Monday, April 28, 2014

6.Sila kavi thuligal.

                                             
                 இன்றைய கல்வி 


 குண்டுச் சட்டிக்குள்  

    குதிரை ஓட்டம்,சரிப்படுமோ?

      சரி,இப்போது சரிப்படாது என்று 

        கல்வி முடிந்து சிலிர்த்து 

           எழ முயற்ச்சிக்க எனது,ஆம் 

             எனது  இயல்பே மறந்து போய் 

               புரியாதப் புதிராய் என் 

                 எதிர்காலம்.திகிலாகி போனது.
                                                                                    
              மனிதம் 


மனிதம் பேணு.மகத்துவமான 

  பண்பாடு அது.உலக அரங்கில் 

    பாரதத்திற்குத் தனியிடம்.காரணம் 

      அதனிடம்  என்றும் எதற்கும் ஈரம்.


                                                                            

   இயல்பு இயற்யாகைனால்  ஓசோனில் ஓட்டையாம்;

   விளைவுகளாய் பலப் பல 

       பயமுறுத்தல்கள்.ஆனாலென்ன?

          உனது ஒவ்வொரு பிறந்த நாள் 

             இனிப்பாக,ஒரு மரக்கன்று;

                இயற்கை அன்னைக்கு.

                   குளிர மாட்டாளோ?

                     ஓட்டையை குறைக்க மாட்டாளோ?
        தன்னம்பிக்கை


உன் இடம் உன்னிடம்;பயணம் 

  உயரமோ,தாழ் நிலமோ,

    அவ்வப்போது வந்து போ 

       உன்னிடமே;அது போதும் 

          சகலமும் அதனதன் 

            சரியான பாதைகளில். 
                 ஒற்றுமை 


ஊர் குருவி பருந்தாகாதாம்;

  பருந்தாக எண்ணவும்  ஏன்  தடை?

    சரிபோகட்டும்.பேசுவோர் பேசட்டும்;இதோ 

      பல ஊர் குருவிகள்,ஒன்றாகி,திடமாகி, 

        பருந்தாகி,இவ்வுலக பந்தையே 

          அசைத்துக் காட்டுகிறதே! 
                  நேரம் 


நேரமில்லை;நேரம் 

  காணவில்லை;அட! இது

   நேர்மையான வாதமில்லை;

     நேரத்தின் முகத்தை நேரெதிரே 

       காண அதற்கு முன்னல்லவா

         செல்ல வேண்டும். 
                    கடவுள் மொழி 


கடவுள்  எங்கே? கருணை எங்கே?

  எனப் புலம்புவோரே! கடவுளின் 

    கருணை புரிபடவில்லை எனில்,

      தவறு நம்மீது .எதில்?அவனது 

        மொழியை சரியாக,மிகச் சரியாக,

           மொழிப் பெயர்ப்பதில்.
             நேர்மறை மனம்


ஒன்றை நினை;அதுவும் நல்லதாக;

  அதையே நினை, திரும்பத் திரும்ப;

    அது ஆழமாகும்;அதுவும் தானாக;

      நம் முயற்சியும் தீவிரப்படும்;பிறகென்ன?

       ஆழமான நல் விதை வீணாகாமல் 

         விஸ்வரூப  விருட்சமாகும்;இது விதி;

            உலக நியதி;இதனை நம்பு நீ.

                                                                                                                   
                                                      

                 

Thursday, April 24, 2014

5.Saga udhiranai virumbu

   சக உதிரம் என்பது சகோதரனையும்,சகோதிரியையும் குறிக்கும்

அருமையான சொல்லாகும்.நெருங்கியமுதல் நிலை உறவு

வரிசையில் நம் பெற்றோரும்,நம் சகோதர சகோதரிகளும் கண்டிப்பாக இடம்

பெற வேண்டும்.சகோதரனும்,சகோதரியும் இயற்கை நமக்கு அளித்த

அருமையான சிநேகிதர்களாம்.


