Monday, October 9, 2017

29,Thai Mann.

       செல்லாம்மா என்றும் போல அன்றும் கொட்டடியில் பசுக்களுக்கான

பணிகளில் ஆத்மார்த்தமாக ஈடுப்பட்டிருந்தாள்.அப்பொழுது, அவளது சின்ன

அண்ணனும்,அண்ணியும் சுற்றும் முற்றும் பார்த்தபடி தயங்கி,தயங்கி

செல்லம்மாவிடம் வந்தார்கள்.அவர்களது பாவனைகள் யாவும் ரசிக்கத்

தக்கதாக  செல்லம்மாவுக்கு தோன்றவில்லை.அவர்களை ஏறிட்டுப் பார்த்து

விட்டுத் தன வேலையத் தொடர்ந்தாள்.


      முதலில் அண்ணிதான் பேச்சை மிகவும் தயக்கத்துடன் ஆரம்பித்தாள்.

" செல்லம்மா!உங்கிட்டே ஒண்ணு கேட்கலாம்னு வந்திருக்கோம்;உனக்கு

சரின்னு பட்டது அப்படின்னா,வீட்டிலே பெரியவங்க கிட்ட பேசி எங்களுக்கு

ஒரு நல்ல முடிவா சொல்லு" என்றவள் ஒரு பயம் கலந்த தயக்கத்துடன்

செல்லாம்மாவை ஏறிட்டு பார்த்தாள்.செல்லம்மா அண்ணியை உற்றுப்

பார்த்ததும் சின்ன அண்ணிக்கு உதறல் எடுப்பது வெளிப்படையாகவே

தெரிந்தது.செல்லம்மாவிற்கு அவர்களது இந்த அணுகுமுறை சரியாகவே

படவில்லை.அவளுள் ஒரு எச்சரிக்கை மணி ஒலித்திருக்க வேண்டும்.

நன்றாக திரும்பி தன் சின்ன அண்ணியை உற்றுப் பார்த்தாள் செல்லம்மா.

அவள் நின்ற தோரணையே வந்த இருவரின் வயிற்றிலும் புளியைக்

கரைத்தது.ஒரு நிமிடம் எதுவும் பேசாமல் திரும்பி விடலாமா என்று அவர்கள்

யோசிப்பது நன்றாகவே புரிந்தது.


      " சின்ன அண்ணனும்,அண்ணியும் சேர்ந்து வந்திருக்கிறதை பார்த்தால்

வந்த விஷயம் பெரிய விஷயம் போலத்தான் இருக்கிறது.ம்ம்... விஷயம்

என்னன்னு சொல்லுங்க! "செல்லம்மா ஆரம்பித்து வைத்தாள்.சின்ன

அண்ணன் எதுவும் பேசவில்லை.ஆனால் அண்ணி சிறிது தைரியம்

பெற்றவளாய் சற்று முன்வந்து செல்லம்மாவின் கைப்பற்றி," அதில்லை

செல்லம்மா! அண்ணன் இனியும்,அப்பா கீழேயே எல்லா வேலையையும்

பார்த்துட்டிருந்தா அவருக்கும் எப்போது பொறுப்பு வரும் சொல்லு?அதான்

எங்களுக்குனு கொஞ்சம் நிலபுலன்களையும்,அந்த தோட்டத்து வீட்டையும்

வீட்ல பெரியவங்ககிட்டே பேசி வாங்கி ..."அண்ணி முடிக்கவில்லை

செல்லம்மா இடைமறித்து " கொடுத்துட்டா என் அண்ணன் உங்களுக்கு

கீழே பொறுப்பா தினம்,தினம் சினிமா பாக்குற வேலை செய்வாரு

அப்படித்தானே ! என்ன இது ?அந்த சினிமா பைத்தியம் குள்ள மணியோட

யோசனையாக்கும் ? ".சீறினாள் செல்லம்மா.அந்த சீற்றம்  வந்த இருவரையும்

வாயடைக்க வைத்தது.மேலே எதுவும் பேசாமல் செல்லம்மாவை விக்கித்து

பார்த்தவாறு நின்று கொண்டிருந்தார்கள்.


