Tuesday, September 16, 2014

12.Thai Mann.

   வேப்பமரக் காற்றில்,அதன் சிலுசிலுப்பில் ஆழ்ந்து உறங்கி போன விஜயன்

கண் விழித்து பார்க்கும்போது  மாலை மணி மூன்றாகி விட்டது.சிறிது நேரம்

அப்படியே படுத்துக் கொண்டிருந்தான்.ஒரு நொடி, அவனுக்கு தான் எங்கு

இருக்கிறோம் என்பது பிடிபடவில்லை.பிறகு ஒவ்வொன்றாக பிடிபட்டது.

மனது, ஆழ்ந்த உறக்கத்தின் விளைவாக,இறக்கைக் கட்டி பறக்கும் நிலையில்

இருந்தது.தான் இப்படி உறங்கி பல யுகங்கள் ஆகி இருப்பது போல

விஜயனுக்கு ஒரு உணர்வு.மனது மிகவும் தெளிவாக இருந்தது.


    சுற்றும்,முற்றும் பார்த்தான்.அம்மாவும்,அக்காவும் உள்ளே வேலையாக

இருப்பார்கள் போல.எழுந்து உட்கார்ந்தான்.அவ்வப்போது வந்து,வந்து

எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த இருவரும் இப்போதும் வந்து எட்டிப்

பார்த்தார்கள்.ஆளுக்கு ஒரு பக்கமாக வந்து அமர்ந்து கொண்டார்கள்.

அம்மா,தன முந்தானையால் அவனது முகம் முழுதும் ஒற்றி எடுத்தார்.

அப்பொழுது,தான் சிறு வயதில் உணர்ந்த தன் தாயின் உடல் வாசத்தை

இப்பொழுதும் உணர்ந்தான் விஜயன்.உள்ளம் பொங்கி பொங்கி வழிந்தது.

அவர்கள் இருவரையும் பார்த்து முறுவலித்தான்.அதில் அவனது  சிறு

பிராயத்தின் முறுவலே பிரதிபலித்தது. அவனது ஆழ்ந்த சிறு வயது

எண்ணம் மிக அழகாக அவனது முகத்தில் பிரதிபலித்தது.


   அவனது மென்மையான,தண்மையான, ஆழமான அன்பில் தோய்த்தெடுத்த

முறுவலில்  இழைந்தோடிய  அந்த ஸ்பரிசத்தை,அவனது அம்மா

ஆத்மார்த்தமாகப் பெற்றுக் கொண்டார்.அந்த ஸ்பரிசம் தந்த வெதுவெதுப்பில்

 அவன் தலை வருடி வாஞ்சையுடன் கேட்டார். " சாமி! நல்லா

தூங்கினேயாப்பா? களைப்பெல்லாம் தீர்ந்ததா? ".அக்காவும் அவனருகில்

அமர்ந்து,அவன் முகமுழுவதையும், தன் இரு கைகளால்,இரு பக்கங்களிலும்,

மேலிருந்து கீழாக வருடி எடுத்து நெட்டி முறித்து திருஷ்டிக் கழித்தார்."அம்மா!

தம்பி முகம் பாரேன்.பூர்ண சந்திரன் போல.நல்லாத் தூங்கி,களைப்பை

எல்லாம் களைந்து போட்டிருப்பான் போல".அக்கா ஆனந்தமாக,சன்னமாக

சிரித்தார்.


   " சரி!சரி! தம்பி மிகவும் பசியோடு இருப்பான் போல.நீயும் எவ்வளவு

நேரம்தான் தம்பி எழுந்திருக்கட்டும்னு காத்திட்டிருப்பே!எல்லாத்தையும்

எடுத்து வை தாயி! நான் வந்து இரண்டு பேருக்குமா பரிமாறேன்". என்ற

அம்மாவைத் திரும்பிப் பார்த்த அக்கா " என்னை விடும்மா!தம்பி!அம்மா ஏன்

இன்னும் சாப்பிடலன்னு கேளு!".என்றபடி, பரிகாசமாக சிரித்தார்.


    விஜயன் அயர்ந்து போனான்." என்னக்கா இது! என்னை எழுப்பி இருக்க

வேண்டியதுதானே! இருவரும்,இவ்வளவு நேரமா சாப்பிடாம இருப்பீங்க!

