Friday, September 18, 2015

18.Thai Mann.

   விஜயன் தமக்கையின் வீட்டில் அந்த பத்ரகாளியின் வருகைக்காக இருட்டும்

வரைக்  காத்திருந்தும் அவள் வரவேயில்லை.வேறு வழியின்றி வீட்டில்

எல்லோரிடமும் விடைப் பெற்று சோர்ந்த முகத்துடன் வீடு வந்து சேர்ந்தான்.

தமக்கையின் வீட்டிலும் பெரும் அசௌகரியத்துடன் விஜயனை வழியனுப்பி

வைத்தார்கள்.


    விஜயனின் சோர்ந்த முகத்தை பார்த்ததும்,அவனது தாய்க்கு எல்லாமே

புரிந்து போயிற்று.ஆனால் தனது கண்ணான மகனை எப்படி ஆறுதல் கூ றி

அவனை தெளிவுப் படுத்துவது என்பதுதான் புரியவில்லை. மேலும் விவரம்

எதுவும் கேட்டு  தனது அருமை மகனை சங்கடப்படுத்த விரும்பாமல்  அவன்

அலுப்புத் தீர குளித்து விட்டு வரட்டும் என்று உள்ளே சென்று துண்டை எடுத்து

 வந்து அவன் தோள் மீது  போட்டு விட்டு அவனைக் கொல்லைப்புறம்

அனுப்பி வைத்தார்.


    ஆனால் அந்த குளிர்ந்த நீராலும் விஜயனை ஆசுவாசப்படுத்த

முடியவில்லை. தமக்கை வீட்டிற்கு புறப்பட்டபோது உண்டான உற்சாகம்

முற்றிலுமாக வடிந்து போனது.குளித்து முடித்து வந்து உண்ண அமர்ந்த

பின்னும் அவனது மனது ஒரு நிலையில் இல்லாமல் தத்தளித்துக் கொண்டே

இருந்தது.தட்டில் கன கம்பீரமாய் வீற்றிருக்கும்,ஆவிப் பறக்கும்,விதவிதமான,

கண்ணுக்கு இதமான உணவு பதார்த்தங்கள் அனைத்தையும் விஜயன் எவ்வித

உணர்வும் இன்றி பார்த்த வண்ணம் இருந்தான்.

 
     ஒரு  விஷயம் அவனது மனதை குடைந்துக் கொண்டே இருந்தது.ஒரு

இருபது இருபத்திரண்டு வயது பெண்ணிற்கு, ஏறக்குறைய இருபது ஆண்டுகள்

பணி  நிமித்தம் வெளி நாட்டில் இருந்து விட்டு தாயகத்திற்கு வந்திருக்கும்

தாய் மாமனை பார்க்க விரும்பாமல் தவிர்க்கிறாள் என்றால்,ஏதோ பெரிய

விஷயமாகத்தான் இருக்க வேண்டும்.அது என்னவாக இருக்கும் என்பது

விஜயனுக்கு பிடிபடவேயில்லை.


   "ஏம்ப்பா! என் மகனுக்கு எல்லாமே பிடிச்சதாதானே ஆசையா சமைச்சி,

அழகா தட்டிலே எடுத்து வச்சிருக்கேன்.எம்புள்ளை சாப்பிடற அழகை

கண்ணார பார்த்து ரசிக்கத்தானே பக்கத்திலேயே தவமா உக்காந்திருக்கேன்.

எதையுமே தொடாமே இப்படி பார்த்துட்டே இருந்தா எப்படி சாமி? இப்போ

எம்பையனோட   நாக்கு பழைய ருசி எல்லாத்தையும் மறந்திடிச்சோ?". என

விஜயனின்  அம்மா விஜயனின் கைப்பற்றி அரற்றத் தொடங்கவும் விஜயன்

விழித்துக் கொண்டான்.


   அம்மாவை நிமிர்ந்து பார்த்தான்.அம்மாவின் அன்பு காட்டாற்று வெள்ளமாக

பிரவாகமெடுப்பதைக் கண்டான்.அந்தப் பிரவாகத்தில் தன் உடலும்,உணர்வும்

ஒரு சேர அதிர்ந்துக் கொண்டிருப்பது புரிந்தது.தன் அம்மாவின் அருகாமை

அவளது முந்தானையில்தான் இருக்கிறது என்ற சூட்சமத்தைப் புரிந்துக்

கொண்டு அதைப் பற்றியப்படியே,அவளை சுற்றிச் சுற்றி வந்த தன் சிறு

வயது உலகம் அவன் கண்முன் விரிந்தது.


    தன் உடலையும்,உணர்வுகளையும் ஒருமுகப்படுத்தினான்."எனக்குப்

புரியாத புதிர்களெல்லாம் புரிகிறபோது புரியட்டும்.இப்போது அம்மாவை

எந்த விதத்திலும் சங்கடப்படுத்த வேண்டாம்" என முடிவெடுத்தவனாய்

தட்டிலிருந்த பதார்த்தங்களை கண்கள் விரியப் பார்த்தான்.


     சிறுப் பிள்ளைஆகி அம்மாவின் முன் கை நீட்ட,அம்மாவின் கண்ணில்

அருவியாய் நீர் ஊற்று தடம் பதித்தது.அதனை தன் முந்தானையால்

விலக்கியப்படி  தன் பிள்ளையின் நீட்டி,மடங்கி,மறுபடியும்,மறுபடியும்

நீட்டி,நீட்டி மடங்கும் கைகளில்,ஒவ்வொரு பலகாரமாக அதற்கான

சட்னி,சாம்பாருடன் தோய்த்து தோய்த்து வைத்து,பலகாரங்களின் ருசியை

பலமடங்காக்கினார் அம்மா.ரசித்து,ருசித்து உண்ட வண்ணம் இருந்த

விஜயனுக்கோ,தான் இப்போதுதான் தன் நீண்ட உறக்கத்திலிருந்து விழித்து

கொண்ட கும்பகர்ணனாய் உணர்ந்தான்.


    ஒவ்வொரு பலகாரமும்,அதற்கான சரியான இணையுடன் இணைந்து

அதற்கான பிரத்யோக ருசியுடன் நாக்கு மொட்டுகளில் கரைந்து அதற்கே

 உரித்தான உணர்வு பின்னணிகளை உசுப்பி விட்டது.மெய் மறந்து உண்டுக்

களித்தான் விஜயன். அதனைக் கண்டுக் களித்தாள் அவனது தாய்.


   என்றைக்கும் இல்லாது மிக ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றுத் திரும்பினான்

விஜயன்.கண்கள் பளிச்சென்று திறந்தன.மனதும்,சாணியில் மெழுகி,பரந்து

இடப்பட்ட வாசல் கோலம் போல குதூகலித்தது. விடிந்தும்,விடியாத காலை

நேரங்களின் பரிச்சயம் கவிதை.எல்லோரது மனதையும் தெளிவுப் படுத்திக்

கொண்டே செல்லும் தென்றல்.விஜயன் அம்மாவைத் தேடிக் கொண்டே

வெளியில் வர,அவனது தெருவே அகமும்,முகமும் அன்றலர்ந்த மலராய்

மலர்ந்து அவனுக்கு முகமன் கூறியது.இளகிப் போனான் விஜயன்.


   ஆனால் அன்று மாலையே அவனது இளகிய மனம் இறுகி போகும்படியாக

பூ ஒன்று புயலாகி வந்து நின்றது.


                                                                                                 தொடரும்...............    

          

No comments:

Post a Comment