Tuesday, September 26, 2017

25.Thai Mann.

     "  காந்தி சித்தப்பாவின் இயற் பெயரே மறந்து போய்,ஊரில் எல்லோரும்

அவரை காந்தி என்ற பெயருடன்அவரை அழைக்க வேண்டிய முறையையும்

சேர்த்து அழைத்து அவரை பெருமை படுத்துகிறார்கள் என்றால் அவர்தான்

எத்தனை காந்தி விஷயங்களை அவர்களிடம் கொண்டு சேர்த்திருப்பார்.ஊர்

மக்களும் அவர் சொன்னதை எந்த அளவிற்கு உள்வாங்கியிருந்தால் அவர்

மேல் இத்தனை மரியாதை கொண்டிருப்பர்.அப்படி என்றால்,இவர்கள் நம் தேச

பிதாவின் தரிசனத்தை இந்த காந்தி சித்தப்பாவின் மூலம் அனு தினமும்

தரிசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதானே அர்த்தம்.இவர்களது

சாத்வீகமான இந்த வாழ்க்கை முறைக்கு காந்தி சித்தப்பாவும் ஒரு முக்கிய

காரணமாக  இருந்துக் கொண்டிருக்கிறார்.இத்தனைக்கும் அவர் எட்டாவது

வரைதான் படித்திருக்கிறாராம்.ஆனால்,தினமும்  ஊருக்குள்ளே

இருக்கும் அந்த சிறிய நூலகத்திற்கு போய் ஏதாவது ஒன்றை படித்துக்

கொண்டே இருப்பாராம்.அவரிடம் விஷய ஞானம் நிறைய இருக்கும்

போல." விஜயனின் யோசனை பலமாக இருந்தது.


     " என்ன தம்பி! யோசனை பலமா இருக்கும்போல;பேச்சையே காணோம்;

வாய்கால் வரப்பு வரை கூட வர சம்மதந்தானே? ".திடுக்கிட்டு சுய நினைவுக்கு

வந்தான் விஜயன். ''என்ன சித்தப்பா! இப்படி கேட்டுட்டீங்க! இந்த அக்கா

பொண்ணு செல்லம்மா  தன்னோட நடவடிக்கைகளாலே என்னை தினமும்

புறந்தள்ளி ரொம்ப வேதனைபடுத்துறா;நானு தாய் மண்ணையும்,தாய் மண்

சொந்த பந்தங்களையும் புறந்தள்ளி சீமைக்கு போய்ட்டேனாம்.என்னோட

வேலைக்கான சூழ்நிலை அந்த மாதிரி ஆயிடுச்சு; அக்கா பக்கத்து ஊரிலேயே  

இருக்கிற தைரியத்திலே சீமைக்கு போய்ட்டேன்.திரும்பி பார்க்கரதுக்குள்ளே

வேலையிலிருந்து ஓய்வு பெற நாளும் வந்தாச்சு.ஆனாலும்,எனது தவறு

மன்னிக்கவே முடியாத பெரிய தவறுதான்.பிறந்த மண்வாசனையை  மறந்தது.

செல்லம்மாவோட ரௌத்ரமும் மிகச் சரியானதுதான்.ஒரே குழப்பத்தில்

இருக்கேன்.மனசு ரொம்பவே பாரமாகி போச்சு.அதான் மனசை கொஞ்சம்

காத்தாட விடலாம்னு வெளியே வந்தேன்.சாமியே வந்த மாதிரி நீங்க

வந்தீங்க.உங்க அருகாமையும்,இந்த நிலா வெளிச்சமும்,இந்த தென்றல்

காற்றும் எம்மனசு பாரத்தை ரொம்பவே ஏறக்கிடுச்சு சித்தப்பா ". தன்னை

ஆசுவாசப் படுத்திக் கொண்டான் விஜயன்.


