Tuesday, September 16, 2014

12.Thai Mann.

   வேப்பமரக் காற்றில்,அதன் சிலுசிலுப்பில் ஆழ்ந்து உறங்கி போன விஜயன்

கண் விழித்து பார்க்கும்போது  மாலை மணி மூன்றாகி விட்டது.சிறிது நேரம்

அப்படியே படுத்துக் கொண்டிருந்தான்.ஒரு நொடி, அவனுக்கு தான் எங்கு

இருக்கிறோம் என்பது பிடிபடவில்லை.பிறகு ஒவ்வொன்றாக பிடிபட்டது.

மனது, ஆழ்ந்த உறக்கத்தின் விளைவாக,இறக்கைக் கட்டி பறக்கும் நிலையில்

இருந்தது.தான் இப்படி உறங்கி பல யுகங்கள் ஆகி இருப்பது போல

விஜயனுக்கு ஒரு உணர்வு.மனது மிகவும் தெளிவாக இருந்தது.


    சுற்றும்,முற்றும் பார்த்தான்.அம்மாவும்,அக்காவும் உள்ளே வேலையாக

இருப்பார்கள் போல.எழுந்து உட்கார்ந்தான்.அவ்வப்போது வந்து,வந்து

எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த இருவரும் இப்போதும் வந்து எட்டிப்

பார்த்தார்கள்.ஆளுக்கு ஒரு பக்கமாக வந்து அமர்ந்து கொண்டார்கள்.

அம்மா,தன முந்தானையால் அவனது முகம் முழுதும் ஒற்றி எடுத்தார்.

அப்பொழுது,தான் சிறு வயதில் உணர்ந்த தன் தாயின் உடல் வாசத்தை

இப்பொழுதும் உணர்ந்தான் விஜயன்.உள்ளம் பொங்கி பொங்கி வழிந்தது.

அவர்கள் இருவரையும் பார்த்து முறுவலித்தான்.அதில் அவனது  சிறு

பிராயத்தின் முறுவலே பிரதிபலித்தது. அவனது ஆழ்ந்த சிறு வயது

எண்ணம் மிக அழகாக அவனது முகத்தில் பிரதிபலித்தது.


   அவனது மென்மையான,தண்மையான, ஆழமான அன்பில் தோய்த்தெடுத்த

முறுவலில்  இழைந்தோடிய  அந்த ஸ்பரிசத்தை,அவனது அம்மா

ஆத்மார்த்தமாகப் பெற்றுக் கொண்டார்.அந்த ஸ்பரிசம் தந்த வெதுவெதுப்பில்

 அவன் தலை வருடி வாஞ்சையுடன் கேட்டார். " சாமி! நல்லா

தூங்கினேயாப்பா? களைப்பெல்லாம் தீர்ந்ததா? ".அக்காவும் அவனருகில்

அமர்ந்து,அவன் முகமுழுவதையும், தன் இரு கைகளால்,இரு பக்கங்களிலும்,

மேலிருந்து கீழாக வருடி எடுத்து நெட்டி முறித்து திருஷ்டிக் கழித்தார்."அம்மா!

தம்பி முகம் பாரேன்.பூர்ண சந்திரன் போல.நல்லாத் தூங்கி,களைப்பை

எல்லாம் களைந்து போட்டிருப்பான் போல".அக்கா ஆனந்தமாக,சன்னமாக

சிரித்தார்.


   " சரி!சரி! தம்பி மிகவும் பசியோடு இருப்பான் போல.நீயும் எவ்வளவு

நேரம்தான் தம்பி எழுந்திருக்கட்டும்னு காத்திட்டிருப்பே!எல்லாத்தையும்

எடுத்து வை தாயி! நான் வந்து இரண்டு பேருக்குமா பரிமாறேன்". என்ற

அம்மாவைத் திரும்பிப் பார்த்த அக்கா " என்னை விடும்மா!தம்பி!அம்மா ஏன்

இன்னும் சாப்பிடலன்னு கேளு!".என்றபடி, பரிகாசமாக சிரித்தார்.


    விஜயன் அயர்ந்து போனான்." என்னக்கா இது! என்னை எழுப்பி இருக்க

வேண்டியதுதானே! இருவரும்,இவ்வளவு நேரமா சாப்பிடாம இருப்பீங்க!

நீங்க சாப்பாடு எடுத்து வைங்க!நான் இதோ முகம் கழுவிட்டு வந்துர்றேன்".

விஜயன் எழுந்து பின்கட்டு போனான்.


    மூவரும் சேர்ந்து சாப்பிட்டார்கள்.அம்மாவும்,அக்காவும் சேர்ந்து தங்கள்

அன்பை குழைத்து சமைத்த விதவிதமான புலால் உணவு,அமிர்தமாக நாவின் 

ருசி அரும்புகளில் ருசிக்கப்பட்டு , நெஞ்சில் கரைந்து, மனதை நனைத்தது.

" உணவு என்றால் இதுவல்லவோ உணவு. இவ்வளவு ருசியாக இருக்கிறதே!

கிராமத்து மணம்  மாறாமல் அப்படியே இருக்கிறதே!அப்படி என்றால் அன்பும்  

மாறாமல் இருக்கிறது என்றுதானே அர்த்தம்". விஜயன் மறுகிப் போனான்.


   பிறகு எல்லா நினைவுகளையும் ஒரு பக்கமாக நிறுத்தி விட்டு,தாயுடனும்,

தமக்கையுடனும் மனம் நிறைந்து அளவளாவிக் கொண்டே,ஒவ்வொரு

பதார்த்தமாக ரசித்து,ருசித்து,உண்டான் விஜயன்.ஒருவருக்கு ஒருவர்

விருந்தளிப்பவர்களாவும்,விருந்தாளியாகவும் மாறி, மாறி  பரிமாறிக்

கொண்டே உணவு உண்டார்கள்.அந்த ருசியான உணவுடன், பல ருசியான 

நினைவுகளையும்,கலந்து,கலந்து உண்டார்கள்.உணவும்,அதனைச் சார்ந்த

நினைவுகளும் தித்தித்தன.ஒவ்வொரு பதார்த்தத்துக்குமான விஜயனது

இயல்பான மனம் நிறைந்த பாராட்டுக்கள், அவனது தாய்,தமக்கையின்

மனதுகளை நிறைத்தன. விஜயன் மனம் நிறைந்து, வயிறு நிறைந்து

உண்டிருக்கிறான் என்ற திருப்தி அவர்களது மனதை நிறைத்தது.


    விஸ்தாரமாக உண்டு முடித்துவிட்டு வெற்றிலை பாக்குப் பெட்டியுடன்

கூடத்தில் வந்து மூவரும் அமர்ந்தார்கள்.விஜயனின் தாய்,தன் குழந்தைகள்

இருவருக்கும்,பாந்தமாக வெற்றிலைகளை முன்னும்,பின்னும் துடைத்து,

அளவாக பாக்கும்,சுண்ணாம்பும் சேர்த்து  தந்துக் கொண்டிருந்தார்.


    ஆனால்,அதே நேரத்தில் அதற்கு அப்பால் ஒரு வீட்டில், சுண்ணாம்பு

காளவாய் ஒன்று தகதகவென கனன்றுக் கொண்டிருந்தது.
                                                                                                         தொடரும்.........  


      


       

No comments:

Post a Comment