     செல்லம்மா வேறொன்றும் சொல்லவில்லை;தன் அண்ணிக்கு பின்னால்

நின்று கொண்டிருந்த தன் அண்ணனின் கையைப் பற்றி சற்று முன்னால்

இழுத்து அவன் முகம் பார்த்து  மிகத் தெளிவாக பேசினாள்." ஏண்ணே! ஒரு

பொண்ணு புகுந்த வீட்ல ஒரு நல்ல பெண்டாட்டியா எல்லா விதத்திலும்

புருஷனுக்கு பின்பலமா  நிக்கணும்;  முன்னாலே புருஷன் நின்னு கம்பீரமா

வேலை பாக்கணும்: பிறந்த வீட்ல பொண்ணு கம்பீரமா வலம் வரணும்;

அதற்கு  அவள் புருஷன் அவளுக்கு எல்லா விதத்திலும்  பின்பலமா

நிக்கணும்ணு நீ அண்ணிக்கு புரிய வைக்கலேயா? ".அண்ணன் எதுவும்

பேசவில்லை;அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். " அது சரி! உனக்கு அது

புரிஞ்சிருந்தாதானே நீ அண்ணிக்கு புரிய வைச்சிருப்பே! அதை நம்ப

அப்பா,அம்மாவையும்,நம்ப பெரிய அண்ணன்அண்ணியையும் பார்த்து

கத்துக்கிட்டிருக்க வேண்டாமா? எல்லார்கிட்டயும்இருக்குற

மாதிரி அறிவு,அறிவுன்னு  ஒண்ணு உங்கிட்டேயும் இருக்குணும்-

-தானே! அது கூட உனக்கு சரியான சகவாசம் உண்டா? இருந்திருந்தா அது

தப்பே பண்ணாதே;உன்னை சரியான வழியிலே இல்ல கூட்டிட்டு

போயிருக்கும்?".


          அந்த சின்ன அண்ணனுக்கு தன் எதிரில் நிற்கும் தங்கை,

தங்கையாக தெரியவில்லை.தாயாகத் தெரிந்தாள்.அவளது சாடலின் உச்சம்

அவளுக்கு தன்மேல் உள்ள அக்கறையின் உச்சிப்படி என்பது தெரிந்தது.இது

வரை செயலற்று இருந்த அவனது அறிவின் ஊற்றுக்கண் திறந்து

வெள்ளமாய்  பெருக்கெடுத்து ஓடியது.அது அவனது கண்களில் நிதர்சனமாக

தெரிந்தது.


         அதன் பிறகு அவன் வேறொன்றும் பேசவில்லை,திரும்பி மனைவியை

பார்த்தான்.திரும்பி தங்கையை பார்த்தான்.தன் அன்புத் தங்கையின்  முகத்தை

தன்  இரு கைகளால் ஒரு மலரை தாங்குவது போல தாங்கி கண்மூடி  உச்சி-

-முகர்ந்தான்.தன் மனைவி பின் தொடர அவ்விடம் விட்டு அகன்றான்.




                                                                                                   
                                                                                                         தொடரும்...........




Sunday, October 8, 2017

28.Thai Mann.

          வீடு வந்து சேர்ந்த பின்னும்,விஜயனால் தன்னை ஆசுவாசப்படுத்திக்

கொள்ள முடியவில்லை.காந்தி சித்தப்பா, செல்லாம்மாவை பற்றி

சொன்னதை எல்லாம் பிரமிப்போடு அசை போட்டுக் கொண்டிருந்தான்.அவர்

சொன்னமுதல் சம்பவம்:


           மாலை நேரம்.செல்லம்மா தன் பாட்டி வீட்டுக்கு கிளம்புவதற்கு

முன்னால் வீட்டிற்கு பின்புறம் அமைந்திருக்கும் கொட்டடியில் மாடுகளுக்கு

வைக்கோல் போட்டு தண்ணிக் காட்டி விட்டு எப்பொழுதும் போன்றே

அவைகளுடன் விடைபெறும்  பாவனையில்அவைகளை முதுகிலும்,கழுத்துப்

பகுதியிலும் ,முகத்திலும் வாஞ்சையாக தடவிக் கொண்டு பேசலானாள்.


         எல்லோருக்கும் மூத்ததாக இருக்கும் பசுவிடம், "சரி லட்சுமி ! நான்

ஆத்தாவை  பார்க்க கிளம்புறேன்.எல்லோருக்கு வயிறும் ,மனசும்

நிரம்பியிருக்கும்னு நம்பறேன்". மற்ற பசுக்களைக் காட்டி" எல்லோரையும்

பத்திரமா பார்த்துக்கோ என்ன! " என்றாள்.அந்த லட்சுமி பசுவும் புரிந்துக்

கொண்டதை  போல நன்றாகவே தலையாட்டியது.ஏனென்றால்,அதற்கும்,

மற்ற பசுக்களுக்கும் செல்லம்மா என்றால் உயிர்;உயிர் என்றால் அது

செல்லம்மா.


       செல்லம்மாவின் அம்மாகூட செல்லம்மாவை செல்லமாக திட்டிக்

கொண்டு இருந்தாள் ."ஏன் செல்லம்மா! நீ எங்களை யாரையும் கொட்டடி

பக்கமே விடாமெ நீயே எல்லாவற்றையும் பாத்துக்கிட்டா சரிப்படுமா!

