Wednesday, July 30, 2014

6.varamadhai

நண்பனே!ஆரோக்கியமான நட்புக்கு

வயதும்,ஆண் ,பெண் என்ற வேறுபாடும்

ஒரு பொருட்டே அல்ல;அதில் பரிசுத்தமான

அன்பான அக்கறையே மேலோங்கி நிற்கும்.


அத்தகைய அன்பான நட்பு வட்டத்திலிருந்து

நானும் ஒரு சிநேகிதியாக,என்னிடமிருந்து

ஒரு சிநேகிதமான விண்ணப்பம்;குடிக்கு மகனாக

 மாறிய,மாறுகின்றவரே அதை சிறிது பரிசீலிப்பீரோ!


ஒன்றும் அவசரம் இல்லை;மதுவின் பிடியிலிருந்து,ஒரு

 சிறுகணம் அவகாசம் கிட்டும் உனக்கு;.நம்பிக்கை உண்டு

எனக்கு;அந்த சிறு கணத்தில் எனது அக்கறையின் ஆழம்

புரியும் உனக்கு; ஏனெனில் எனது நம்பிக்கைக்கு ஆழமதிகம்.


புதிதாக செப்ப ஏதுமில்லை;ஒன்றை மட்டும் நினைவூட்ட

 விருப்பம்;மனிதனின் அடையாளம் அவன் ஈட்டும் மரியாதையாம்;

 அவன் வாழ்நாள் முழுதுமது  நிழலாய் தொடர வேண்டுமாம்; அதை,

சங்க  இலக்கியம் மூலம் நம்முள் அழுந்த பதித்தார் நம் ஆசான்.


அதை மட்டும் நினைவூட்ட விருப்பம்;அதை மறப்பாயோ?

அந்த மரியாதையின் மதிப்பை துறப்பாயோ?,அதை மறக்கடித்து,

உன்னையும் மரக்கச் செய்யும் குடி விலக்கி உன் வரமனைத்தும்

தொலைக்காமல் இருப்பாயோ? இருப்பாய் என நம்புகிறேன்.


ஏனெனில்,ஏற்கனவே கூறியிருக்கிறேன் எனது

நம்பிக்கைக்கு ஆழம் அதிகம் என்று. எனவே

முகமன் கூறி  விடை பெறுகிறேன்.மானிடப் பிறப்பின்

வரமதை உனக்கு உணர்த்தும் என் முயற்சி வெற்றிப் பெறும்,                                    என்ற நம்பிக்கையோடு.                           

Monday, July 28, 2014

5.Varamadhai...........

மனிதன்  மனிதனாக உள்ள வரை

இந்தக் கேள்விக்கு இடமே இல்லை;

மனிதன் குடியிடம் தன்னை தத்துக்

கொடுத்தவனாயின்  இந்தக் கேள்விக்கு

பதிலளிக்கக் கடமைப் பட்டவன்;கேள்வி?

குழல்,யாழின் இனிமைக் கூட,மழலை மொழிக்குப்

பின்தான் என்ற வள்ளுவன் மொழி உணர்ந்ததுண்டோ?.

உன் மழலைக்கு,உன் தோழமையை உணர்த்தியதுண்டோ?


மழலை எவ்வயதாயினும்,அன்பையேக் கோரும்;

யாரிடம்?.வேறரிடம்?.பெற்றோரிடம்தானே! அதுவும்

 குறிப்பாக வெளியுலகில் தம்மை பலமாக்கும்

தந்தையிடம்தானே! அந்த எதிர்பார்ப்பில் இருக்கும்

மழலைக்கு திகட்ட திகட்ட உனதன்பை வாரிப்

பொழிந்த திருப்தி என்றேனும் உன்னிடம் ஊறியதுண்டா?

நீ ஊறிக் கிடந்ததெல்லாம் அந்தக்  குடிக்கெடுக்கும் குடியெனில்,

 உன் அன்பின் ஊற்றுக் கண்ணைத் திறப்பது எங்கனம்?


தந்தை மகனு(ளு)க்கு ஆற்றும்  உதவியும்,மகன்(ள் )

தந்தைக்கு அளிக்கும் நன்றியும், வள்ளுவன் வாக்குப்படி,

ஒருவரை ஒருவர் பெருமைப் படுத்தும் தருணங்களன்றோ!

அந்தத் தருணங்களின் மறுப் பரிமாணமன்றோ வாழ்க்கை?