நீங்க சாப்பாடு எடுத்து வைங்க!நான் இதோ முகம் கழுவிட்டு வந்துர்றேன்".

விஜயன் எழுந்து பின்கட்டு போனான்.


    மூவரும் சேர்ந்து சாப்பிட்டார்கள்.அம்மாவும்,அக்காவும் சேர்ந்து தங்கள்

அன்பை குழைத்து சமைத்த விதவிதமான புலால் உணவு,அமிர்தமாக நாவின் 

ருசி அரும்புகளில் ருசிக்கப்பட்டு , நெஞ்சில் கரைந்து, மனதை நனைத்தது.

" உணவு என்றால் இதுவல்லவோ உணவு. இவ்வளவு ருசியாக இருக்கிறதே!

கிராமத்து மணம்  மாறாமல் அப்படியே இருக்கிறதே!அப்படி என்றால் அன்பும்  

மாறாமல் இருக்கிறது என்றுதானே அர்த்தம்". விஜயன் மறுகிப் போனான்.


   பிறகு எல்லா நினைவுகளையும் ஒரு பக்கமாக நிறுத்தி விட்டு,தாயுடனும்,

தமக்கையுடனும் மனம் நிறைந்து அளவளாவிக் கொண்டே,ஒவ்வொரு

பதார்த்தமாக ரசித்து,ருசித்து,உண்டான் விஜயன்.ஒருவருக்கு ஒருவர்

விருந்தளிப்பவர்களாவும்,விருந்தாளியாகவும் மாறி, மாறி  பரிமாறிக்

கொண்டே உணவு உண்டார்கள்.அந்த ருசியான உணவுடன், பல ருசியான 

நினைவுகளையும்,கலந்து,கலந்து உண்டார்கள்.உணவும்,அதனைச் சார்ந்த

நினைவுகளும் தித்தித்தன.ஒவ்வொரு பதார்த்தத்துக்குமான விஜயனது

இயல்பான மனம் நிறைந்த பாராட்டுக்கள், அவனது தாய்,தமக்கையின்

மனதுகளை நிறைத்தன. விஜயன் மனம் நிறைந்து, வயிறு நிறைந்து

உண்டிருக்கிறான் என்ற திருப்தி அவர்களது மனதை நிறைத்தது.


    விஸ்தாரமாக உண்டு முடித்துவிட்டு வெற்றிலை பாக்குப் பெட்டியுடன்

கூடத்தில் வந்து மூவரும் அமர்ந்தார்கள்.விஜயனின் தாய்,தன் குழந்தைகள்

இருவருக்கும்,பாந்தமாக வெற்றிலைகளை முன்னும்,பின்னும் துடைத்து,

அளவாக பாக்கும்,சுண்ணாம்பும் சேர்த்து  தந்துக் கொண்டிருந்தார்.


    ஆனால்,அதே நேரத்தில் அதற்கு அப்பால் ஒரு வீட்டில், சுண்ணாம்பு

காளவாய் ஒன்று தகதகவென கனன்றுக் கொண்டிருந்தது.
                                                                                                         தொடரும்.........  


      


       

Friday, September 12, 2014

11.Thai Mann.

   விஜயன் மனது நிரம்பி வழிந்தது.தன்னை சார்ந்தவர்களும்,தனது ஊரும்

அதே  இனிய மண் வாசனையுடனும், இயல்பான அன்புடனும்  தன்னை

உள்வாங்கிக் கொண்டது மனதை மயிலிறகாக்கியது.அது சிட்டுக் குருவியாகி

நாலாபுறமும் சந்தோஷமாக பறந்து உலாவிக் கொண்டிருந்தது.எந்த

விதமான செயற்கை சத்தங்களுமின்றி,இயற்கையான ஒலிகள் அவனுடைய

சூழ்நிலையை ரம்மியமாக்கின.


     ஆனாலும் ஏதோ ஒன்று அவனை  மிகவும் நெருடிக் கொண்டிருந்தது.

வண்டியிலிருந்து இறங்கின சமயத்திலிருந்து ஊர் அவ்வப்போது இங்கும்

அங்குமாக பார்வையை சுழற்றிக் கொண்டிருந்தது.அதில் ஒரு பரபரப்பு

இருந்து கொண்டேயிருந்தது.விஜயனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

ஆனால் யாரையும் காரணம் கேட்கத் தோன்றவில்லை.