   இரத்த சம்பந்தமில்லாத உண்மையான சிநேகிதர்கள் என்றாலே,வள்ளுவர்

கூறியதுபோல உடுக்கை இழந்தவன் கைப் போல இடுக்கண் களைய

சடுதியில் வருவார்களாம்.அப்படி இருக்கும்போது நம் உதிரம் சம்பந்தப் பட்ட

சிநேகிதர்கள்,நம் சகோதர சகோதரிகளின் அன்பான நட்பு அல்லது நட்பான

அன்பின் மகிமையை விவரிக்க வார்த்தைகள் இருக்கிறதா?


   முதல் குழந்தை பிறக்கும்போது அது தன் தாயின் கருவறையில் சிறிது தன்

உதிரத்தை விட்டுவிட்டு வருமாம்.அடுத்தக் குழந்தை அந்த உதிரத்தை,தன்

மூத்த சகோதரி அல்லது சகோதரன் தனக்காக விட்டுச் சென்ற அந்த

உதிரத்தை,அந்த அன்பின் நேசத்தை தன்  உதிரத்துடன் சேர்த்து எடுத்துக்

கொண்டு,அந்த இரண்டும் கலந்த உதிரத்திலிருந்து சிறிது உதிரத்தை

தனக்கு அடுத்துப் பிறக்கப் போகும் சகோதரனுக்கோ,சகோதரிக்கோ

விட்டுவிட்டு வருமாம்.


   இதற்கு அர்த்தம்,மூத்தவர்கள், தம் இளையவர்களிடம் காட்டும் அன்பிலும் 

விட்டுக் கொடுக்கும் பண்பிலும் முத்தவர்களாகவே இருக்க வேண்டுமாம்.

அதனைப் புரிந்துக்கொண்டு இளையவர்களும் ,மூத்தவர்களிடம்

மிகுந்த மரியாதையுடன் நடந்து கொள்பவர்களாகவும்,மூத்தவர்களின்

வார்த்தைகளை சிரமேற்கொண்டு நடப்பவர்களாகவும் இருக்க வேண்டுமாம்.

அப்பொழுதுதான் ஒரு குடும்பம் அமைதியும்,ஆனந்தமும் நிறைந்த ஒரு

கௌரவமான குடும்பமாக உருவெடுக்க சாத்தியப் படுமாம்.

 
 பரதன் தன் தமையன் இராமன் மேல் கொண்ட ஆழமான அன்பின், உயர்ந்த

மரியாதையின் வெளிப்பாடுதான்,பரதனை, "ஆயிரம் இராமர்களுக்கு சமம் "

என்ற மிக உயர்ந்த இடத்திற்கு அவனை இட்டு சென்றிருக்கிறது.


   துரியோதனன்,"எனக்கு உடன் பிறந்தவர்கள் எண்ணிக்கை நுறு வரை

இருந்தும்,என்னிடம் உண்மையான அன்பையும்,மரியாதையையும் செலுத்த

ஒருவரும் இல்லையே !ஆனால் தருமன் ஒருவனுக்காக அவனது

சகோதரர்கள் நால்வரும் நாட்டை இழந்து,பல வருடங்கள் கானகத்தில்

இருக்கவும் துணிந்து நிற்கிறார்களே!" என்று மிகுந்த வேதனையுற்றானாம்.


    அதனால்,சக உதிரத்தின் உறவின் உன்னதத்தை உள் வாங்கிக் கொண்டு,

அந்த உறவு ஒன்றாய்,நன்றாய்,ஒன்றி நிற்கும்போது,ஒன்றி நிற்கும்

சகலருக்கும் ஒரு அபாரமான சக்தி,ஒரு ஆற்றல் ஊற்றெடுத்துக் கொண்டே

இருக்கும்.அந்த சக்திக்கு எதையும் எதிர் கொண்டு சாத்தியமாக்கும்

வல்லமை உண்டு.