நாளைக்கு நீ கல்யாணமாகி போன பிறகு,உனக்காக இவை ஏங்கி படுத்துடும்

செல்லம்மா!எனக்கு ரொம்பவே பயமா இருக்கு". "நீ ஏம்மா பயப்படறே?நான்

இதோ பக்கத்தில் இருக்கும் ஆத்தா  ஊரிலேதானே வாழ்க்கைப்படப்

போறேன்;நானே தினமும் வந்து கவனிச்சுக்கிறேன்.நீ எதற்கும் கவலைப்

படாமே வேலையை பாரு ".இது செல்லாம்மாவின் பதில்.மிகவும்

தெளிவானஉறுதியான பதில்.அம்மா அசந்து போவாள்.


      செல்லம்மாவின் பதிலில் தெரியும் தெளிவையும்,உறுதியையும் பார்த்து,

அம்மா ஆரம்பத்த்தில் சிறிது குழப்பத்துடன் கேட்டார் , "ஏன் செல்லம்மா!

ஆத்தா  ஊரிலே,உனக்கு யாரையாவது மனசுக்கு பிடிச்சிருக்கா? உன் கல்யாண

விஷயத்திலே இவ்வளவு உறுதியா இருக்கே!"."என்னம்மா பேசறே! வீட்டிலே

இத்தனை பேரு இருந்துட்டு எனக்கு பிடிச்சவனை நான்தான் பார்க்கணு-

-மாக்கும்! நல்ல கதையா இருக்கே! ". " அதில்லே  செல்லம்மா!ஆத்தா

ஊரிலேதான் வாழ்க்கை படுவேன் இவ்வளவு உறுதியா சொல்றியே!அதான்

கேட்டேன் ". அம்மா கேட்டு வாய் மூடவில்லை.காட்டமாக பதில் வந்தது

செல்லாம்மாவிடமிருந்து.



      " உன் உடன் பிறப்புக்கு தன் அம்மான்னு தோணி  இருந்திருந்தா  நான் ஏன்

அந்த ஊரிலேதான் வாழ்க்கை படணும்னு  இப்படி கிடந்து அல்லாடறேன்.

உன் உடன் பிறப்புக்கு அப்படியே வானத்திலிருந்து குதிச்சிட்டாத நினைப்பு.

அப்படியே குதிச்சுட்டு இருக்கும்போதே வளர்ந்து, படிச்சு முடிச்சு,  வேறே

மண்ணிலே வேலைக்கு போயிடுச்சு போல! பெத்த தாயை, தாய்மண்ணை ,

சொந்தபந்தத்தை, தன கடமையை  எல்லாத்தையும் குழி தோண்டி

புதைச்சுட்டு  பறந்து போயாச்சு. நன்றி கெட்ட ஜென்மம்! ".செல்லம்மாவின்

காட்டமான பதிலில் அவளது அம்மா உறைந்து போனாள்.அது மட்டும்

அல்ல.அந்த பதிலில்,  செல்லம்மா  தன் பாட்டியின் மேல் கொண்டிருக்கும்

நிதர்சனமான அன்பின்  ஆழமும், அந்த ஆழமான அன்பின்  வெளிப்பாடான

 ஒரு நித்ய பூரண கரிசனமும்  தெளிந்த நீரோடையாய் தெளிவாகி போனது

அவள் அம்மாவுக்கு. ஒரு ஆழ்ந்த பெருமூச்சுடன் அவ்விடம் விட்டு

 நகர்ந்தாள்.



         முதல் சம்பவத்தை அசை போடும்போதே விஜயன் அயர்ந்து போனான்.

எல்லாமே குடும்பத்திலிருந்துதான் அதாவது வீட்டிலிருந்துதான் ஆரம்பம்

என்பது எவ்வளவு எதார்த்தமான,நிதர்சனமான உண்மை.அதில் முதல்

ஆரம்பமாக இருக்க வேண்டியது உறவுகளின் உணர்தல்தான் என்று

விஜயனுக்குத் தோன்றியது.உறவுகளை உணரும்போதுதான் அந்த

உறவுகளின் தொடர்புகள் நைந்து போக விடாமல் பேண முயற்சிப்போம்.

அதன் காரணமாக நம் அருமையான உறவுகளின் தொடர்புகளை அழகான 

தொடர்கதையாக்க  விடாமல்  முளைக்கும் இடையூறுகளை  லாவகமாக

களையும் ஒரு நிதானமும், நேர்த்தியும்  நம்முள்  ஒன்றாக கைகோர்த்து,நம் 

உறவுகளை நிலைத்து செழிக்கச் செய்யும்.செல்லம்மாவிடம் அந்த 

உறவுகளின் உணர்தல் அவளுள் பொக்கிஷமாக நிரம்பியிருப்பது விஜயனுக்கு

தெள்ளத் தெளிவாக புரிந்து போனது.அதன் மூலம் உறவுகளை

மேம்படுத்துதலின் உன்னதத்தை ஆழமாக புரிந்து கொண்டான்.