   வீட்டிற்கு பின்னால் சற்றுத் தள்ளி அமைந்திருந்த பம்பு  செட்டிலிருந்து

நீர், ஆனந்தமாக பக்கத்திலிருந்த பெரியத் தொட்டிக்குள்  விழுந்துக்

கொண்டிருந்தது.சுற்றிலும் பச்சைபசெலேன்றிருக்கும் பெரிய வயல்களுக்கு

நடுவில் இந்த சிறிய அழகான நீர்வீழ்ச்சியாக, இந்த பம்ப் செட் நீரை  வாரி

இறைத்துக் கொண்டிருந்தது.வானுயர்ந்த கட்டிடங்களையே பார்த்து

பார்த்துப் பழகிப் போன கண்களுக்கு இந்த வயலும்,இந்த வயல் சார்ந்த

இடங்களும் கண்கொள்ளாக் காட்சிகளாக மனதை குதூகலிக்கச் செய்தது.

விஜயன் சுற்றிலும் பார்த்து இரசித்துக் கொண்டே,அக்கம் பக்கம் வயலில்

இருப்பவர்களிடம் அளவளாவிக்கொண்டே ஆசை ஆசையாகக் குளித்துக்

கொண்டேயிருந்தான்.அவன் குளிக்கும் விதம் பார்த்து,அக்கம் பக்கத்தில்

இருந்தவர்கள், " தம்பி, இன்னும் ஒரு வருடத்திற்கு சேர்த்து குளிக்கும்

போல!". என்று பரிகாசம் செய்தும்,பிரியவே மனமில்லாமல் நீரை விட்டுப்

பிரிந்து வந்தான்.


      விஜயனின் தாயார் ,குளித்து  முடித்து தலைத் துவட்டிக் கொண்டே வரும்

மகனை அதுவும் மனதும், உடலும் ஒன்று சேர அழுக்கு அகற்றி பளீரென

மலர்ந்தபடி, அங்கங்கே நீர் திவலைகள் தங்கள் முத்திரைகளை  பதிக்க, மனம்

நிறைந்த புன்முறுவலுடன் தங்களை நோக்கி வந்து கொண்டிருக்கும் அன்பு

 மகனை  மனம் கொள்ளா ஆசையுடன்,வைத்த கண் வாங்காமல் பார்த்துக்

கொண்டேயிருந்தார்.அதை கவனித்த விஜயனின் தமக்கை, " அம்மா!உங்க

பார்வையை திருப்பி அதோ அந்த மலையை பாக்கறது!அது தகர்ந்தாலும்

தகரும்.தம்பியை இப்படி பாக்கறீங்க?இனி ஊரார் கண்களுக்கு ஒரு

திருஷ்டியும்,உங்க கண்களுக்கு ஒரு திருஷ்டியும் என தனித் தனியாக

தம்பிக்கு திருஷ்டி சுற்றிப் போடவேண்டியதுதான் ". என்று தன் தாயை

பரிகாசம் செய்தார்.தாயும், மகளும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்

கொண்டனர்.உண்மையில் விஜயனின் தமக்கையின் கண்களும்,தன் தாயின்

கண்களுக்கு நிகராக தன் தம்பியின் குளித்து முடித்து வரும் அந்த அழகை

வாஞ்சையுடன் பார்த்துக் கொண்டேயிருந்தன.


    விஜயன் உண்ண பாயும்  விரிக்கப் பட்டு தலை வாழை இலையும் 

விரிக்கப்பட்டு,அவனுக்கு பிரியமான கிராமத்து பணியாரங்கள் பரிமாறப்பட

வரிசைக் கட்டி நின்றன.தலை வாரி,சலவைத் உடை அணிந்து சாமி கும்பிட்டு

வந்த விஜயனை,தாயும்,தமக்கையும், பாசமும்,பரிவுமாக இல்லை முன்

அமர்த்தினர்.இலை முன் சம்மணமிட்டு அமர விஜயன் மிகவும் சிரமப் பட்டான்.

அதைப் பார்த்த அவனது தமக்கை," அடி ஆத்தி!என்னம்மா இது? தம்பி

சம்மணமிட்டு உட்கார இப்படி சிரமப்படுது?. என்றுக் கேட்டு நிஜமாகவே

ஆச்சரியப் பட்டார்.விஜயன் நெளிவதைப் பார்த்ததும்,அவன் தாய்,"எல்லாம்

பழக்கந்தானே தாயி! அவனோட இடத்திலே கையை மேலே தூக்கி வச்சே

சாப்பிட்டிருப்பான் போல;சரி அதை விடு.நீயும் தம்பி கூட ஒரு இலையை

போட்டு உட்காரு!நான் பரிமாறேன் ".


