Friday, September 22, 2017

23.Thai Mann.

    விஜயன் ஊர் வந்து விளையாட்டாய் மூன்று மாதங்கள் கடந்து

விட்டன.அவன் குடும்பம் இருந்த சீமையிலிருந்து ஆளாளுக்கு எப்போது

திரும்பி வருவீர்கள் என்ற நச்சரிப்பு தொடர்ந்து கொண்டேயிருந்தது.விஜயன்

ஒன்றை கவனித்தான்.செல்லம்மா,தினமும் கல்லூரிக்கு கிளம்பும் நேரம்

குறைந்தது ஒரு நான்கைந்து பேராவது தங்கள் மருந்து சீட்டையும்,நகரத்தில்

மட்டுமேகிடைக்கும் வேறு,வேறுபொருட்களுக்கான விண்ணப்பத்தையும்

அதற்குஉண்டான தொகையையும்  செல்லம்மா கையில் தந்துவிட்டு

செல்வார்கள்.செல்லம்மாவும் கரிசனமாக அவரவர்களுக்கான

மருந்தையும், மீதி தொகையையும் சரியாக கொண்டு வந்து சேர்த்து

விடுவாள்.


     செல்லம்மாவை பார்க்கும் போதெல்லாம்,விஜயனுக்குள் ஒரு புதிய

சக்தி பிறப்பதை அவன் உணர்ந்தான்.அவள் தேனி போல சுறுசுறுப்பாய்

இயங்குவதை நாளெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.இந்த இளம்

வயதிலேயே அவளுக்கு ,தனக்கு எது தேவை?எது தேவையில்லை? என்பதில்

மிகத் தெளிவாக இருந்தாள்.அனாவசியமான,அர்த்தமற்ற வார்த்தைகள்

அவளிடமிருந்து பிறக்காது.அடுத்தவர்களிடமிருந்தும் பிறக்க விட மாட்டாள்.

இயன்றால், அடுத்தவர்களுக்கு உதவுவாள்.இயலவில்லை எனில்,தெளிவாக

கூறி  விடுவாள்.ஆனால்,தவறை,தவறு என்று சரியாக கூறுவதில் அவளுக்கு

நிகர் அவள்தான்.அதில் எந்த விதமான  பாராபட்சமும் இருக்காது.


     செல்லம்மாவின் சமையல்,அவளது ஆத்தாவின் சமையல் போலவே

அத்தனை சுவையாக இருக்கும்.இன்னும் சொல்லப் போனால்,அவளது

ஆத்தாவை கேட்டு,கேட்டு,விஜயனுக்கு பிடித்ததை எல்லாம் பிரியமாக

சமைத்து வைத்திருப்பாள்.அதன் ருசியே அவளது பாசத்தை அங்குலம்

அங்குலமாக புரிய வைக்கும்.ஆனால்,அவன் பொருள் தேடச் சென்றவன்,

பெற்றத் தாயை மறந்து,உற்றார்,உறவினர்களை மறந்து,தன் குடும்பத்திற்கு

உறவுகளை  பாலமாக்க மறந்து,இத்தனைக் காலமாக பொருளைத் தேடிக்

கொண்டே இருப்பது ,உண்மையில் அவளுக்கு புரியாத பெரும் புதிராக

இருந்தது.


      ஆனால்,தாய்க்கும்,பிள்ளைக்கும் நடுவில் பாசப் பிணைபபுக்கான அதிக

சந்தர்ப்பங்களை உருவாக்கியபடி இருந்தாள் செல்லம்மா.அவளது ,பாங்கான

பக்குவமானநடவடிக்கைகள்  விஜயனை ஆச்சரியப்படுத்திக்கொண்டே

இருக்கும்.அவைகள் ஏராளமான படிப்பினைகளை தந்துக் கொண்டே இருந்தன.

ஆனால் எக்காரணம் கொண்டும் விஜயன் பக்கம் அவள் திரும்புவதே இல்லை.

அவள்பாட்டிற்கு அவளது வேலைகளை பார்த்துக் கொண்டிருப்பாள்.விஜயன்

வந்ததிலிருந்து அவனது அக்கா எப்போதும் போல நித்தமும் வந்து மாலை

செல்லம்மா வரை தங்குவதில்லை.தினமும் காலையில் வந்து வேலையாட்-

-களுக்கு என்ன வேலையோ சொல்லி விட்டு,அம்மா,தம்பியோடு சிறிது நேரம்

அளவளாவி விட்டு சென்று விடுவாள்.


      கிராமம் ஆனதால்,காலையிலிருந்து,மாலை வரை ஏதாவது ஒரு

காரணத்தினால் யாராவது குசலம் விசாரித்தபடி வந்து போய்க் கொண்டு

இருந்தார்கள்.பொதுவாக அவர்களது பேச்சு வெள்ளந்தியாக இருக்கும்.

விஜயனை அவர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளை போல விசாரித்து விட்டு

செல்வார்கள்.விஜயனும் அக்காவுடன் தோப்பு துரவுகளுக்கு அவ்வப்போது

சென்று வந்ததால்,ஓரளவிற்கு கிராமத்து வாழ்க்கை பிடிப்பட்டது.

செல்லம்மாவை தவிர, அக்கா குடும்பத்தினர் யாவருக்கும் மிகவும்

பிடித்தவனான். மாமாவும் அவ்வப்போது அக்கம்,பக்கம் அழைத்துக் கொண்டு

போய்,அவனை அவன்  பக்கத்து ஜனங்களுக்கு அறிந்த முகமாக்கினார்.


     ஒரு பக்கம், விஜயன் தன் தொலை தூரக் குடும்பத்தை நினைத்து

மிகவும் விசனப்பட்டான்.மறுபக்கம்,இந்த கிராமத்து சூழ்நிலைக்கு ஒன்றி

அம்மாவுடனும்,அக்கா குடும்பத்தினருடனும்  நிரந்தரமாக தங்கி விடலாமா?

என்றும் மனதில் பேரவா  இருந்தது.இருதலைக் கொள்ளி எறும்பாக தனக்குள்

தவித்துக் கொண்டிருந்தான் விஜயன்.





                                                                                                தொடரும்...........


 

No comments:

Post a Comment