       
       அடுத்த சம்பவத்தை அசை போடும் முன் தன்னை திடப் படுத்திக்

கொண்டான் விஜயன்.





                                                                                                   தொடரும்..............



         

Thursday, October 5, 2017

27.Thai Mann.

     வானில் நிலவும்,காந்தி சித்தப்பா சொன்னதை ஆமோதிப்பது போல மிக

வசீகரமான புன்னகையை சிந்தியபடி தன் பயணத்தை தொடர்ந்து கொண்டு

இருந்தது.வாய்க்கால் வந்து சேர்ந்தனர் இருவரும்."தம்பி! முன்னெல்லாம் "

இப்படி முறை வச்சு வாய்க்கால் திருப்பி விடற வேலை எல்லாம் இல்லை.

அம்புட்டு தண்ணி இருக்கும்.அதுவுமில்லாமே,இப்ப நடக்கற விவசாயத்தை

விட பல மடங்கு விவசாயம் நடந்தது.நடக்க ஆரம்பிச்ச குழந்தையிலிருந்து

படுக்கையாகி விட்ட பெரியவங்களை தவிர,ஊரிலே எல்லோருக்கும்,

விவசாய வேலை பின்னி எடுத்துரும்.


     விதை விதைக்கிறதிலிருந்து,

கதிர்களை,களத்துமேட்டுக்கு சேர்ப்பது வரை யாருக்கும்,சாப்பிடவும்,

குளிக்கவும்,இயற்கை உபாதைகளுக்கு ஒதுங்கவும் கூட நேரமிருக்காது.

ஊரில் உள்ள ஐயாக்களும்,ஆத்தாக்க்களும்தான்,எல்லா வயதினரையும்

மேற்படி விஷயங்களுக்கு சமயம் பார்த்து விரட்டி,விரட்டி அனுப்பி

வைப்பாங்க.எல்லா வயசுக்காரங்களும்,எல்லா வயசுக்காரங்களையும்

கலாய்க்கிறதென்ன! காய்ச்சி எடுப்பதென்ன!ஒருவருக்கு ஒருவர் காட்டும்

அழகான அக்கறை என்ன! எல்லாவற்றிலும்எல்லோருக்கும் பாங்காய் பங்கு

வைக்கும் பாந்தம் என்ன!அழகாய் எங்கே பார்த்தாலும் பச்சை பசேல்னு

கண்ணுக்கு குளிர்ச்சி.முகத்திற்கு மலர்ச்சி.ஓங்கி உயர்ந்த மரங்கள்,


பச்சை பயிர்களோட பிம்பங்கள் எல்லாம்,அங்கங்கே ஓடிட்டிருக்கிற

வாய்கால்லெ,தேங்கி இருக்கிற குளம் குட்டையிலே,ஏன்  கிணத்திலே கூட

தெரிகிற அழகிருக்கே ,அட!அட!அதையெல்லாம் காண கண் கோடி

வேணுமப்பா.எனக்கு நிறைய நேரங்களிலே இது சம்பந்தமா நிறைய

வருத்தம்.இந்த தலைமுறை இந்த சந்தோஷங்களை எல்லாம் இழந்து

நிக்குதே அப்படின்னு ".


    விஜயன் எதுவும் பேசாமல்,பேச தோன்றாமல்,பேச இயலாமல்

அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.அவனால் அப்படித்தான் இருக்க

முடிந்தது.காந்தி சித்தப்பாவும்,தன் பேச்சு விஜயனை ஸ்தம்பிக்க வைத்து

விட்டதை போலத் தோன்றியதால்,விஜயனை சிறிது ஆசுவாசப் படுத்த

விரும்பினார்.அவனை பார்த்து வாஞ்சையுடன் புன்முறுவல் பூத்தார்.

அவரது  அந்த புன்முறுவல் அந்த நிலவொளியில்,அவரது முகத்தையும்,

அந்த சூழநிலையையும் இன்னும் பிரகாசமாக்கியது.விஜயன்,தன் தந்தையின்

அருகாமையை உணர்ந்தான்.


  " தம்பி! அதிக நேரமாயிட்டது ! தம்பிக்கும் பசிக்கும் போல;மீதியை

பிறகு பேசிக்கலாம்".என்றவாறு அவர் வந்த வேலையை லாவகமாக முடித்து

விட்டு கிளம்ப ஆயுத்தமானார்.பேசிக்கொண்டே,காந்தி சித்தப்பா ந்த  எந்த

இடையூறும் இல்லாமல்,தன் வேலையை லாகவமாக முடித்த பாங்கைக்

கண்டு விஜயன் ஆச்சரியப் பட்டான்.மனதில் சாந்தி இருந்தால் மட்டுமே இந்த

மாதிரியான லாவகம் சாத்தியம் என்று தோன்றியது.விஜயனுக்கு தானும்,

தன் குடும்பமும் இழந்த ஆனந்தங்கள் ஏராளம்,ஏராளம் என்று தோன்றியது.