   
    அந்தத் தாய் தன் குழந்தைகள்  இருவரும் பேரன்,பேத்திகளை பார்த்த

மூத்தோர்கள் என்ற எதார்த்தத்தை ஒரு மூலையில் நிறுத்தினார். அவர்கள்

இருவரையும் பாலகர்களாக்கி,பார்த்துப் பார்த்து பரிமாறினார்.அவர்கள்

இருவரும் ஒருவரை வாஞ்சையுடன், உபசரித்துக்  கொண்டே உண்ணும்

 அழகைப் பார்த்துப் பார்த்து பரவசமானார்.


   
   உண்டு முடித்து முற்றத்தில்  வந்து அமர்ந்தார்கள் மூவரும்.கதை பேசத்

தொடங்கினார்கள்.கதை,கடந்தக் கதை,வந்தக் கதை,போனக் கதை,இருக்கும்

கதை,இருக்காதக்  கதை இன்னும் என்ன எல்லாமோ கதைகள் எல்லாம்

பேசப் பேச கதை தொடர் கதையாகிக் கொண்டிருந்தது. கதைக்கு

இடையிடையே விஜயனின் கொட்டாவிக் கதையும் தொடர ஆரம்பித்தது.

அவனது தாய் அவனை அங்கு இருந்த பெரிய ஊஞ்சலில் படுக்க செய்தார்.

அவனது தமக்கை மெது மெதுவென இருக்கும் ஒரு தலையணையை

எடுத்து வந்து வாஞ்சையுடன் விஜயனின் தலைத் தூக்கி அவன் தலைக்கு

ஏதுவாக வைத்தார்.வெளியில் வேப்ப மரத்து இதமானத் தென்றல்,விஜயனை

அவனது கடந்த கால நினைவுகளுக்கு இட்டுச் சென்றது.போதாக் குறைக்கு

விஜயனின் தாயார்,அவனது தலைமாட்டில் அமர்ந்தபடி,தனது இரு கைகளால்

 விஜயனின் கன்னங்களை வருடியபடி தெம்மாங்கு பாட ஆரம்பித்தார்.

அவனது தமக்கை தாயின் அருகில் அமர்ந்து,ஊஞ்சலை நிதானமாக அசைய

விட்டார். ஒரு பனையோலை விசிறிக் கொண்டு தம்பிக்கு   இதமாக விசிறிக்

கொண்டிருந்தார்.தன் தாயின் பாடலின் இனிமையில் கரைந்த விஜயன்,

தன்னை மறந்து, நித்திரா தேவியின் ராஜ்யத்தின் தற்காலிக பிரஜையாக

மாறிப் போனான்.    அந்த நேரம்  விஜயனின் தாய் மண்ணில் காலை பதினோரு மணி இருக்கும்.

ஞாயிற்றுக் கிழமை.அவனது ஆழ்ந்த உறக்கத்தை,ஆழ்ந்து  ரசித்தபடியே

அவனது தாயாரும்,தமக்கையும் மற்ற வேலைகளை  கவனிக்க

எழுந்தார்கள்.எழுந்ததும் அவர்களை மறுபடியும் அந்த கலக்கம் பற்றிக்

கொண்டது.அந்தக் கலக்கம் வரும் பாதையை அதாவது வாசற்படியை

ஒரு முறை ஆயாசத்துடன் பார்த்து விட்டு உள்ளறைக்குச் சென்றார்கள்.

அந்த கலக்கம் மெதுவாக பிரளயமாக உருவெடுத்துக் கொண்டு அதன்

இடத்தில், சினத்தின் உச்சியில் அங்கும்,இங்கும் உலாவிக் கொண்டிருந்தது.

                                                                                               தொடரும்..............  

