Friday, September 12, 2014

11.Thai Mann.

   விஜயன் மனது நிரம்பி வழிந்தது.தன்னை சார்ந்தவர்களும்,தனது ஊரும்

அதே  இனிய மண் வாசனையுடனும், இயல்பான அன்புடனும்  தன்னை

உள்வாங்கிக் கொண்டது மனதை மயிலிறகாக்கியது.அது சிட்டுக் குருவியாகி

நாலாபுறமும் சந்தோஷமாக பறந்து உலாவிக் கொண்டிருந்தது.எந்த

விதமான செயற்கை சத்தங்களுமின்றி,இயற்கையான ஒலிகள் அவனுடைய

சூழ்நிலையை ரம்மியமாக்கின.


     ஆனாலும் ஏதோ ஒன்று அவனை  மிகவும் நெருடிக் கொண்டிருந்தது.

வண்டியிலிருந்து இறங்கின சமயத்திலிருந்து ஊர் அவ்வப்போது இங்கும்

அங்குமாக பார்வையை சுழற்றிக் கொண்டிருந்தது.அதில் ஒரு பரபரப்பு

இருந்து கொண்டேயிருந்தது.விஜயனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

ஆனால் யாரையும் காரணம் கேட்கத் தோன்றவில்லை.


   வீட்டிற்கு பின்னால் சற்றுத் தள்ளி அமைந்திருந்த பம்பு  செட்டிலிருந்து

நீர், ஆனந்தமாக பக்கத்திலிருந்த பெரியத் தொட்டிக்குள்  விழுந்துக்

கொண்டிருந்தது.சுற்றிலும் பச்சைபசெலேன்றிருக்கும் பெரிய வயல்களுக்கு

நடுவில் இந்த சிறிய அழகான நீர்வீழ்ச்சியாக, இந்த பம்ப் செட் நீரை  வாரி

இறைத்துக் கொண்டிருந்தது.வானுயர்ந்த கட்டிடங்களையே பார்த்து

பார்த்துப் பழகிப் போன கண்களுக்கு இந்த வயலும்,இந்த வயல் சார்ந்த

இடங்களும் கண்கொள்ளாக் காட்சிகளாக மனதை குதூகலிக்கச் செய்தது.

விஜயன் சுற்றிலும் பார்த்து இரசித்துக் கொண்டே,அக்கம் பக்கம் வயலில்

இருப்பவர்களிடம் அளவளாவிக்கொண்டே ஆசை ஆசையாகக் குளித்துக்

கொண்டேயிருந்தான்.அவன் குளிக்கும் விதம் பார்த்து,அக்கம் பக்கத்தில்

இருந்தவர்கள், " தம்பி, இன்னும் ஒரு வருடத்திற்கு சேர்த்து குளிக்கும்

போல!". என்று பரிகாசம் செய்தும்,பிரியவே மனமில்லாமல் நீரை விட்டுப்

பிரிந்து வந்தான்.


      விஜயனின் தாயார் ,குளித்து  முடித்து தலைத் துவட்டிக் கொண்டே வரும்

மகனை அதுவும் மனதும், உடலும் ஒன்று சேர அழுக்கு அகற்றி பளீரென

மலர்ந்தபடி, அங்கங்கே நீர் திவலைகள் தங்கள் முத்திரைகளை  பதிக்க, மனம்

நிறைந்த புன்முறுவலுடன் தங்களை நோக்கி வந்து கொண்டிருக்கும் அன்பு

 மகனை  மனம் கொள்ளா ஆசையுடன்,வைத்த கண் வாங்காமல் பார்த்துக்

கொண்டேயிருந்தார்.அதை கவனித்த விஜயனின் தமக்கை, " அம்மா!உங்க

பார்வையை திருப்பி அதோ அந்த மலையை பாக்கறது!அது தகர்ந்தாலும்

தகரும்.தம்பியை இப்படி பாக்கறீங்க?இனி ஊரார் கண்களுக்கு ஒரு

திருஷ்டியும்,உங்க கண்களுக்கு ஒரு திருஷ்டியும் என தனித் தனியாக

தம்பிக்கு திருஷ்டி சுற்றிப் போடவேண்டியதுதான் ". என்று தன் தாயை

பரிகாசம் செய்தார்.தாயும், மகளும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்

கொண்டனர்.உண்மையில் விஜயனின் தமக்கையின் கண்களும்,தன் தாயின்

கண்களுக்கு நிகராக தன் தம்பியின் குளித்து முடித்து வரும் அந்த அழகை

வாஞ்சையுடன் பார்த்துக் கொண்டேயிருந்தன.