அந்த அன்பு வாழ்க்கையின்,அந்த அற்புதமான தருணங்களின்

மகிமையை  நீயும் உணராமல்,மற்றவரும் உணர விடாமல்,

குடும்பம் என்ற கோயிலில் உன் குலம் கற்பதைத் தடுக்கும்

 உன் குடி நிறுத்தாமல்,மழலை வரமதை தொலைப்பாயோ?.   

Friday, July 25, 2014

4.varamadhai..........

ஒன்றை புரிந்துக் கொண்டால் மனிதா!

என்றும் நன்று உனக்கு;என்றென்றும்; உன் 

உடன் பிறந்தோர் உன் உற்ற நண்பர்கள் எனில்,

உன்னுடன் இறுதி வரை உடன் வருபவர் 

அதுவும் நிழலாய்,தன் இன்னுயிர், உடல்,

பொருளனைத்தையும் உனதாக்கி,உன்னை 

உருவாக்கி,அகமுகம் மலர, உன்னுடனேயே 

உலா வரும் உன் மனைவி உன்னுயிர் தோழியன்றோ!


உயிர் தோழமைதன் மதிப்புயர்த்தி தன்னுயிர் 

ஈந்தோர்  வரலாற்றின் பெருமை பல கேள்வியுற்றும்,

உன்னுயிர் தோழி,உனதருமை மனைவிதன் 

மதிப்புயர்த்த ஏதேனும் துரும்பை நகர்த்த உனக்கு  

உத்தேசமுண்டோ?இல்லை உன்குடியது, கூர்வாளதுக் 

கொண்டு " அவளது வாழ்நாள் நாள், நான் அவளை 

வாட்டும் நாள் " என அவளை,உன் உயிர்த் தோழியை 

உன் குடி வதைப்பதை  வேடிக்கைப் பார்ப்பாயோ?


உன் இல்லத்தரசி உன் இல்லத்திற்கு ஒளியூட்டியதற்கு

நீ காட்டும் நன்றி,அவள் கற்றுப் பெற்ற பட்டத்தை 

காற்றில் பறக்க விட்டு  நீ அவளுக்குத் தரும் பட்டம்;

" குடிக்காரன் மனைவி"  என்ற குனிவுத் தரும் பட்டம்;

" உன் குழந்தைகளுக்கு ஒரு நல்லத் தந்தையாக  

தேவைப்படும் முதல் தகுதி, அவர்களது தாயின் 

மதிப்பை உயர்த்துவதுதான் " என்ற மூத்தோர் சொல் 

மறந்து,மனைவி என்ற வரமதை தொலைப்பாயோ!   


 Monday, July 21, 2014

3.Varamadhai...........

பெற்றோரை மதிப்போடு பேணும்போது ,

நம் மதிப்பின் அஸ்திவாரம் பலம் பெறுதல் உறுதி.

அதை நம் உடன்  பிறப்போடு  உடன்பட்டு

கட்டம் கட்டமாக கட்டடமாக உயர்த்தும்போது,

உயர்வது ஊரில் உன் மதிப்பின் பல(ம் )ன் மட்டுமல்ல;

உன் முன்பின் வம்சத்தின் மதிப்பின் பலமும் பலனும்   

உயரக் காண்பாய் உன் தெளிந்த மனதின் விளைவாய்.

ஏனென்றால்,தெளிந்த மனம்  இறைவனின் மனம்.


இந்தத் தெளிந்த மனதை,  இந்த இறை மனதை,

தெளிவின்மைக்கு,ஆம்!தெளிவே  இல்லாமைக்கு     

வித்திடுவது வேறென்ன?மதுதானே!இதிலேது சந்தேகம்?.

மனிதரின் மாண்பை சிதைப்பதுவும், சீர்கெடுப்பதுவும்

மதி கெடுக்கும் மதுவன்றோ!இதை மறந்திடலாமோ?.

மதி பிழையின்றி இருக்கும்போதே மயங்கும்

தருணங்கள் ஏராளம்;இதில் மதிக் கெடுக்கும் மதுவின்

தருணங்களைப்  பற்றி விளக்கமும் வேண்டுமோ?.


பெற்ற பெற்றோரை தூற்ற செய்யும் மதுவது உன் 

உடன் பிறந்தோரை உடனிருக்க விடுமோ?.உடன்

பிறந்தோரின் நேர்மையான கூர்மையான செழுமையான

பலத்தை இந்த சீர்க் கெடுக்கும் மதுவின் பெயரால்

இழப்பதுவும் தர்மமோ?உடன் பிறப்புடன் ஆரோக்கிய

வாழ்நாள் உறவு ஒருப்  பெரிய வரம்.மறப்பாயோ!