                    

Monday, September 8, 2014

Manidhan

   அன்றைய தினம் காந்தி ஜெயந்தி.நமது  தேச பிதா மகாத்மா காந்தியின்

மகா  உன்னதமான அந்த நாளை,கடவுளின் குழந்தையான அந்த மாமனிதரின்

பிறந்த நாளை நேசத்துடன் கொண்டாட அவரது தேசமே விடியலுடன் சேர்ந்து

விழித்துக் கொண்டது.ஆனால் அந்த குறிப்பிட்ட கிராமத்தின் அந்த குறிப்பிட்ட

வீடு மட்டும் அந்த குறிப்பிட்ட நாளின் உன்னதத்தை புரியாமல் அல்லது

புரிந்தும் புரியாமல் அல்லது புரிந்துதான் என்ன ஆக போகிறது என்ற

விரக்தியில் எப்பொழுதும் போலவே விடியலை எதிர் கொண்டது.


   சித்தார்த்  நமது தேசத்தின் குடிமகன் மட்டும் அல்ல.அந்த குறிப்பிட்ட

வீட்டின் குடிமகனும் கூட.குடிமகன் என்றால் தன்னை,தன் சூழ்நிலையை

முற்றிலும் மறந்த, துறந்த பெரும் குடிமகன்.அவனது இல்லம் என்றும்

இரண்டு வகையான சூழ்நிலையில்தான் இருக்கும்.காலையில் மயான

அமைதி.மாலையில் மகா கூச்சல்.விதவிதமான கூச்சல்.அவனது

மனைவி இவனுக்கு வாழ்க்கைப்பட வைத்து விட்டாயே என்று தன் விதியை

நொந்து கொள்ளும் கூச்சல்.அவனது தாயார், பெற்ற மனம் பதற கதறி,

நித்தமும்இந்த கொடுமைகளை காண மனதில் சக்தி இல்லாமல்,தன்

வாழ்நாளை வாழும் நாளாக விடாமல் சித்திரவதை செய்யும் மகனை

தெளிவாக்க இறைவனிடம் மன்றாடும் கூச்சல்.இவை எல்லாவற்றையும்

விட கொடுமையிலும் கொடுமையான கூச்சல் அவனது  குழந்தைகள்

இரண்டும்,அவனை கண்டாலே பயந்து போய்  தங்களது   பாட்டியின் மார்பில்

முகம் புதைத்து அலறும் அலறல்.


    அன்று  காந்தி ஜெயந்தி ஆனதால்  சித்தார்த்தின் அலுவலுகதிற்கும்

விடுமுறை.அவனது அனுதினம் குடிக்கும் பானத்திற்கும் கட்டாய

விடுமுறை.இன்றைய தினம் எப்படி பொழுதை கழிப்பது என்று அவனுக்கு

புரியவேயில்லை.வீட்டில் யாரும் அவனுடன் முகம் கொடுத்து பேச தயாராக

இல்லை.குழந்தைகளோ அவன் அருகில் வரவே இல்லை.அவனுக்கு

பரிமாறப்பட்ட காலை உணவை முடித்துக் கொண்டு சட்டையை மாட்டி

கொண்டு வெளியே கிளம்பினான்.


   அவன் கிளம்பி செல்வதை அவனது தாயும்,தாரமும் கவனிப்பதை

அவனால் உணர முடிந்தது.அவர்களது பெருமூச்சு அவனது குற்ற

உணர்வில் குத்திட்டு நின்றது.குடிக்கு முன்னால் அவனது தோற்றம்

 திரை உலகின் ஒரு பிரபலமான நடிகரை எல்லோருக்கும் நினைவூட்டும்.

குடிக்கு பின்னால் சகலமும் பின்னால் போய்  விட்டது.


   நான்கு தெரு தாண்டியும்,இலக்கில்லாமல் நடந்து கொண்டே இருந்தான்.

நிமிர்ந்து நடக்க துணிவு வரவில்லை.கால் தன்னிச்சையாய் ஒரு வீட்டின்

முன் நின்றது.ஏறிட்டு பார்வையை உள்ளே செலுத்தினான்.அது ஆறு

மாதத்திற்கு முன்னால் திடீரென மாரடைப்பில் மறைந்து போன தன் மூத்த

சகோதரனின் உயிர் நண்பன் சந்துருவின் வீடு.குடும்பத்தின் மூத்த பிள்ளை,

தன் தந்தை இல்லை என்ற குறை தன் தாய்க்கும்,தன் உடன் பிறந்தோர்

மற்றும் சுற்றங்களும் தெரியா வண்ணம் தன் தந்தையின் இடத்தில்

இருந்து குடும்பத்தை காத்து வந்த உத்தம பிள்ளை.தந்தை இறந்த சில

வருடங்களுக்கு  பிறகுதான் சித்தார்த்திற்கும் அவனது  இன்னொரு

சகோதரிக்கும் திருமணம் நடந்தது.அதுவும் தந்தையின் இடத்தில்

இருந்த அந்த வீட்டு மூத்தப் பிள்ளையின் பெரு முயற்ச்சியில்.

