Friday, September 22, 2017

22. Thai Mann.

    மறுநாள் மாலை நேரத்தில் எப்போதும் போல செல்லம்மா பாட்டி வீட்டிற்கு

வந்து சேர்ந்தாள்.முன்னால் கூடத்தில்,ஊஞ்சலில்,மெதுவாக ஆடியபடி ஒரு

புத்தகத்தில் மூழ்கி போயிருந்தான் விஜயன்.செல்லம்மாவை கண்டதும்,புன்-

-சிரிப்பை சிந்த விட்டான்.ஆனால் செல்லம்மா கண்டு கொண்டால்தானே!

அந்த கூடத்தில்,வெறும் ஊஞ்சல் மட்டும்தான் இருக்கிறது வேறு ஒன்றும்

இல்லை பாவனையில் சாதாரணமாக எப்போதும் உள்ளே போவது போல

உள்ளே போய் விட்டாள்.


    அம்மா சொன்னது நினைவிற்கு வந்தது.செல்லம்மா,இங்கிருந்து இருபது

கிலோமீட்டர் தொலைவிலுள்ள நகரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எட்.

படிப்பு படிக்கிறாளாம்.மாலையில் தன் வீட்டிற்கு சென்று,உடை மாற்றி விட்டு,

மறுநாள் கல்லூரிக்கு செல்ல தேவையான புத்தகங்களையும்,மாற்று உடை-

-களையும்,எடுத்துக் கொண்டு இங்கு அவளது பாட்டியின் துணைக்கு வந்து

விடுவாள்.காலையில் அவளது அம்மா வந்ததும் கல்லூரிக்கு கிளம்பி

விடுவாள்.பகல் முழுதும் அம்மா,பாட்டியையும்,பாட்டியின் வயல்

வரப்புகளையும்,பாட்டியின் வேலையாட்களின் உதவியுடன் கவனித்துக்

கொள்வார்.மாலையில் செல்லம்மா வந்ததும் தன் ஊர் பார்க்க கிளம்பி

விடுவார்.


    பாட்டியின் ஊர் இளவட்டங்களுக்கு செல்லம்மா  பேரில் கொள்ளை

ஆசை.ஆனால்,அருகில் செல்ல துணிச்சலில்லை.செல்லம்மா அவர்களிடம்

சொல்லி வைத்திருக்கிறாளாம்.தான்,தன் பாட்டியை கவனித்துக் கொள்ள,

பாட்டியின் ஊரில்தான் வாழ்க்கைப்பட போகிறாளாம்.ஆனால் யாருக்கு

என்று சொல்லவில்லை.அதனால் பாட்டி ஊரின் எல்லா இளைஞர்களும்

அடக்கி வாசித்தபடி வலம் வந்து கொண்டிருக்கிறார்களாம் .


    நேரே உள்ளே சென்ற செல்லம்மா," என்ன ஆத்தா! பார்க்க பரம சந்தோஷமா

 இருக்காப்பலே தெரியுது.புள்ளே  வந்த  உடனே என்ன ஒரு பூரிப்பு!ஒரு பத்து

பதினெஞ்சு வயசு குறைஞ்சு  அழகு கூடிடிச்சு போ!வயசு புள்ளையாட்டம்

வளைய,வளைய வந்து பம்பரமா வேலை பார்க்குறே!உன்னெயெ இப்படி

பாக்கத்தானே நா தவியாய் தவிச்சு கிடந்தேன்;மனசு நெறெஞ்சு போகுது

ஆத்தா!இந்த சந்தோஷம் ஒனக்கு ஆயுசுக்கும் கிடைக்கட்டும்னு ஐயனாரெ

வேண்டிக்கிறேன் ஆத்தா! பிறகு அவர் இஷ்டம் போல நடத்தட்டும் ".


   செல்லம்மா ஐயனாரை மனதார ஒரு நிமிடம் வேண்டிக் கொண்டாள்.

வேண்டுதல் முடிந்து நிமிர்ந்தவள், " ஏனாத்தா ! நீதான் இப்போ பரபரன்னு

சுறுசுறுப்பு ஆயிட்டேயே ! இனி நா எதுக்கு ஆத்தாவுக்கு,புள்ளைக்கு

 நடுவிலே?எத்தனே காலத்து கதெ பேச வேண்டியிருக்கு ஆத்தாவுக்கும்

புள்ளைக்கும் ? கதெ பேசிட்டே புள்ளைக்கும் வாய்க்கு வக்கணையா

சமைச்சுப் போட்டு சந்தோஷமா இரு ஆத்தா! என்ன சமாளிச்சுடுவே இல்லே?".

குரலில் ஏக கரிசனம்.


    வந்ததே கோபம் ஆத்தாவுக்கு." நல்ல இருக்கு புள்ளே நீ பேசற பேச்சு;

என்னோட  உசுரே நீதானே புள்ளே! நீ போயிட்டா, உசுரு இல்லமே வெறும்

சடலமா எம்புள்ளைய நானு எப்படி கொண்டாடரதாம்? ". பாட்டி முறுக்கிக்

கொள்வது தெரிந்தது. " சரி!சரி! ஒடனே கண்ணை  கசக்காதே! நா இருக்கேன்.

ஒம்புள்ளைக்கு என்னன்னா பிடிக்கும்னு சொல்லு! எல்லாத்தையும்தயார்

பண்றேன் ". பேசியபடியே  செல்லம்மா இன்னும் உள்ளே சென்று கொண்டி-

-ருந்தாள் .


    முற்றத்தில்  ஊஞ்சலில் மெதுவாக அசைந்தபடி  பாட்டிக்கும் பேத்திக்கும்

நடந்து கொண்டிருந்த உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தான் விஜயன்.

அந்த யதார்த்தமும்,கண்ணியமும் நிறைந்து தெளிந்த நீரோடையாக

சலனமின்றி பயணிக்கும் அந்த ஆழமான பாட்டிக்கும் பேத்திக்கும்

இடையிலான அன்பின் நிதர்சன ஸ்பரிசத்தை தென்றலாய் உணர்ந்தான்

விஜயன்.





                                                                                       தொடரும்......................   




 


   


No comments:

Post a Comment