    விஜயன் உண்ண பாயும்  விரிக்கப் பட்டு தலை வாழை இலையும் 

விரிக்கப்பட்டு,அவனுக்கு பிரியமான கிராமத்து பணியாரங்கள் பரிமாறப்பட

வரிசைக் கட்டி நின்றன.தலை வாரி,சலவைத் உடை அணிந்து சாமி கும்பிட்டு

வந்த விஜயனை,தாயும்,தமக்கையும், பாசமும்,பரிவுமாக இல்லை முன்

அமர்த்தினர்.இலை முன் சம்மணமிட்டு அமர விஜயன் மிகவும் சிரமப் பட்டான்.

அதைப் பார்த்த அவனது தமக்கை," அடி ஆத்தி!என்னம்மா இது? தம்பி

சம்மணமிட்டு உட்கார இப்படி சிரமப்படுது?. என்றுக் கேட்டு நிஜமாகவே

ஆச்சரியப் பட்டார்.விஜயன் நெளிவதைப் பார்த்ததும்,அவன் தாய்,"எல்லாம்

பழக்கந்தானே தாயி! அவனோட இடத்திலே கையை மேலே தூக்கி வச்சே

சாப்பிட்டிருப்பான் போல;சரி அதை விடு.நீயும் தம்பி கூட ஒரு இலையை

போட்டு உட்காரு!நான் பரிமாறேன் ".


   
    அந்தத் தாய் தன் குழந்தைகள்  இருவரும் பேரன்,பேத்திகளை பார்த்த

மூத்தோர்கள் என்ற எதார்த்தத்தை ஒரு மூலையில் நிறுத்தினார். அவர்கள்

இருவரையும் பாலகர்களாக்கி,பார்த்துப் பார்த்து பரிமாறினார்.அவர்கள்

இருவரும் ஒருவரை வாஞ்சையுடன், உபசரித்துக்  கொண்டே உண்ணும்

 அழகைப் பார்த்துப் பார்த்து பரவசமானார்.


   
   உண்டு முடித்து முற்றத்தில்  வந்து அமர்ந்தார்கள் மூவரும்.கதை பேசத்

தொடங்கினார்கள்.கதை,கடந்தக் கதை,வந்தக் கதை,போனக் கதை,இருக்கும்

கதை,இருக்காதக்  கதை இன்னும் என்ன எல்லாமோ கதைகள் எல்லாம்

பேசப் பேச கதை தொடர் கதையாகிக் கொண்டிருந்தது. கதைக்கு

இடையிடையே விஜயனின் கொட்டாவிக் கதையும் தொடர ஆரம்பித்தது.

அவனது தாய் அவனை அங்கு இருந்த பெரிய ஊஞ்சலில் படுக்க செய்தார்.

அவனது தமக்கை மெது மெதுவென இருக்கும் ஒரு தலையணையை

எடுத்து வந்து வாஞ்சையுடன் விஜயனின் தலைத் தூக்கி அவன் தலைக்கு

ஏதுவாக வைத்தார்.வெளியில் வேப்ப மரத்து இதமானத் தென்றல்,விஜயனை

அவனது கடந்த கால நினைவுகளுக்கு இட்டுச் சென்றது.போதாக் குறைக்கு

விஜயனின் தாயார்,அவனது தலைமாட்டில் அமர்ந்தபடி,தனது இரு கைகளால்

 விஜயனின் கன்னங்களை வருடியபடி தெம்மாங்கு பாட ஆரம்பித்தார்.

அவனது தமக்கை தாயின் அருகில் அமர்ந்து,ஊஞ்சலை நிதானமாக அசைய

விட்டார். ஒரு பனையோலை விசிறிக் கொண்டு தம்பிக்கு   இதமாக விசிறிக்

கொண்டிருந்தார்.தன் தாயின் பாடலின் இனிமையில் கரைந்த விஜயன்,

தன்னை மறந்து, நித்திரா தேவியின் ராஜ்யத்தின் தற்காலிக பிரஜையாக

மாறிப் போனான்.



    அந்த நேரம்  விஜயனின் தாய் மண்ணில் காலை பதினோரு மணி இருக்கும்.

ஞாயிற்றுக் கிழமை.அவனது ஆழ்ந்த உறக்கத்தை,ஆழ்ந்து  ரசித்தபடியே

அவனது தாயாரும்,தமக்கையும் மற்ற வேலைகளை  கவனிக்க

எழுந்தார்கள்.எழுந்ததும் அவர்களை மறுபடியும் அந்த கலக்கம் பற்றிக்

கொண்டது.அந்தக் கலக்கம் வரும் பாதையை அதாவது வாசற்படியை

ஒரு முறை ஆயாசத்துடன் பார்த்து விட்டு உள்ளறைக்குச் சென்றார்கள்.

அந்த கலக்கம் மெதுவாக பிரளயமாக உருவெடுத்துக் கொண்டு அதன்

இடத்தில், சினத்தின் உச்சியில் அங்கும்,இங்கும் உலாவிக் கொண்டிருந்தது.





                                                                                               தொடரும்..............  

       



             

No comments:

Post a Comment