Sunday, November 16, 2014

13.Thai Mann.

   மாலை  மணி ஐந்து ஆனதும்,விஜயன் தனது சகோதரியுடன்  அவரது

குடும்பத்தினரை சந்திக்க அவரது ஊருக்குக் கிளம்பினான்.அவனுக்கு

ஒரு விஷயம் புரியவில்லை.புரியவில்லை என்றால் புரியவே இல்லை.

அதாவது, ஏன் அக்கா குடும்பத்தார் ஒருவரும்,அவன் வந்து இவ்வளவு

நேரமாகியும்,அவனை சந்திக்க வரவில்லை  என்று அவனுக்குப்

புரியவில்லை.அதாவது புரியவே இல்லை.


   தனது  தாயிடம் காரணம் கேட்டதற்கு," அந்தி சாய்ந்ததும்,அக்காவுடன் நீ

அக்கா வீட்டிற்கு போய் எல்லோரையும் பார்த்துட்டு வாப்பா! உனக்கே

எல்லாம் புரியும்".நீண்ட பெருமூச்சுடன் அவன் தாய் எழுந்திருந்து வெளியே

போனார்.அவர் யாரையோ அழைக்கும் குரல் கேட்டது."முருகா இங்கே வா

சாமி.குதிரைக்கு தீவனம் போட்டு தண்ணி காட்டினையோ!".தன் தாயின்

பரிவான விசாரணையில் இளகிப் போனான் விஜயன்."ஆயிடிச்சு ஆத்தா!".

பரிவான விசாரணைக்கு வந்த பவ்யமான பதில் விஜயனின் மனதைத்

தென்றலாக வருடியது.அந்த பவ்யமான குரலுக்கு சொந்தக்காரனைக்

காண மனம் விழைந்தது.


   "இந்த சாமானை எல்லாம் வண்டியில் ஏத்திட்டு,அக்காவுக்கும்,தம்பிக்கும்

சேர்த்து தைரியத்தையும் ஏத்திட்டு நம்ப மாப்பிள்ளை ஐயா வீட்டுக்கு

போய்ட்டு வரணும்ப்பா! நம்ப வீட்டுக்குப்  பிள்ளையாய் பிறக்க வேண்டியவர்,

மறுப் பிள்ளையாய்,மாப்பிள்ளையாய் நம்பளை  காக்க வந்த சாமி புள்ளை !

நானும் என்னோட குடும்பமும் ஏதோ ஒரு சந்தர்பத்திலே ஏதோ ஒரு

உத்தமமான காரியம் பண்ணியிருக்கோம் போல.அதனாலதானோ

என்னமோ சாமி,தம் புள்ளையையே நம்ப வீட்டிற்கு மாப்பிள்ளையாய்

அனுப்பி வெச்சார் போல!".


    விஜயனுக்கு சுருக்கென்றது.மாமாவிற்கு அவரது பெரிய குடும்பத்தின்

பொறுப்புகளே ஏகத்திற்கு இருக்க,தானும் பொறுப்பில்லாமல்,தன்

 பொறுப்புக்களையும் சேர்த்து அவரின் பொறுப்பில் சேர்த்து விட்டது

என்றைக்கும் இல்லாமல் இன்று பெரிதும் சங்கடப் படுத்தியது.


   மாமாவின் உருவம் கண் முன்னால் வந்து நின்றது.கம்பீரமும்கண்ணியமும்,

எதார்த்தமான பேச்சும்,அவரது  நடை,உடை,பாவனை எல்லாம்.அவரை

ஒரு முறை சந்தித்து விட்டால்,எவருடைய எதிர்மறை எண்ணங்களும்

ஓரங்கட்டிவிடும்.அளவான,அர்த்தமுள்ள பேச்சு.அடுத்தவரது பேச்சும்,

அளவானதாக,அர்த்தமுள்ளதாக அமைய  வைக்கும் சாதுர்யம்.விஜயனுக்கே

அவரை சந்திக்க ஒருவிதமான தயக்கம் அவனுள் உருவாகிக் கொண்டு

இருந்தது.


     இருந்தாலும், சில விஷயங்கள் தவிர்க்க முடியாதவை.தவிர்க்கவும்

கூடாதவை.நேருக்கு நேர் சந்தித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில்

இருப்பவை.எனவே,விஜயன் ஒரு வழியாக மனதை திடப்படுத்திக் கொண்டு,

தன்  தாயிடம் விடைப் பெற்றுக் கொண்டு தன் நேசமான தமக்கையுடன்,

அவரது ஊருக்கு புறப்பட்டுச் சென்றான்.ஆனால்  தான்,தன் தமக்கையின்

ஊருக்குசென்று வர உத்தேசித்ததிலிருந்து,தான் தாயின் நடவடிக்கைகளிலோ,

தன் தமக்கையின் நடவடிக்கைகளிலோ ஒரு சுரத்தே இல்லாமலிருப்பதை

விஜயன் கவனித்தான்.அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.


     வண்டியில் ஏறி அமர்ந்ததும்,தன் தமக்கையின் முன்னிலையில்

வண்டியை செலுத்தும் முருகனிடம்," முருகா ! பெரியம்மாவும்,

சின்னம்மாவும் ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறார்கள்?உனக்கு ஏதாவது

விஷயம் தெரியுமா?" என்றுக் கேட்டான். வண்டியின் கடிவாளத்தை பிடித்து

அமர்ந்து,குதிரைகளை தட்டிக் கொடுத்து,அவற்றை பயணத்திற்கு தயார்ப்

படுத்திக் கொண்டிருந்த முருகன்,ஒரு நிமிடம் வண்டியின் உள்புறம் திரும்பி

விஜயனின் தமக்கையை பார்த்தான்.அவர் மெளனமாக அமர்ந்திருந்தார்.பின்பு

அவன் விஜயன் பக்கம் திரும்பி,"அங்கே போனபிறகு உங்களுக்கே

புரியுமுங்க ஐயா!" என்றவன்,மறுபடியும் சின்னம்மா பக்கம் திரும்பி,

"போலாங்களா அம்மா!" என்று உத்தரவு வாங்கியபின்,குதிரைகளை

பாந்தமாக தட்டி விட்டான்.


 


                                                                                                      தொடரும்............... 


 









     

No comments:

Post a Comment