின் நிலைக் கண்டு சிறிதுக் கலக்கமானது.ஒரு வார இறுதி

நாளில் உறங்குவதற்கு முன் தன்  கணவனின் கரம் பற்றி "ஏன் ஜெய்(மீனா தன்

செல்லக் கணவனை செல்லமாக அன்புத் ததும்ப  இப்படித்தான்அழைப்பாள்)

அந்த அழைப்பில் ஒரு இயல்பான இதம் இழைந்தோடும்.அந்த இதம்

 விஜயனின் இதயத்தை நெகிழ வைக்கும்.


   அவர்களது குழந்தைகள் மூத்தவள் ஷைலஜாவும்,இளையவன் ஸ்ரீதரும்

விஜயனை  பல மகிழ்ச்சியானத் தருணங்களில் "  அம்மாவின் ஜெய் '

என்று அழைத்து சீண்டுவதுண்டு.  " ஏன்  ஜெய்!இப்போதெல்லாம

முகம் அடக்கடி வாடிப் போகிறதே! உடம்புக்கு முடியலயா?".விஜயன் தன்

அன்பு மனைவியை ஏறிட்டுப் பார்த்தான்.


   மீனாவிற்கு வயதே ஏறாது  என்றுத் தோன்றியது.இவளும் நம்மூரில் தன்

 பட்டப் படிப்பை  முடித்து விட்டு இங்கு  வந்து இந்த அந்நிய மண்ணில்

தன இயல்புக்கு ஏற்றாற்போல் ஒரு படிப்பைத் தேர்ந்தெடுத்து,  ஆர்வமுடன்

'ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் ' கோர்ஸ் முடித்து ஒரு மருத்துவ மனையில்

 பணிப் புரிகிறாள்.


   நம் பாரதத்தின் கலாச்சாரத்தை இயன்ற மட்டும் காத்துக் கடைப் பிடிப்பாள்.

நம்மூர் பண்டிகையெல்லாம் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

குழந்தைகளின் உடை விஷயங்களில்கூட அதிகமாகத் தலையிடுவதாக

குழந்தைகளின் குற்றச்சாட்டு.ஷைலஜா தன்  திருமணத்திற்கு

பிறகுதான்,தன் விருப்பப்படி நவநாகரீகமாக உடையணிந்துக்

கொள்வதாகப்  பீற்றிக் கொள்வாள்.இருநூறு மைல்களுக்கு அப்பால் அந்த

அயல் நாட்டிலேயே இருக்கிறாள்.மாப்பிள்ளை நம்மூர்தான்;நம் சனம்தான்.

நல்ல மாதிரி.பெற்றோருடன்  அந்த அயல் நாட்டிலேயேகுடியிருக்க

குடியுரிமைப் பெற்றவர்கள்.


   மாப்பிள்ளை பெண் இருவரும் மீனாவிடம் பதவிசாக நடந்துக்

கொள்கிறார்கள்.மீனாவும்,தன் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளத்

தெரிந்துக் கொண்டிருக்கிறாள்.அதிகமாக அவர்களது விஷயத்தில்

தலையிடுவதில்லை.விஜயனையும்தலையிட விடுவதில்லை.மகன்

ஸ்ரீதருக்கு பெண் பார்க்க வேண்டும்தான்.மூத்தவள் குடும்பம் போலவே

இங்கேயே ஒரு நல்லக் குடும்பமஇறைவனருளால் ஸ்ரீதருக்கு அமைந்து

விட்டால் நல்லதுதான்.மீனாஅடிக்கடி இப்படி  எண்ணிக் கொள்வாள்.


    இப்படி இருக்கும்போது எப்போதும் கலகலவென இருக்கும் விஜயன் கடந்த

சில நாட்களாக அமைதி இழந்துக் காணப்படுவது மீனாவிற்கு சிறிது திகிலாக

இருந்தது.                                                                                                       தொடரும்......


Part 3               

Friday, August 1, 2014

1.Thai mann

     அது ஒரு அயல் நாட்டில் வசிக்கும் ஒரு இந்தியரின் இனிமையான

இல்லம்.அயல்நாட்டுவாசியாகி விளையாட்டுப் போல முப்பது

 வருடங்கள் முயல் குட்டி வேகத்தில் பறந்து விட்டன.இல்லத்

தலைவனான விஜயனுக்கு நம்பவே முடியவில்லை.


   விஜயன் இருதய சம்பந்தமான மருத்துவத்தில் நிபுணன்.அவன் பணிப்

புரியும் அந்த பிரசித்திப் பெற்ற மருத்துவமனையில் அவன் இருதயத்திற்கும்,

 அவனது இருதய மருத்துவ நிபுணவத்திற்கும் ஒரு  இதமான இடமுண்டு.

அவனது சக பணியாளர்களுக்கு அவனை மிகவும் பிடிக்கும்.அவனிடம், தம்

நோய் தீர்க்க வருபவர்களுக்கு,அவனை மிக மிகப் பிடிக்கும்.விஜயன் ஒரு

வித்தியாசமானவன்.சமயங்களில் நோய்க்கு சிகிச்சை அளிக்கும்போதே,

தனக்கு உதவியாக இருக்கும் மருத்துவர்களுக்கு அது சம்பந்தமான பாடம்

எடுப்பான்.


   ஒருவருக்கு பணியிலிருந்து ஓய்வு என்பது காலத்தின்கட்டாயம்.அதற்கு

சில மாதங்களுக்கு முன்பாகவே அவர்களது மனம் அவர்களை அலைகழிக்க

ஆரம்பித்துவிடும்.அடுத்து என்ன செய்வது என்பதே புரியாத புதிராக

இருக்கும்.அதற்கு விஜயனும் விதி விலக்கல்ல.ஏனெனில், அவனும்

ஒய்வுப் பெறும்  தருணத்தில் இருந்தான்.இன்னும் மூன்றே மாதங்கள்தான்

இருக்கின்றன.


ஆனால் அவன் பணிப் புரியும்  மருத்துவமனை விஜயனது

ஆரோக்கியத்தையும், அவனது சேவைக்கு இருக்கும் ஆரோக்கியத்தையும்

அதனால் அந்த மருத்துவமனைக்கு கிடைக்கும் பெயர்

ஆரோக்கியத்தையும்,பண வரவின் ஆரோக்கியத்தையும்

மனதிலும்,கணக்கிலும் கொண்டு விஜயனுக்கு இரண்டு ஆண்டு பணி

நீட்டிப்புக்கு உத்தேசிப்பதாக செவி வழி செய்தி.


   ஆனால் விஜயனுக்கு வேறு விதமான உத்தேசம் இருந்தது. அதை செயல்

படுத்துவதற்கான உத்வேகமும் இருந்தது. 

 
Part 2
                                                                                                                    தொடரும்.......