                                                                                                       தொடரும்.........

                                                                                                             


Monday, October 2, 2017

26.Thai Mann.

     விஜயன் காந்தி சித்தப்பாவை உற்றுப் பார்த்தான்.இந்த காந்தி சித்தப்பாவே

செல்லாம்மாவை தன்  மனதில் தாங்கி பேசுகின்றார் என்றால்,அதில் ஒரு

ஆத்மீகமான ஒரு அர்த்தம் இருக்கும்.அவர் பேசுவதை உற்று கவனித்தபடி

அவருடனும்,பால் பொழியும் நிலாவுடனும்,நடை பயின்றான்.என்னவோ

தெரியவில்லை:குறிப்பிட்ட சில மனிதர்களுடன் இருக்க நேரிடும்போது

அவர்களது இருப்பு, தென்றலின் இதமாய்  மனதை வருடும்.மனதில் ஒரு

இனம் புரியாத ஒரு அமைதி,ஒரு சந்தோஷம் நிலவி நம்மை சாந்தப்-

-படுத்தும்.விஜயன் அதை பூரணமாக உணர்ந்தான்.


       விஜயன் தன்னை உற்றுப் பார்ப்பதை கவனித்த காந்தி சித்தப்பா மெல்ல

சிரித்தபடி மேலே நடந்தார்.அவரை தொடர்ந்த விஜயனிடம் திரும்பி "தம்பி!

எனக்கு பெரிய வருத்தம்தான்:ஏன்னா உன் மருமகளைப் பற்றி உனக்கே

தெரியவில்லையே  என்ற வேதனை.சரி அதை விடு.இப்பவாவது அந்தக்

குழந்தையை பற்றி தெரிந்துக் கொள்ள கடவுள் உனக்கு ஒரு வாய்ப்பை

 உருவாக்கித் தந்தாரே! அது பெரிய விஷயம்ந்தான்.நீ கண்டிப்பாக இதற்கு

ஒரு நாள் அந்த கடவுளுக்கு நன்றி சொல்வாய் " என்று ஒரு பெரிய

பீடிகையுடன் தொடர்ந்தார்.,அவர் சொன்னதைக் கேட்ட விஜயன்

அவரை வியப்புடன் மறுபடியும் உற்று நோக்கினான். அவரது முகபாவனை,

அவரது கருத்தை மிக பலமாக ஆமோதிப்பதை போல தெரிந்தது.



     உடல் மொழி சத்தியத்தைத்தான் செப்பும்.விஜயனுக்கு அன்று அந்த

உண்மை மிகத் தெளிவாகப் புரிந்தது.அவர் சொல்லப் போவதை உன்னிப்பாக

கவனிக்க தயாரானான்.அவனுடன் அந்த அழகு நிலாவும் தயாரானது.அதற்கு

இது மிக நன்றாக தெரிந்த விஷயமென்றாலும்,நமக்குத் தெரிந்த,நமக்கு

இதம்தரும்  நல்ல விஷயங்களை நமக்குத் தெரிந்த மற்றவர்கள் திரும்ப,

திரும்ப புதிதாக அறிமுகமானவர்களுக்கு  சேர்க்கும் தருணங்களின் போது

நாம் உடனிருப்பது ஒரு இனிமையான அனுபவம்.அந்த அனுபவத்தை

அனுபவிக்கத்தான் அந்த பால் நிலாவும் இவர்களை தொடர்ந்தபடி வந்து

கொண்டு இருந்தது.


       
      காந்தி சித்தப்பா தொடர்ந்தார்."தம்பி! நான் சொல்றது உனக்கு புரியுதான்னு

பாரு! இப்போதெல்லாம்  வயதுக்கேற்ற தெளிவுடன் இருப்பவர்களை பார்ப்பது

என்பதே ஒருஅரிதான  விஷயமாக  இருக்கிறது.அப்படி இருக்கும்போது தன்

வயதைதாண்டி தெளிவுடன் இருப்பது என்பது ஒரு கல்மிஷமில்லாத

மனதால்தான் தம்பி !முடிகிற காரியமாக தெரிகிறது.அந்த வகை மனதிற்கு

சொந்தக்காரிதான் நம்ப செல்லம்மா.எல்லோரையும் தன்னுள்  பார்க்கும்

பக்குவமும், எல்லோரிலும் தன்னை பார்க்கும் அந்த பாந்தமும்  உள்ள மனம் 

பெரிய வரம் தம்பி !நம்ப செல்லாம்மாவிற்குஅந்த வகை மனது.  தம்பிக்கு

நான் சொல்வது  புரிகிறதா?" விஜயனை உற்றுப் பார்த்தார் காந்தி

சித்தப்பா.