அதுவும் ஒரே ஆண்டில்.ஊரேஆச்சரியப்பட்டது.மனதார கை கொடுத்தது.


 
சித்தார்த்திற்கு தனது அன்பு சகோதரனின் திடீர் மறைவிற்கு பிறகுதான்

ஒரு தந்தை ஸ்தானத்தின் அருமையும் பெருமையும் புரிந்தது.அந்த

ஸ்தானத்தை தனது சகோதரன் வகுத்தபோதுதான் தனது சகோதரனின்

அருமையும் பெருமையும் புரிந்தது.தனது தந்தையின் இழப்பை கூட அவனால்

தாங்க முடிந்தது.ஆனால் தனது தமையனின் இழப்பு அவனை இன்னும்

உறங்க விடவில்லை.யாரோ தந்த யோசனை,உறக்கம் வர குடிக்கும்

பழக்கத்திற்கு ஆட்பட்டதால்  அது உறக்கதிற்கு பதில் குற்ற உணர்வை

குறையில்லாமல் தந்தது.உடலையும், மனதையும் ஒரு சேர உருக்கியும்

விட்டது.


   சந்துரு வெளியில் வந்து சித்தார்த்தின் தோள் மேல் கை வைத்து உள்ளே

அழைத்து சென்றான்.ஒரு நொடி சித்தார்த் தன் தமையனின் அண்மையை

உணர்ந்தான்.உண்மையான,பவித்ரமான அன்பினால் அந்த அன்பை

உணர்த்தவும் முடியும்.அதை உணரவும் முடியும்.


    சந்துரு இராணு பணியில் இருக்கிறான்.இப்பொழுது விடுமுறையில்

வந்திருக்கிறான் போலும்.சென்ற விடுமுறையின் போதுதான் தன உயிர்

நண்பனின் விதி முடிந்து போனது.நண்பன் குடும்பத்தார்க்கு அவன்

குடும்பமே பெரிய ஆறுதலாக இருந்தது."உன் நண்பனை நான் அழைத்து

போகிறேன்.அவன் குடும்பத்தார்க்கு  ஆறுதலாக இரு". என்று கடவுள்தான்

அவனை அனுப்பி வைத்தார் போலும்.இராணுவத்தில் பணியாற்றிக்

கொண்டிருப்பதாலோ என்னவோ,அத்தனை துக்கத்திலும் தெளிவாக

இருந்தவன் அவன் ஒருவன்தான்.


    உள்ளே அழைத்து சென்று அமர வைத்ததும்,சித்தார்த் பித்து பிடித்தது

போல தாரை தாரையாய் கண்ணீர் வடித்தான்.எல்லோர் கண்களும் கசிய

தொடங்கின.உடனே சந்துருவின் தாயார் சிறிது நீர் கொண்டு வந்து அவனை

பருக செய்து சிறிது ஆசுவாசப்படுத்தினார்.


   சந்துரு அவனருகில் அமர்ந்து தன் தோள் மீது சாய்த்தான்.சாய தோள்

கிடைத்ததும் சித்தார்த்,விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தான்.சந்துருவின்

குடும்பத்தார்க்கு அவனது வேதனை பெரிய வேதனையாக இருந்தது.சந்துரு

 சித்தார்த்தை நிமிர்ந்து அமர செய்தான்."சித்தார்த்! இந்த இளம் வயதில் உன்

அண்ணனின் அருமை பெருமைகளை புரிந்து கொண்டு அவரது நிரந்தர

பிரிவை எண்ணி நீ வேதனைப் படுவது உண்மையிலேயே பெரிய விஷயம்.

