Wednesday, August 6, 2014

3.Thai mann.

    விஜயனுக்குப் பெண் பார்க்க முடிவு செய்தபோது ஒரு குடும்ப நண்பர்

மூலம் மீனாவின் குடும்பம் அறிமுகமானது.விஜயனுக்கு பார்த்த முதல்

பெண் மீனா.முடிவானப் பெண்ணும் மீனாதான்.சாமிப் படங்களுக்கு

முன்னால் குத்து விளக்கு  நிதானமாக ஒளிரும்போது ஒரு அழகான

அமைதிப் பெறுவோமே,அது மாதிரி அழகுடன் அழைத்து வரப்பட்டாள்.

 
     மீனாவின் மாநிறத்திற்கு  அந்த இயற்கையான அலங்காரங்களும் ,சற்றுப்

பெரிய கண்களுடன்  இழைந்த மையும்,அளவான கூந்தலில் பெருமையுடன்

குடியிருந்த அளவான மலர்களும்,அதன் அளவான வாசனையும்,

எல்லாவற்றிற்கும் மேலாக,மீனாவின் இயற்கையான பதவிசும்,

விஜயனுக்கு மிகவும் வித்தியாசமாய் இருந்தன.அது மட்டுமின்றி தன்னை

ஒத்துக்கொண்டாலும்,நிராகரித்தாலும் அதனால் பாதிக்கப் படாதவள் போல்

தோன்றினாள்.


   அவன் பணிப் புரியும் அயல் நாட்டில் பளீர் பளீர் எனப் பெண்களை பார்த்து

விட்டு இந்தக் கண்ணை உறுத்தாத மென்மையான அழகு விஜயனை மிகவும்

வசீகரித்தது.தன்  பெற்றோரிடம் தன்  சம்மதத்தை தெரிவித்தான்.ஆனால்

மீனாவிற்கு விஜயனை பார்த்ததும் என்னவோ நெடுநாள் பழகிய நல்லத்

தோழனாய் தெரிந்தான்.திருமணத்திற்குப் பிறகு இந்த உணர்வைப் பற்றி

 பலமுறை   விஜயனிடம் சிலாகித்திருக்கிறாள்.


   திருமணம் இனிதே முடிந்தது.உற்றமும்,நட்பும் சூழ்ந்து மனம் நிறைந்து

வாழ்த்த, இறைவனின்உதவியையும்,வழிக் காட்டலையும் வேண்டிப்

பெற்றுக் கொண்டு,விஜயனும்,மீனாவும் தங்கள் இல்லறப் பயணத்தை

இனிதே தொடங்கினர்.


    மனைவியை மதிக்கத் தெரிந்த கணவன் விஜயன்.எந்த மனிதனுக்கு தன்

பெற்றோரை மனமார மதிக்கத் தெரிந்திருக்கிறதோ,அந்த மனிதனுக்கு தன்

மனம் நிறைந்த மனைவியையும் மதிக்கும் பண்பும்  தானாகவே தளிர்க்கும்.

மீனாவின் இயல்புக்கு ஏற்றாற்போல்,அவளது விருப்பப்படி மருத்துவமனை

நிர்வகிக்கும் படிப்பை படிக்க வைத்து,தனக்கு தெரிந்த வேறொரு மருத்துவ

மனையில், பகுதி நேரப் பணி கிட்ட ஆவன செய்தான் விஜயன்.


   மீனாவிற்கு மிக திருப்தியாக அமைந்தப் பணி.அவளது அகம்,புறம்

இரண்டையும்,இலகுவாக்கி கொண்டு செல்வதில் விஜயன் கண்ணும்,

கருத்துமாயிருந்தான்.இறைவன் அருளால் அருமையான இரண்டு

குழந்தைகள்.இப்பொழுது பெரியவளுக்கு அதே அயல் நாட்டில் வரன்

அமைந்தது.இரண்டு வயதில் ஒருக் குழந்தை இருக்கிறது.தம்பதிகள்

தத்தம் பணியில் அருமையாக ஜொலிக்கிறார்கள்.இருவரும் தத்தம்

பெற்றோருடனும் தத்தம் மாமியார்,மாமனாருடனும் கணிவாகத்தான்

 இருக்கிறார்கள்.என்றாலும் பெண்ணை  இன்னொரு இல்லத்திற்கு

இனிதாக அனுப்பியப் பிறகு சிறிது ஆரோக்கியமான இடைவெளி

இருப்பது இருக் குடும்பத்தார்க்கும் நல்லது என்று மீனவுக்குப் பட்டது.

அதன்படி நடந்து வருகிறாள்.

   மகனுக்கு இப்போது பெண் பார்த்தாலும் நல்லதுதான்;இல்லை ஒரு இரண்டு

வருடம்   அவனது பணியின் பயிற்சிக் காலம் முடிந்து பார்த்தாலும் சரிதான்.

எல்லாமே சரிதான்.ஆனால் சில நாட்களாக வாடிக் கொண்டிருக்கும்

விஜயனின் முகம்தான் சரியாகவே இல்லை.மிகவும் விசனப் பட்டாள்

மீனா.தன்னை கண்ணில் வைத்து இமை மூடி காக்கும் தன் அன்புக் கணவன்

இனியும் தானே தன்  மனதை திறப்பான் என்றிருப்பது பெரும் பிசகு என்றுத்

தோன்றியது.இன்றிரவு அவன் மனதின் சுமை இறக்க உதவி செய்வது என்று

உறுதிக் கொண்டாள்.மேலும் இவன் இப்படி இருக்கும்போது தனது

மகிழ்ச்சியான செய்தியை எப்படி பகிர்ந்துக் கொள்வது என விழித்தாள்

மீனா.



                                                                                                 தொடரும்........

      
Part 4
 

 
  

No comments:

Post a Comment