   அதனால் நாம் எந்த நிலையில் இருந்தாலும்,எந்த வயதில் இருந்தாலும்,

எந்த இடத்தில் இருந்தாலும்  இந்த சக உதிரத்தின் மகிமை ஓங்கி

சிறக்க,எந்த எதிர்மறை சக்திகளும் இந்த உறவின் மேன்மையை சிதைக்க

இடம் கொடாமல் இருப்பது சால சிறந்தது.Monday, April 21, 2014

4.Mariyadhaiyai Virumbu

   மரியாதை என்ற சொல்லுக்கு பொருள் மதிப்பது,மதித்து நடப்பது என்பது

நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.ஆனால் அதன் பொருளை புரிந்து

 நடக்கிறோமா? என்பது யோசிக்க வேண்டிய விஷயம்.மனிதன் என்ற

சொல்லுக்கே மரியாதைக்குரியவனாவதற்கான வழி முறைகள் தெரிந்தவன்

என்றுதானே பொருள்.


   இராமன் என்ற பெயரே  ஸ்ரீராமனுக்கு அவ்வளவு உயர்ந்த மரியாதையை

சம்பாதித்து தருகிறது என்றால், இராமன் அந்த பெயருக்கு எவ்வளவு பெரிய

மரியாதையை சம்பாதித்து கொடுத்திருப்பான்.


   நாமும் நாம் சம்பாதிக்கும் மரியாதையும் ரயில் தண்டவாளம் போலவாம்.

அதன் மேல் செல்லும் வாழ்க்கை என்னும் ரயில் வண்டி தடம் புரளாமல்

செல்லுமாம்.அப்படியே சில இடங்களில் எதிர் பாராமல் தடம் புரண்டாலும்

எளிதாக,விரைவாக மரியாதைக்குரிய தண்டவாளத்தை சரி செய்து விட

முடியுமாம்.அதாவது அந்த மரியாதை என்ற தண்டவாளத்தின் மதிப்பை

சரியாக புரிந்து கொண்டால்.அதாவது மரியாதைக்குரிய நம் சொற்கள்,அதைத்

தொடரும் மரியாதைக்குரிய நமது செயல்கள் அதைத் தொடரும் மரியாதைக்

மரியாதைக்குரிய நமது செல்வம் இன்னும் மரியாதைக்குரிய எல்லாமே நம்

வாழ்க்கை என்னும் ரயில் வண்டி சீராக பயணம் மேற்கொள்ள பேருதவியாக

இருக்கும்.


   நம் வாழ்க்கையை ஏன் ரயில் வண்டிக்கு ஒப்பிட்டார்கள் என்றால்,நாம் நம்

வாழ்க்கையை தனி ஆளாக வாழ்வது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று.

பெற்றோர்,உற்றோர்,உடன் பிறந்தோர்,சமூகம் என்று எல்லோரும்

 எல்லோரையும் சார்ந்து வாழ வேண்டிய கட்டாயத்தை இயற்கையே

 உருவாக்கி இருக்கிறது.அதனால்தான் நம் மரியாதைக்கு தகுந்தபடி  நம்முடன்

 சேர்ந்து பயணப்படும் பெட்டிகளின் எண்ணிக்கையும் ஆகும்.பெட்டிகளின்

எண்ணிக்கைக் கூடக்கூடத்தான் எந்த ரயில்வண்டிக்கும் மரியாதை.நம்

 சூழ்நிலைக்கு தகுந்தபடி,நம் உற்றார் உறவினர்களின் சூழ்நிலைக்கு

 தகுந்தபடி ,ரயிலின் சீரான பயணத்திற்காக, சிலநேரங்களில் பெட்டிகள்

மாற்றி  அமைக்கப்பட  வேண்டியிருக்கும்.சில நேரங்களில் நீக்கப்பட

வேண்டி இருக்கும்.சில நேரங்களில் சேர்க்கப்படவேண்டிஇருக்கும்.