அப்படி என்றால் உன் குடும்ப பொறுப்பை உன் அண்ணனிடமிருந்து நீ

ஏற்றுக் கொள்ள நீ தயாராகி விட்டாய் என்று அர்த்தம்".சித்தார்த் ஒன்றும்

புரியாமல் சந்துருவை ஏறிட்டு பார்த்தான்."நீ ஒன்றை புரிந்து கொள்ள

வேண்டும் சித்தார்த்!நீ உனது பெற்றோருக்கு ஐந்தாவது மகனாய் பிறப்பாய்

என்பது பொய்.ஆனால் ஐந்தாவது மகனாய் பிறந்த சித்தார்த் ஒரு நாள்

இறந்து போவாய் என்பது மெய்.மரணம் என்பது ஒரு இயற்கையான  ஒரு

நிகழ்வு.அதன் வேதனைதனை காலம் சரிபடுத்தும்.ஆனால் நாம் அதிலேயே

உழன்று கொண்டு இருப்பது நாம் நமது பொறுப்பை தட்டி கழிப்பதற்கு சமம்".


    "அதில்லை அண்ணா!குருவி தலை பனங்காயாய் அண்ணாவின்

பொறுப்புக்கள் அதிகமானதால்தான் அந்த சுமையை சுமக்க

இயலாமல்தான்  அண்ணாவிற்கு இந்ததிடீர் மறைவு ஏற்பட்டதோ என்று

எனக்குள் பெரிய  கலக்கம்"


   "சித்தார்த் நீ ஒன்றை மறந்து பேசுகிறாய்.உன் அண்ணா  மட்டுமா தனியாக

சுமந்தார்.உண்மையாக சொல்ல போனால் உன் அன்பான அண்ணி மனதார

தோள்  தரவில்லை எனில் உன் அண்ணனால் உன் அப்பாவின் பெயரையும்

மரியாதையையும் காப்பாற்றி இருக்க முடியாது.அதை காப்பாற்றி அதற்குள்

தன்னை ஐக்கிய படுத்தி செயலாற்ற உனது அண்ணி உறுதுணையாய்

 இருந்ததால்தான், சுற்றத்தாரின் உதவியுடனும் ஊராரின் உதவியுடனும் உன்

அண்ணனால் தன் கடமைகளை சரிவர செய்ய முடிந்தது.உண்மையில் உன்

எண்ணப்படி இருந்தாலும் குருவி தலை பனங்காயாய் இன்னமும் உன்

அண்ணிதான் சுமந்து கொண்டிருக்கிறார்.நமது எல்லோரின் ஒரே கடமை

அவருக்கு பக்க பலமாய் இருப்பதுதான்.தலைச்சன் சம்சாரம் தாய்க்கு சமம்

என்று சொல்வார்கள்.அதற்கு மிக சரியான உதாரணம்  சாமி மகளான உனது

அண்ணிதான்.அவர் இனி தனது பிறந்த வீட்டில் இருந்தது போதும்.நான்

இப்பொழுது உனது வீட்டிற்குதான் கிளம்பி கொண்டிருந்தேன்.உன்

தாயுடனும் உனது மனைவியுடனும் கலந்து பேசி ஒரு முடிவெடுப்போம்".    "அதற்கு முன் ஒரு வார்த்தை சித்தார்த்!.நான் உன்னைப் பற்றி

கேள்விபடுவதெல்லாம்எதுவும் சரியாக இல்லை.உன்னை சரியாக்கும்

எண்ணம் உனக்கு நிஜமாகவே இருக்கிறதா?".சித்தார்த் கூனி குறுகிப்

போனான்.சந்துருவின் கையைப் பற்றி கண்களில் ஒற்றிக் கொண்டான்.


                                       

                                                    தெளிவுப் பெற்றான்.


   "


             

 


                      

     

10.Thai Mann.