   
      விஜயனுக்கு புரிந்ததை போலவும் இருந்தது.புரியாததை போலவும்

இருந்தது.ஆனால் அடுத்தடுத்து செல்லாம்மாவைப் பற்றி காந்தி சித்தப்பா

சொன்ன விவரங்கள்,விஜயனை ஓர் உலுக்கு உலுக்கின.அவர் சொன்னதன்

அர்த்தம் மிகத் தெளிவாக விஜயனுக்கு விளங்கியது.தன்னை ஆசுவாசப் -

-படுத்திக்  கொள்ள மிகவும் திணறினான் விஜயன்.




   
                                                                                                            தொடரும்..........

    

Tuesday, September 26, 2017

25.Thai Mann.

     "  காந்தி சித்தப்பாவின் இயற் பெயரே மறந்து போய்,ஊரில் எல்லோரும்

அவரை காந்தி என்ற பெயருடன்அவரை அழைக்க வேண்டிய முறையையும்

சேர்த்து அழைத்து அவரை பெருமை படுத்துகிறார்கள் என்றால் அவர்தான்

எத்தனை காந்தி விஷயங்களை அவர்களிடம் கொண்டு சேர்த்திருப்பார்.ஊர்

மக்களும் அவர் சொன்னதை எந்த அளவிற்கு உள்வாங்கியிருந்தால் அவர்

மேல் இத்தனை மரியாதை கொண்டிருப்பர்.அப்படி என்றால்,இவர்கள் நம் தேச

பிதாவின் தரிசனத்தை இந்த காந்தி சித்தப்பாவின் மூலம் அனு தினமும்

தரிசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதானே அர்த்தம்.இவர்களது

சாத்வீகமான இந்த வாழ்க்கை முறைக்கு காந்தி சித்தப்பாவும் ஒரு முக்கிய

காரணமாக  இருந்துக் கொண்டிருக்கிறார்.இத்தனைக்கும் அவர் எட்டாவது

வரைதான் படித்திருக்கிறாராம்.ஆனால்,தினமும்  ஊருக்குள்ளே

இருக்கும் அந்த சிறிய நூலகத்திற்கு போய் ஏதாவது ஒன்றை படித்துக்

கொண்டே இருப்பாராம்.அவரிடம் விஷய ஞானம் நிறைய இருக்கும்

போல." விஜயனின் யோசனை பலமாக இருந்தது.


     " என்ன தம்பி! யோசனை பலமா இருக்கும்போல;பேச்சையே காணோம்;

வாய்கால் வரப்பு வரை கூட வர சம்மதந்தானே? ".திடுக்கிட்டு சுய நினைவுக்கு

வந்தான் விஜயன். ''என்ன சித்தப்பா! இப்படி கேட்டுட்டீங்க! இந்த அக்கா

பொண்ணு செல்லம்மா  தன்னோட நடவடிக்கைகளாலே என்னை தினமும்

புறந்தள்ளி ரொம்ப வேதனைபடுத்துறா;நானு தாய் மண்ணையும்,தாய் மண்

சொந்த பந்தங்களையும் புறந்தள்ளி சீமைக்கு போய்ட்டேனாம்.என்னோட

வேலைக்கான சூழ்நிலை அந்த மாதிரி ஆயிடுச்சு; அக்கா பக்கத்து ஊரிலேயே  

இருக்கிற தைரியத்திலே சீமைக்கு போய்ட்டேன்.திரும்பி பார்க்கரதுக்குள்ளே

வேலையிலிருந்து ஓய்வு பெற நாளும் வந்தாச்சு.ஆனாலும்,எனது தவறு

மன்னிக்கவே முடியாத பெரிய தவறுதான்.பிறந்த மண்வாசனையை  மறந்தது.

செல்லம்மாவோட ரௌத்ரமும் மிகச் சரியானதுதான்.ஒரே குழப்பத்தில்

இருக்கேன்.மனசு ரொம்பவே பாரமாகி போச்சு.அதான் மனசை கொஞ்சம்

காத்தாட விடலாம்னு வெளியே வந்தேன்.சாமியே வந்த மாதிரி நீங்க

வந்தீங்க.உங்க அருகாமையும்,இந்த நிலா வெளிச்சமும்,இந்த தென்றல்

காற்றும் எம்மனசு பாரத்தை ரொம்பவே ஏறக்கிடுச்சு சித்தப்பா ". தன்னை

ஆசுவாசப் படுத்திக் கொண்டான் விஜயன்.