ஆனால் எல்லாமே சுமுகமாக நடந்தாக வேண்டும்.இவை எல்லாம்

யாரால் சாத்தியப்படும்.நம்பிக்கைக்குரிய  மனிதர்களால்தான் சாத்தியப்

படுத்த முடியும்.யார் நம்பிக்கைக்குரிய மனிதர்கள்? மரியாதைக்குரிய

மனிதர்கள்தான்.வேறு யாரால் முடியும்?.


    மரியாதைக்குரியவர்கள் எவ்வாறு உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டு

போற்றுதலுக்கு உரியவர்களாக இருக்கிறார்களோ அதே போலவே

மரியாதைக்குரியவர்களை மதிக்க தெரிந்தவர்களும் போற்றுதலுக்கு

உரியவர்களே.இந்த குணம் உள்ளவர்களை பார்த்து வளரும் குழந்தைகள்,

தாமும் மரியாதைக்குரியவர்களாக உருவாக வேண்டும் என்ற உயர்ந்த

எண்ணத்துடன் வளர்வார்கள்.

   மரியாதையை விரும்பும் மனிதர்களின் இன்னொரு பரிமாணம்

அவர்கள் தங்களுக்கும்,மற்றவர்களுக்கும் நலம் பயக்கும் நல்

வழியையே தேர்ந்தெடுக்கும் மாமனிதர்கள். தமக்கு இறைவன்

அருளிய எல்லா வகை  செல்வங்களையும் கொண்டு தன்  மரியாதையை

தன்னை சார்ந்தவர்களின் மரியாதையையும் உயர்த்திக் கொண்டே

இருப்பார்கள்.அவர்களது உள்ளமும் உயர்ந்து கொண்டே போகும்.அவரை

சார்ந்த எல்லோரையும் முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும்.

இவ்வுலகம்இந்த மாதிரி  மாமனிதர்களால்தான் பல பல இக்கட்டுகளையும்

தாண்டி சீராக  இயங்கிக் கொண்டு இருக்கிறது என்பதுதான் உலக

உண்மை.            
                   

Wednesday, April 16, 2014

3.sinavidam sellaa virumbu.

   நாம் நம்மை நேசிக்க ஆரம்பித்து விட்டோம் என்பதன் முதல் அடையாளமே

நாம் நமது சக்தி வாய்ந்த மனதை சீரிய பாதையில் சீராக செல்ல ஆயுத்தப்

படுத்தி விட்டோம் என்று பொருள்.எவ்வாறு நாம் நேசிப்பவருக்கும் நம்மை

நேசிப்பவருக்கும் எந்த கெடுதலும் வரக் கூடாது என்று எப்பொழுதும் ஒரு

எச்சரிக்கை உணர்வுடன் இருப்போமோ,அந்த எச்சரிக்கை உணர்வு நமது

மனதின்பாலும் எழும்.