   விஜயன் பயணித்த வண்டி,விஜயனின் ஊர் வந்து சேர்ந்தது.வண்டியின்

சத்தம் கேட்டதும், என்னஆச்சரியம்! விஜயனின் சொந்தங்களுடன்

அவனது ஊரே வண்டியின்எதிரே வந்து கூடி நின்றது. தனது சொந்த மண்ணின்

இயல்பான,ஆழமான,ஆத்மார்த்தமான,ஆரவாரமான  வரவேற்பில் விஜயன்

உருகிபோனான்.பிரவாகமாக பொங்கி நீர்வீழ்ச்சியாக உருமாறிக்

கொண்டிருந்த அவனுடைய கண்கள்  சொந்தங்களுடன் கரைந்து

உருகிக் கொண்டிருந்தன.    தான்  மனதளவிலும்,உடலளவிலும் தன் சொந்த மண்ணை மறந்து,அதன்

உணர்வுகளை மறந்து,மரத்துப் போய் எவ்வளவு தூரம் விலகி இருந்த

போதிலும் நீ என்றும் எங்களை சேர்ந்தவன்; உனக்கு என்றும்,எதற்கும்

நாங்கள் பக்கபலமாக இருப்போம்  என்று குறிப்பால் உணர்த்திக்

கொண்டிருக்கும் தன்  சொந்த மண்ணின் இந்த சலனமில்லாத அன்பிற்கு தான்

தகுதியானவன்தான? என்று விஜயன் மறுகிப் போனான்.இதையெல்லாம்

கூடவே நின்று கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த அந்த வண்டி ஓட்டுனர்

கூட கண் கலங்கி நின்றார்.    இதற்குள் விஜயனின் தாய் அவனது சகோதரி கைப்பற்றி விரைந்து

வந்து விஜயனை நெஞ்சார அணைத்து உச்சி முகர்ந்தார்.அவனது

சகோதரியோ, தன் சக உதிரனின் ஒரு கரம் பற்றி அதை தன் நெஞ்சோடு

சேர்த்து கொண்டார்.அவரது பிரவாகமான  அன்பு,அவர்  பற்றியிருந்த

விஜயனின் ஒரு கை மூலம் அவன் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை

பரபரவெனபரவிக் கொண்டிருந்தது.சிலிர்த்துப் போனான் விஜயன்.   தன் தாயையும்,தன் தமக்கையையும் அவர்கள் கைகள் பற்றி தன் கண்களில்

நீர் மல்கி மங்கலாகத் தெரியும் அவர்களது உருவங்களை  மாறி மாறி உற்று

உற்றுப்    பார்த்துக்கொண்டே  இருந்தான் விஜயன்.தாயும்,தமக்கையும்

திடகாத்திரமாக  இருந்தது மனதிற்கு மிகவும் தெம்பை தந்தது.கூடவே 

அவர்களது வயதும்,ஆரோக்கியமும் ஒன்றை ஒன்று ஆரோக்கியமாக

பராமரித்து வரும் பாங்கு அவர்களது தோற்றத்தில் மிளிர்ந்தது.அவர்களது

ஆரோக்கியமான,கம்பீரமான தோற்றம் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டான்

விஜயன்.    அவனது தாயோ,அவனை கண்ட அந்த ஒருநிமிடத்தில் விஜயனின் பால

காண்டம் முதல் இப்போது நிலைக்கொண்டிருக்கும் ஓய்வு  காண்டம் வரை

மானசீகமான இனிய பயணம் மேற்கொண்டு தன் நிலை வந்து சேர்ந்தார்.

விஜயனின்  சகோதரிதான் பற்றியிருந்த அவன் கை அசைத்து  அவனை

அவன்  நிலைக்கு கொண்டுவந்து சேர்த்தார்.


    அந்த வண்டி ஓட்டுனர்' விஜயனின் உடமைகளை நிதானமாக

ஒவ்வொன்றாக வண்டியில் இருந்து இறக்கிக் கொண்டிருந்தார்.அவர் தன்

பணியில் இருக்கும்போதே சில இளவட்டங்கள் அவைகளை  துரிதமாக

விஜயனின் இல்லம் கொண்டு சேர்த்தன.அவர்களது ஒன்றிய

மனப்பான்மையை கண்டு அசந்து போனான் விஜயன்.


    எல்லா சேம நலன் பரிமாற்றங்கள் முடிந்தபின் விஜயன் குடும்பத்தினர்

வீடு வரை கொண்டு வந்து  சேர்க்கப்பட்டனர்.பிறகு விஜயன் சிரம

பரிகாரங்களுக்காக சோப்பு,துண்டுடன் கொல்லைப் புறத்திற்கு அனுப்பப்

பட்டான்.பிறகு தாயும்,மகளுமாக விஜயனுக்குப் பிடித்தமான பணியாரங்கள்

தயாரிக்க ஆரம்பித்தனர்.அதற்கான மாவை பிசைந்து கொண்டிருந்த போது

அவர்களுக்கு மிகவும் பரிச்சியமான, படு  நிச்சயமான அந்த அச்சம் அவர்களை

பிசைந்தெடுத்துக் கொண்டிருந்து.
                                                                                                  தொடரும்.........