     காந்தி சித்தப்பா இலேசாக புன்முறுவலித்தது அந்த நிலா வெளிச்சத்தில்

மிகத் தெளிவாகத் தெரிந்தது.விஜயனுக்கு இளம் முறுவலின் அர்த்தம்

புரியவில்லை. அவரை ஏறிட்டுப் பார்த்தான்.காந்தி சித்தப்பா,"தம்பி! நீங்க

இப்படி யோசித்து பார்த்திருக்கிங்காளா?.ஒரு விஷயத்தை எடுத்துக்கிட்டா,

அந்த விஷயத்தை,நம்ம சந்தர்ப்பத்திற்கு தகுந்த மாதிரி, நமக்கு வேணுமின்னா

நமக்கு சாதகம் தரும் சூழ்நிலையாகவும் மாத்திக்கலாம்.வேணாமின்னா,அந்த

விஷயம் நமக்கு பாதகம் தரும் விஷயம் மாதிரியான சூழ்நிலையாகவும்

மாத்திக்கலாம்.ஆனாலும்,உலக நியதின்னு ஒண்ணு இருக்கு இல்லேப்பா!

அதற்கு பேர்தானப்பா எதார்த்தமும்,கண்ணியமும் ".


      விஜயனுக்கு புரிந்தது மாதிரியும் இருந்தது;புரியாத மாதிரியும் இருந்தது;

ஆனாலும் காந்தி சித்தப்பா இதை பற்றியெல்லாம் கவலைப்படாமல்," உன்

காதில் போட்டு வைக்கிறேன்.அதை மனதிற்குள் பாதுகாப்பாக இறக்கி

வைத்துக்  கொண்டாலும்,உன் சமர்த்து;இல்லை,இந்த காதில் வாங்கி,

இன்னொரு காது வழியே சருகாக்கி காற்றோடு  பறக்க விட்டாலும் மகனே

அது உன் பாடு ".என்பது போல தொடர்ந்து பேசினார்.


     "  இந்த எதார்த்தமும்,அந்த எதார்த்தத்தை கண்ணியமா கையாள்ற மனுஷ -

-தானேப்பா மனுஷன்.எதார்த்தங்கதுதான் நமக்குன்னு வாய்க்கப்பெற்ற

கடமைகள்;அவைகளை " சுமைகள் "என்ற கணக்கில் சேர்க்காமே, "சுகமான

சுமைகள் " அப்படின்னு நம்ம அறிவிலே சேர்க்க நமக்கு தெளிவு பிறக்கணும்,

அதுதானே கண்ணியமங்கறது.அந்த கண்ணியத்தை,ஏதாவது சாக்கு போக்கு

சொல்லி,தவிர்ப்பது,தவிர்க்க நினைப்பது மரியாதயை மதிக்க தெரியாதவன்

நிலை தம்பி!. தம்பியை, செல்லம்மா அந்த நிலையிலேதான் பாக்குது.அதுலே

எந்த தப்பும் இருக்கறதா எனக்குப் படலை".ஏன்னா,நம்ம செல்லம்மா,இந்த

எதார்த்தத்தையும்,கண்ணியத்தையும் ரெண்டு கண்களா பாவிச்சு அவை

காட்டுற வழியிலே போய்கிட்டு இருக்கு தம்பி! ".


      திடுக்கிட்டுப் போனான் விஜயன்.அவன் நிலையை கண்டதும்,காந்தி

சித்தப்பா," தம்பி செல்லம்மாவை பார்க்கும் போதெல்லாம் நான் பலமுறை

நினைப்பதுண்டு காவல் தெய்வம்தான் செல்லம்மாவாக பிறந்து

வந்திருக்கிறதோனு என்றவர்,செல்லமாவின் இன்னொரு பரிமாணத்தை

விஜயன் முன் வைக்க திகைத்துப் போனான் விஜயன்.





                                                                                                             தொடரும்.........  



   




  



     

No comments:

Post a Comment