Wednesday, August 13, 2014

6.Thai Mann.

   தாய் நாட்டிற்கு நிரந்தரமாக திரும்ப விஜயனும்,மீனாவும் முடிவெடுத்ததை

 அவர்களது குழந்தைகளால் ஒத்துக் கொள்ளவே முடியவில்லை.அதுவும்

தங்களை பேசி முடிவெடுக்காமல்,தன்னிச்சையாக தம் பெற்றோர் முடிவு

எடுத்ததை அவர்களால் நம்பவே முடியவில்லை.இருவருக்கும் கோபமோ

கோபம்.


   மீனாதான் அவர்களை மிகவும் சிரமப்பட்டு சாந்தப் படுத்தினாள்.முதலில்

ஸ்ரீதருக்குதான் தெரியபடுத்தினாள்.அவனது ஆர்ப்பாட்டத்தை பார்த்து,"ஸ்ரீ!

எதுவானாலும் முதலில் நானும்,அப்பாவும் பேசி ஒரு முடிவெடுத்து,அதற்கு

பின்தானே உங்களிருவரிடமும் கலந்து ஆலோசிக்க முடியும்.உங்களை

ஆலோசிக்காமல் நாங்கள் எப்படி ஒரு இறுதி முடிவு எடுக்க முடியும்?"


   ஸ்ரீதர் ஒன்றுமே பேசவில்லை.அவனுக்கு என்ன பேசுவதென்றே

தெரியவில்லை.அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.மீனா

தொடர்ந்தாள்." அப்பா,பணியில் இருந்து ஓய்வுப் பெற்ற பிறகு நம் பாட்டியுடன்

இருக்க விருப்பப் படுகிறார்.ஆனால் அவர் எந்த விதத்திலும் என்னை தன்  கூட

வரச் சொல்லி கட்டாயப் படுத்தவும் இல்லை.ஆனால் எனக்குதான்

 அவரை தனியாக அனுப்ப விருப்பம் இல்லை.அதனால்தான் நானும் அவர்

கூட செல்ல முடிவு செய்தேன்".


   அப்பொழுதும் ஸ்ரீதர் ஒன்றும் பேசவில்லை.மீனாவே தொடர்ந்தாள்.

"அக்காவையும்,மாமாவையும் அழைத்து பேசலாம்.பிறகு எல்லோரும்

சேர்ந்து ஒரு முடிவெடுக்கலாம் ".ஆனால் ஸ்ரீதர் கூட ஒத்துக் கொண்டாலும்

ஒத்துக் கொள்வான் போல் தோன்றியது.ஷைலஜா ஒத்துக் கொள்ள

மறுத்தே விட்டாள்.அவளுக்கு ஒரு விதமான பயம் தோன்றியிருக்க

வேண்டும்.இதுவரை  பெற்றோரின் அருகாமை அவளுக்கு ஒரு

தெம்பையும்,அமைதியையும்,சந்தோஷத்தையும் தந்துக் கொண்டு

இருந்தது.இப்போது அவர்களது திடீர் முடிவு அவளை கலவரப் படுத்தி

இருக்க வேண்டும்.மிரண்டுப் போனாள்.அவளது நிலையை பார்த்து

விஜயனுக்கே மிகவும் சங்கடமாகி விட்டது.


   விஜயன்,தன் அன்பு மகளின் அருகில் வந்து அமர்ந்தான்.அவளை தன்

மீது ஆதரவாக சாய்த்து ஆசுவாசப் படுத்தினான்." ஷைலுமா! ரிலாக்ஸ்!

நாம் எல்லோரும் சேர்ந்து முடிவு எடுக்க இன்னும் மூன்று  மாதங்கள்

இருக்கின்றன்.அப்பொழுதும் உங்களால் ஒத்துக் கொள்ள சிரமமாய்

இருக்குமென்றால் ஒன்றும் பிரச்சனை  இல்லை.அம்மா உங்ககூட

இங்கேயே இருக்கட்டும்.இப்போதுதான் அம்மாவிற்கு பதவி உயர்வு வேற

வந்திருக்கு.அதனால்  நான் மட்டும் பாட்டியை பார்க்க கிளம்பறேன்.எனக்கு

பாட்டியை எப்படா  பார்க்கப் போறோம்னு இருக்கு.என்ன அப்பா

கிளம்பட்டுமா?"


   ஷைலஜாவிற்கு அப்பாவை பார்க்க பாவமாக இருந்தது.இத்தனை காலம்

பிரிந்திருக்கும் தன் தாயைப் பார்க்கும் ஏக்கம் ஏகத்திற்கு அவர் முகம்

முழுதும் வியாபித்திருந்தது.அவள் ஒரு முடிவுடன்,"சரி அப்பா ! நீங்கள்

முதலில் கிளம்பி செல்லுங்கள்.பிறகு ஒரு முடிவெடுப்போம்". என்றாள்.

ஆனால் மீனாதான்  இருதலைக் கொள்ளி எறும்பானாள்.


       அதன் பிறகு,மூன்று மாதங்கள்  முடிந்து பணி  ஓய்வுப்  பெற்ற விஜயன்,

ஒருவாறு தன் பணியிடம் நிர்வாகத்தையும், தனது இல்லத்து

அங்கத்தினர்களையும் சமாதானபடுத்தி விட்டு,ஒரு பக்கம் கனத்த

இதயத்துடனும், மறுப் பக்கம் தான் காணப்  போகும் தன்  தாயின்

சந்தோஷமான நினைவுகளுடனும் தன் தாய் நாட்டிற்கு விமானம்

 ஏறினான்.         


        
Part 7
                                                                                                         தொடரும்............

No comments:

Post a Comment