 அதை மறந்து புதைச் சேற்றில் விழுவாயோ! விழுந்து,

அந்த அரிய  கிடைத்தற்கரிய வரமதை தொலைப்பாயோ!         

Friday, July 18, 2014

2.Varamadhai.........

அன்னையின் தோளோடுத்  தோளாக

அருமைத் தந்தை; அவரே தம் மழலைகளின் ஆசானாக;

அத்தந்தையின்  அருமைப்  புரியும் ;பெருமைத் தெரியும்

 தவமறிந்த,தவத்தின் பலனறிந்த வாரிசுகளுக்கு.


மண்ணோடு மண்ணாய் மட்கிப் போவதற்கு முன்

மைல் கணக்கில்  உள்ளது மாதா பிதாவிற்கான

நம் நன்றியைப்  பேணும் கணக்கு;மனதில்

பதிக்க வேண்டிய நம் கடமையின்  கணக்கு.


இவ்வுலகைக் காண வாய்ப்பளித்ததற்கே

இப்பிறப்பில் நம் நன்றிக் காணுமோ அவர்களுக்கு?,

இதன் பிறகு வளர்த்து ஆளாக்கியதற்கு நன்றிக் கூற 

இன்னும் எத்தனைப் பிறவி வேண்டுமோ!


நானறியேன் பராபரமே!என பரம்பொருளுக்கு

நம் நன்றியை சேர்க்க நமக்குத் தெரிந்தால்,

நம் அன்னையும்,பிதாவும் முன்னறி தெய்வமென ,

நம் நன்றி தெய்வத்திற்கு முன் நம் பெற்றோரிடம் சேர்வது உறுதி.


இதனை மறந்து இன்னார் மகன்  என்றக் 

குலப்பெருமை மறந்து, குடியினால்

குப்புற விழுந்து,கூடி நிற்போரின் ஏச்சும் பேச்சும் பெற்று,

குன்றாய்  பலம் தரும் தந்தை வரமதை தொலைப்பாயோ?. 


 
   

  

Wednesday, July 16, 2014

1.Varamadhai.............

அன்னை உண்ண அமர்ந்தாள் :

தன்னை மறந்து உண்ண  அமர்ந்தாள் ;

ஆம்!தன்னை மறந்து தான் உண்ணும் உணவின்

தன்மையை மறந்து எதற்கு உண்கிறோம்,

ஏன் உண்கிறோம் என்று தன் நிலை மறந்து

அன்னை உண்ண  அமர்ந்தாள்.


வழக்கம் போல் தடதடவென கதவினை

இடிக்கும் சத்தம்;அச்சத்ததால் அதன்

விளைவுகளின் அச்சத்தால் இன்னும்

ஏதோதோவினால் அயர்ந்தது போய்

சுவர்மேல் சரிந்து போய் இன்னும்

உண்ணவும் முடியுமோ என்று கலங்கினாள் அன்னை.


கதவு திறக்கப்பட்டது;உள்ளே ஒருக் காலும்,

வெளியே ஒருக் காலும் இருக்க ஆடிக்கொண்டு

தள்ளாடிக்கொண்டு நின்றான் தலைமகன்;

குடி, குடியை மட்டுமின்றி சகலத்தையும் கெடுத்ததை

அறிந்தானோ அன்றி அறிந்தும் அறியாதிருந்தானோ

ஆண்டவனே உன்னைப்போல் அவன் மட்டுமே அறிவான்.


அன்னையின் அரவணைப்பை தவிர்த்து,

அவள் அவனை  தன் உறவு சங்கலிகளில்

பிணைக்க முயற்சிக்கும் அவளது பாசம் மறந்து

எப்படியும் சகலத்தையும் தொலைத்து வந்து

நிற்பான்  எனத்  தெரிந்தும், அவன்  தந்தையிடம் வலுவில் நின்று

அவன் விருப்பப்படி பாகம் பிரித்தாள்;பிரிந்தது சகலமும்.


சகலமும் பிரிந்ததுமல்லாமல்,பிரித்ததுமல்லாமல்,

இறுதியில் அன்னையின் ஆயுட்காலமும்  என் கையில்

என அவளது உணவையும் உடலையும் பிரித்து

அவளது உயிர் பறிக்க முனைந்தாயோ மூடனே!

 ஆண்டவன் அருளிய முதல் வரம் நமதருமை அன்னை;

அதை  அந்த  வரமதை தொலைப்பாயோ!