   நாம் நம் மனதை கவனிக்க ஆரம்பித்து  விட்டோம் என்று நம் மனதிற்கு புரிய

ஆரம்பித்தவுடன்,அது நாம் அதனை செலுத்தவிருக்கும் திசையை இனம்

கண்டு  கொள்ளும்.அதுதான் விசுவாசமிக்க சக்தி வாய்ந்த ஒன்றாக

இருக்கிறதல்லவா?பிறகென்ன? அந்த சக்தி வாய்ந்த விசுவாசமிக்க நம் மனம்

நாம் காட்டும் சீரிய பாதையில் சீராக,பூரண விசுவாசத்துடன் தன் பயணத்தை

தொடரும்.அதன் பயணத்தில்,நம் அருகாமையை அதற்கு புரிய வைத்து

அதனை பல வழிகளிலும் மேன்மை படுத்தும் முயற்சிகளில் நாம் விரும்பி

இறங்கினோமானால் அது வெகு விரைவிலேயே தன்னை செம்மைப் படுத்த

தொடங்கிவிடும்.அதன் பிறகு நாம் அதற்கு புகட்டிய சீரிய வழியை நாம்

சிறிது மறந்து பிறழ்ந்தாலும் அந்த விசுவாசமிக்க,வலிமை வாய்ந்த நம் மனம்

நம்மிடம் கற்றதையே,நமக்கு நினைவூட்டி,நினைவூட்டி எந்த சூழ்நிலையிலும்

நாம் பிறழ்ந்து போகாமல் நம்மை காக்கும் வல்லமை வாய்ந்தது.


    இவ்வாறு அரிய ஆற்றலுடன் செயல்படும் திறன் கொண்ட நம் மனதை நாம்

எப்போதும் சிறப்பாக கையாள, மனதார விருப்பபட வேண்டும்.அதற்கு

ஒவ்வொன்றாக நேர்மறை எண்ணங்களை அறிமுகபடுத்தி,அதன்

பலன்களை அதன் மனதில் படிய வைக்க வேண்டும்.நாம் மனதார விருப்பப்

பட்டால்தான் அதன் மனதில் பதிய வைக்க முடியும்.


   இப்போது நாம் ஒரு நேர்மறை எண்ணமாக  'சினவிடத்தில் செல்லா விரும்பு '

என்று நம் மனதிற்கு அறிமுகபடுத்துகிறோம்.முதலில் நாம் அதனை சரியாக

புரிந்து கொண்டால்தான் நம் மனதிற்கு அதை பதிய வைக்க முடியும்.

எவ்வாறு மின்சாரம் பாயும் பகுதியில் நாம் தெரிந்ததோ,தெரியாமலோ அந்த

அபாய பகுதியில்  நம் உடல் பட நேரிடின் அதிர்ச்சி ஏற்படுமோ,அவ்வாறே நம்

குடும்ப சுழ்நிலையிலும் அந்த அபாய பகுதி,அந்த அதிர்ச்சி தரும்

பகுதிஎதுவென்றால் ஒரே குடும்பத்தை சார்ந்தவற்குள்ளும் ' நான் ', ' எனது'

என்ற தீய எண்ணம் உள்ள அந்த பகுதிதான் குடும்பத்திற்குள் சினமெனும்

மின்சாரத்தை செலுத்தி அதன் அதிர்ச்சியை கடும் வார்த்தைகளின் வடிவில்

அதிர்ச்சி மேல் அதிர்ச்சிகளாய் அதிர வைத்து  சகல மனதையும் சாகடிக்கும்.


    எனவேதான் ஒரு குடும்பஅமைதிபெற,எந்நேரமும் சினமஎன்னும் மின்சாரம்

பாயும் 'நான், ' எனது ' என்ற அந்த அபாய எண்ண பகுதிக்குள்

செல்லும்படியான எந்த சந்தர்பத்தையும் ஒரு குடும்பத்தின் அங்கத்தினர்கள்

ஏற்படுத்திவிடாமல் இருப்பது சால சிறந்தது. மாறாக, குடும்ப

அங்கத்தினர்களின் "நாம்" , " நமது " என்ற நல்ல எண்ணம் உள்ள அந்த

 பகுதிதான் ஒருகுடும்பத்தின் பாதுகாப்பானபகுதியாக பகுத்தரியப்படுகிறது

இதனை நாம்   சரியாக புரிந்து கொள்கிறபோது நமது மனதிற்கும் புரிய வைத்து

 பதியவைப்பதும் எளிதாகிறது.