     காந்தி சித்தப்பா இலேசாக புன்முறுவலித்தது அந்த நிலா வெளிச்சத்தில்

மிகத் தெளிவாகத் தெரிந்தது.விஜயனுக்கு இளம் முறுவலின் அர்த்தம்

புரியவில்லை. அவரை ஏறிட்டுப் பார்த்தான்.காந்தி சித்தப்பா,"தம்பி! நீங்க

இப்படி யோசித்து பார்த்திருக்கிங்காளா?.ஒரு விஷயத்தை எடுத்துக்கிட்டா,

அந்த விஷயத்தை,நம்ம சந்தர்ப்பத்திற்கு தகுந்த மாதிரி, நமக்கு வேணுமின்னா

நமக்கு சாதகம் தரும் சூழ்நிலையாகவும் மாத்திக்கலாம்.வேணாமின்னா,அந்த

விஷயம் நமக்கு பாதகம் தரும் விஷயம் மாதிரியான சூழ்நிலையாகவும்

மாத்திக்கலாம்.ஆனாலும்,உலக நியதின்னு ஒண்ணு இருக்கு இல்லேப்பா!

அதற்கு பேர்தானப்பா எதார்த்தமும்,கண்ணியமும் ".


      விஜயனுக்கு புரிந்தது மாதிரியும் இருந்தது;புரியாத மாதிரியும் இருந்தது;

ஆனாலும் காந்தி சித்தப்பா இதை பற்றியெல்லாம் கவலைப்படாமல்," உன்

காதில் போட்டு வைக்கிறேன்.அதை மனதிற்குள் பாதுகாப்பாக இறக்கி

வைத்துக்  கொண்டாலும்,உன் சமர்த்து;இல்லை,இந்த காதில் வாங்கி,

இன்னொரு காது வழியே சருகாக்கி காற்றோடு  பறக்க விட்டாலும் மகனே

அது உன் பாடு ".என்பது போல தொடர்ந்து பேசினார்.


     "  இந்த எதார்த்தமும்,அந்த எதார்த்தத்தை கண்ணியமா கையாள்ற மனுஷ -

-தானேப்பா மனுஷன்.எதார்த்தங்கதுதான் நமக்குன்னு வாய்க்கப்பெற்ற

கடமைகள்;அவைகளை " சுமைகள் "என்ற கணக்கில் சேர்க்காமே, "சுகமான

சுமைகள் " அப்படின்னு நம்ம அறிவிலே சேர்க்க நமக்கு தெளிவு பிறக்கணும்,

அதுதானே கண்ணியமங்கறது.அந்த கண்ணியத்தை,ஏதாவது சாக்கு போக்கு

சொல்லி,தவிர்ப்பது,தவிர்க்க நினைப்பது மரியாதயை மதிக்க தெரியாதவன்

நிலை தம்பி!. தம்பியை, செல்லம்மா அந்த நிலையிலேதான் பாக்குது.அதுலே

எந்த தப்பும் இருக்கறதா எனக்குப் படலை".ஏன்னா,நம்ம செல்லம்மா,இந்த

எதார்த்தத்தையும்,கண்ணியத்தையும் ரெண்டு கண்களா பாவிச்சு அவை

காட்டுற வழியிலே போய்கிட்டு இருக்கு தம்பி! ".


      திடுக்கிட்டுப் போனான் விஜயன்.அவன் நிலையை கண்டதும்,காந்தி

சித்தப்பா," தம்பி செல்லம்மாவை பார்க்கும் போதெல்லாம் நான் பலமுறை

நினைப்பதுண்டு காவல் தெய்வம்தான் செல்லம்மாவாக பிறந்து

வந்திருக்கிறதோனு என்றவர்,செல்லமாவின் இன்னொரு பரிமாணத்தை

விஜயன் முன் வைக்க திகைத்துப் போனான் விஜயன்.





                                                                                                             தொடரும்.........  



   




  



     

Sunday, September 24, 2017

24.Thai Mann.

       மேலும் ஒரு வாரம் போனது.விஜயனின் நிலைமை அவனது தாய்க்கு

புரிந்து போனது.பேத்திக்கும்தான்.ஒரு நாள் மாலை பேத்தி வருவதற்கு முன்

தன் மகனிடம் இதைப் பற்றி பேச முடிவெடுத்து,பேச்சைத் தொடங்கினார்

தாய். " ஏன் தம்பி ! இன்னும் எத்தனை நாளைக்குதான் இப்படியே இருந்துற

முடியும்? தம்பியோட வேலையெல்லம் பாதிக்குமில்லே! தவிரவும்,

தம்பியோட குடும்பமும்   தம்பிய பாக்க தவிச்சுட்டு இருக்குமில்லே? ".


