Monday, September 18, 2017

19.Thai Mann.

   விஜயனின் கடிதம் மிகவும் சுவராஸ்யாமாக இருந்தது மீனாவிற்கு.

அந்தக் கடிதத்தை எத்தனை முறை படித்தாலும் சலிப்பு தட்டவேயில்லை.

மறுபடியும்,மறுபடியும்  படித்துக் கொண்டே இருந்தாள் .விஜயனிடமிருந்து

அடுத்தக் கடிதம் வரும்வரை இதையேதான் செய்துக் கொண்டிருப்பாள்

போலிருக்கிறது.விஜயனை சகட்டுமேனிக்கும் தூக்கியடித்த அந்தப் புயல்

இவ்வளவுத்தொலைவில் இருக்கும் மீனாவையும் விட்டு வைக்கவில்லை.

தனக்குள் வாரி சுருட்டிக் கொண்டது.மீனா,அந்த புயலுக்குள் ஒரு கதகதப்பை

உணர்ந்தாள். அந்த உணர்வு அவளுக்கு விசித்திரமாக இருந்தது.அந்த

விசித்திரத்தின் ஊடே மறுபடியும்,மறுபடியும் விஜயனின் கடிதத்தில்

 ஐக்கியமானாள் .


 
    இரண்டு நாளாக அம்மாவின் போக்கு ஸ்ரீதருக்கும் விசித்திரமாக இருந்தது.

அப்படி என்னதான் அப்பா எழுதி இருப்பார்.அப்பாவின் முதல் கடிதங்களை

எல்லாம் ஸ்ரீதரும் படித்திருக்கிறான்.சுகமான அனுபவம்தான்.மறுப்பதற்கு

இல்லை.ஆனால்,இந்த கடிதத்தை அம்மா இன்னும் படிக்க தரவேயில்லை.

அப்படி என்றால் ஏதாவது தனிப்பட்ட முறையில் எழுதி இருப்பாரோ?அப்படி

என்றால் அம்மா இப்படி பகிரங்கமாக படிப்பானேன்.ஒன்றும் விளங்கவில்லை

ஸ்ரீதருக்கு.அம்மா படித்து விட்டுத் தரட்டும் என்றபடி தொலைகாட்சி பெட்டிக்கு

உயிரூட்டினான்.அங்கிருந்தபடியே அம்மாவை அவ்வப்போது பார்வையால்

அளந்துக் கொண்டிருந்தான்,


   அம்மா அந்த கடிதத்தில் மூழ்கி போயிருந்தாள்.கடிதத்தில் விஜயன்

விவரித்த அந்தப்  பெண் புயலின் பிரவேசக் காட்சியை  நேரில் பார்த்துக்

கொண்டிருப்பது போலவே உணர்ந்தாள்.விஜயன் கடிதத்தில் தொடர்ந்தான்.


  " மாலையில் வந்த அந்த புயலில்,அதன்  வேகத்தில்,அதன் தாக்கத்திற்கு

ஈடாக ஒரு நேர்த்தியான அழகு ஒளிர்ந்து கொண்டிருந்தது. அந்த புயலின்

தாக்கம் சற்று மட்டுப்பட்டிருந்தால் கூட அந்த மாசு மருவற்ற அந்த

அழகை,ஆண்,பெண் என்ற வித்தியாசமும்,எந்த வயது வித்தியாசமுமின்றி

மிகவும் வாஞ்சையுடன் ரசித்திருப்பார்கள்.அத்தனை திருத்தமாக இருந்தது

அந்த பெண் புயல்".


   " அந்த பெண் புயலின் தாக்கத்தை  மனதாலும்,உடலாலும் எதிர் கொள்ளும்

சக்தியை,அம்மா,முழுவதுமாக இழந்து போனது அவரது தோற்றத்திலேயே

தெளிவாகிப் போனது.ஆனால் மீனா!எனக்கு அம்மாவை போல அந்த புயலின்

கடுமையான தாக்கம் அப்போதைக்கு உறைக்கவில்லை .அதன் சாத்வீகமான

அழகில் மெய் மறந்து போனேன்.நாம் இங்கிருந்து கிளம்பும்போது அதற்கு

இரண்டு வயது இருக்குமா?ஆனால் இப்பொழுது நீங்கள் எல்லோரும்

அதனைப்  பார்த்தால் அசந்துதான் போவீ ர்கள்.கிராமத்திற்கே உரித்தான அந்த

தெளிவான தைரியம்,அதன்  தோற்றத்திற்கு மெருகேற்றிக் கொண்டிருந்தது".


    "அந்தப்  பெண் புயல் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.ஏன் நான் அங்கு

நிற்பதையே ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.நேராக அம்மாவை

நோக்கிச் சென்றது.அம்மா அயர்ந்து போய் அமர்ந்திருந்தார்.அவர் முன்

தன்னை சரிபடுத்தி,நெறிபடுத்தி அமர்ந்தது.மேலும் தளர்ந்து போயிருந்த

அம்மாவின் முகவாயை உயர்த்திப்  பற்றி,அம்மாவின் கண்ணை உற்று

நோக்கியபடி அழுத்தமாக,திருத்தமாக,தெளிவாக கேட்டது .உருக்குலைந்துப்

போனேன் நான்".


   மீனாவிற்கு கடிதத்தை தொடர தைரியம் வரவில்லை.அப்படியே படிக்காமல்

விட்டு  விடலாமா? என்று முதல் முறை படிக்கும்போது தோன்றிய எண்ணம்

இப்போதும் தவறாமல் திரும்பவும் தோன்றியது.ஆனாலும் தொடர்ந்து

படித்தாள்.


   "அந்த பெண் புயல் கேட்டக் கேள்வி என்னத் தெரியுமா? "ஏனாத்தா?

எங்களுக்குத்தான் சொல்லிக் கொடுத்தியாக்கும் "தந்தை தாய் பேண் "

அப்படின்னு. உம்பிள்ளைக்கு சொல்லிக் கொடுக்க மறந்துட்டேப்போல".

அம்மாவிற்கும்,பிள்ளைக்கும் பலத்த சேதத்தை ஏற்படுத்தி விட்டு வெளியேறி

விட்டது அந்தக் கடும் புயல்.நான் அந்த புயலிலிருந்து மீண்டு வருவேனா மீனா

?.கடிதம் முடிந்திருந்தது,


 

                                                                                                தொடரும்...................
   


     

No comments:

Post a Comment