Sunday, April 13, 2014

2.Nesikka Virambu (Unnai)

    "நேசித்தல்". இன்னொரு  இதமான  உணர்வு. நம்மை நேசிப்பவர்களை,

நாம் நேசிப்பவர்களை நாம் நினைக்கும்போது  நாம் ஒரு பாதுகாப்பான

உணர்வை பெறுகிறோம்.நமது நேசிப்பிற்கு தகுதியனவர்கள் என்று நமது

மனதில் சிலர் நிறைந்திருப்பார்கள்.அவர்களிடம் நமது அணுகு முறையே

 மேலானதாக இருக்கும்.அவர்களுக்கு ஏதாவது ஒரு தேவை என்றால் நாம்

முதல் ஆளாய் சென்று நிற்போம்.அவர் ஏதாவது தம்மை அறியாமல் தவறு

செய்தால் அன்புடன் கடிந்து கொள்கிறோம்.அந்த தவறை நேராக்க நமது

நியாயமான உதவிக்கு வழி இருப்பின் அதற்கும் முயற்சிப்போம்.இந்த வழி

முறைகளை எல்லாம் நம்மை முன்நிறுத்தி  யோசிப்போமானால்,அதுதான்

நாம் நம்மை நேசிப்பதின் முதல் படி.அதாவது நாம் நம் நிலை பற்றி

யோசிப்பது.

    ஆனால் நாம் என்றாவது நம்மை நேசிப்பதை பற்றி யோசித்திருக்கிறோமா?

சுயநலம் பற்றிதான் யோசித்திருக்கிறோம்.சுயநலம் என்பது வேறு.நம்மை

நாம் நேசிப்பது என்பது வேறு.சுயநலம் என்பது அடுத்தவரை வருத்தி நாம்

அனுபவிப்பது.அல்லது அடுத்தவரை பற்றி எந்த சிந்தனையும் இல்லாமல்

நமது உயர்வை பற்றியே சிந்தித்து கொண்டிருப்பது.


   நம்மை நாம் நேசிப்பது என்பதின் இன்னொரு பரிமாணம் நம் கௌரவத்தை

நாம் நேசிக்கும் உண்மையாகும். நாம் யார்?நமது குடும்ப பின்னணி என்ன?

அதன் உயர்வுக்கு நமது பங்கு என்ன?இந்த பங்கெடுப்பில் நமது குணங்களின்

பங்கு என்ன? எந்த குணத்தை கூட்ட வேண்டும்.எந்த குணத்தை குறைக்க

வேண்டும் என்பதில் தனி கவனம் செலுத்த வைப்பது நமது கௌரவ

நேசிப்பாகும்.இந்தகௌரவநேசிப்பு என்பது நம்மையும் துன்புறுத்தாது.அடுத்த

வரையும் துன்புறுத்தாது.தனக்கு இறைவன் அளித்த வசதி வாய்ப்புகளை

நன்றியுடன் ஏற்றுக்கொண்டு  அந்த வசதி வாய்ப்புகளை நேராக்கி சீராக்கி

தனது கௌரவத்தை உயர்த்த முயற்சிக்கும் நம்மை நாம் நேசிக்கும் குணம்.


   நம்மை நாம் நேசிக்கும் குணத்தின் அடுத்த படி என்பது அமைதிக்கும்

வளர்ச்சிக்கும் அடிகோலும் அடுத்த உயர்ந்த படி.ஒவ்வொரு

தனி மனிதனின் அமைதியும் வளர்ச்சியும்தான் ஒரு குடும்பத்தின் அமைதியும்

வளர்ச்சியுமாகும்.அதுவே ஒரு ஊரின்,ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது

கண்கூடான உண்மை.அதனால் நாம் நம்மை நேசிக்கும் முதல் படியில்

ஏன் கால் பதிக்க கூடாது?             

Monday, April 7, 2014

1.Aram seya virumbu

  "அறம்"


   இது ஒரு அருமையான வார்த்தை.இந்த சொல்லின் ஒலியை  கேட்பதே 

இதம் தரும் ஒரு இனிமையான  வார்த்தை.எல்லா அறங்களிலும் சிறந்த 

அறம் நமது வார்த்தைகளில் இதம் சேர்க்கும்,இனிமை கூட்டும்,மனம் 

நிறைந்த,தண்மையான வார்த்தைகள்தான்.எல்லா அறங்களை போலவே 

இந்த அறமும் இல்லங்களில்தான் ஆரம்பிக்கின்றன.ஆரம்பிக்கபட

வேண்டும். 


   நான் எனது பால பருவம் முதலே இந்த இனிமையான வார்த்தைகளின் 

அறத்தை உள்வாங்கி இருக்கிறேன்.எனது தாயார் எங்களை பேர் 

சொல்லிதான் அழைப்பார்.ஆனால் எனது தந்தையார் தனது பெண் 

குழந்தைகள் உட்பட முறைப்படி அழைக்கும் பெண்மணிகளை தவிர எல்லா 

பெண்மணிகளையும் வயது வித்தியாசம்  இன்றி  "அம்மா" என்றுதான் 

அழைப்பார்.எனது தாயாரும் தனது பெண் குழந்தைகளையும் முறைப்படி 

அழைக்கும் உறவுகளை தவிர எல்லா பெண்மணிகளையும் "அம்மா" 

என்றுதான் அழைப்பார்.பிறகு பார்த்தால் எல்லா கிராமங்களிலும் இது 

தொன்று தொட்டு வரும் ஒரு இயல்பாகவே இருந்திருக்கிறது.அந்த 

இயல்பான,தண்மையான,மனதை குளிர்விக்கும் அந்த "அம்மா " என்ற 

வார்த்தை, எனக்கு பிடிக்கும் வார்த்தைகளில் முதல் இடத்தை பிடித்திருக்கும் 

வார்த்தை ஆகும்.

 
   மனம்தான் வார்த்தைகளின் ஊற்று என்பார்கள்.எனவே அதுசரியாக,இதமாக

இருந்தால்தான்  அதன் கண் ஊறும் வார்த்தைகளும் சரியாக,இதமாக

இருக்கும்.அதனால்தான் நம் மனதை நம் நேரடியான கண்காணிப்பில்

வைத்திருக்க வேண்டும்.ஏனென்றால்,நமது மனம் வேகத்திலும் சக்தியிலும்

காற்றை ஒத்தது என்பார்கள்.அதற்கு நல்லது கெட்டது தெரியாதாம்.விசுவாசம்

 மட்டும்தான் தெரியுமாம்.நாம் அதை எந்த திசையில் வழி நடுத்துகிறோமோ

அந்த திசையில் அது  நமக்கு மிக்க விசுவாசமாக இருக்குமாம்.அதனால்தான்

நாம் பெரும்பாலும்  நமது நேர் மறையான பகுதியில் அதனை

உலாவவிட்டால் அது நம்மை  அந்த திசையில் வழி நடத்தி செல்லுமாம்.

நமது வார்த்தைகளும், எந்த சூழ்நிலையிலும் இதமாக,பதமாக வெளி

கொணரப்ப்படுமாம்.

   நல்ல வார்த்தைகள்,செப்புவோரின்,செவி மடுப்போரின் அகத்தையும்,

முகத்தையும் ஒளிர வைக்கும்.தன்னம்பிக்கையை தளிர வைக்கும்.

சூழ்நிலையை உற்சாகபடுத்தி கலகலப்பாக்கும்.

   அதனால்தான் இந்த நேர்மறை  பகுதியில், அகத்திபுறத்திலும்,நாம், நம்மை

நாமே எப்பொழுதும் மேம்படுத்தி கொண்டே இருக்க வேண்டுமாம்.அதனால்

நாமும் இந்த பயிற்ச்சியை ஆரம்பித்து,முதல் அறமான இதமான

வார்த்தைகளில் ஆரம்பித்து மற்ற அறங்களை தொடரலாமா?