      "  ஆமா! தம்பியோட குடும்பந்தான் தவிச்சுட்டு இருக்கும் ! தம்பியோட

பெத்த ஆத்தா எப்படி போனா என்னா! எங்கிட்டு போனாத்தா என்ன?முந்துன

உறவையும்,பிந்துன உறவையும் தாய் மண்ணிலே ஒண்ணாக்க பாலமாகற

பொறுப்பை உதறி தள்ளிட்டு,அசலூருலே, மண்ணோடு மண்ணாகற

வரைக்கும், காசு பின்னாடியே  ஓடற பெரிய்ய்ய்ய பொறுப்பு மட்டும்தானே

இருக்கு?".

     " ஒம்பிள்ளைக்கு.பெத்தவங்க வேண்டாம்: கூட பொறந்த பொறப்பும்

வேண்டாம்.பொறந்த மண்ணும் வேண்டாம்.அது மண்ணாங்கட்டியாகவே

போகட்டுமே! நமக்கென்னா போச்சு?என்னவோ சாமி சொல்லிடுச்சுங்கறதை

போல,ஒலகத்து காசையெல்லாம் தன்னோட கைபையிலே போட்டதுக்கு

அப்புறம்தான் மறு வேலைன்ற மாதிரி அப்படி என்னா காசு பின்னாடி

கண்ணுமண்ணு தெரியாமை ஓடிட்டிருக்கு நீ பெத்த புள்ளை!நெசமாலுமே

எனக்கு எதுவும் புரியலே ஆத்தா!". பொரிந்துத் தள்ளினாள் ஆத்தாவின்

பேச்சை கேட்டுக்கொண்டே வந்த செல்லம்மா.அவள் குரலில் அத்தனை

வெறுப்பு மண்டி கிடந்தது.


      திரும்பி பார்த்த ஆத்தா ஆற்றாமையில் அரற்றினார்;என்னவென்று;

"அதுதான் செல்லம்மா எனக்கும் புரியலே! ".சப்த நாடியும் ஒடுங்கி போயிற்று

விஜயனுக்கு. பாட்டியும்,பேத்தியும் உள்ளே போய் வெகு நேரமாகியும் திக்

பிரமைப் பிடித்து போய் அமர்ந்திருந்தான் விஜயன்.பிறகு நேரம் பார்த்தான்.

மணி எழரை தாண்டிவிட்டது.வெளியே சிறிது காற்றாடி விட்டு வரணும்

போல இருந்தது.தாயிடம் சொல்லிவிட்டு வீட்டை விட்டு இறங்கினான்.

தெருவிற்கு வந்து இரு புறமும் பார்வையை படர விட்டான்.நிலா ஒளி

குளுகுளுவென்று ஒரு நிறைவான இதம் தந்தது.எங்கிருந்தோ வந்த

மலர்களின் கதம்பமான வாசம் விஜயனுக்கு புத்துயிரூட்டியது.


     " என்ன தம்பி! நிலா வெளிச்சத்திலே காத்தாட வந்தீங்களா? " அடுத்தத்

தெரு காந்தி சித்தப்பா அருகில் வந்தார்.அவரு எப்பவும்,காந்தியை பற்றியே

பேசிக் கொண்டிருப்பதால்,அவருக்கு ஊரில் அந்த பெயர்.வயது ஒரு எழுபது

எழுபத்தைந்து இருக்கும். அவருக்கு மார்கண்டேயன் என்று இன்னொரு

பெயரும் உண்டு. ஊரில் நிறைய பேர்,அவர்களுக்கு விவரம் தெரிந்த நாளில்

இருந்து இவருடைய தோற்றம் அப்படியேத்தான் இருக்கிறதாம்.அம்மா

சொல்ல கேள்விப்பட்டிருக்கிறான் விஜயன்.எப்போதும் ஒரு குறும்புத்தனம்

அரும்பிக் கொண்டிருக்கும் மலர்ந்த முகமாக இருப்பார்.ஆண்,பெண்

வித்தியாசம் இல்லாமல் எல்லா வயதினருடனும் இயல்பாய்,சகஜமாய்

அளவளவாடுவார்.பாசமும்,பரிகசிப்பும் நிறைந்த அவரது பேச்சிற்கு நடுவில்

வரம்பு தாண்டும் விஷயங்களில் குட்டவும் தவற மாட்டார்.குறு மொழியில்

மனது நிறைய செய்து விடுவாராம்.எல்லாம் அம்மா சொல்ல கேள்வி.

விஜயனும் பலமுறை அவரது இனிய சொல்லையும்,இனிய முகத்தையும்

சந்தித்து கடந்திருக்கிறான்.


      "  வாய்காலுக்கு தண்ணி திருப்ப போய்கிட்டு இருக்கேன்தம்பி !

 பேச்சுத் துணைக்கு வர முடிஞ்சா வாங்க!ஒரு மணி நேரத்திலே

திரும்பிடலாம்".வாஞ்சையோடு அழைத்தார்.விஜயனுக்கும்,அது,அந்த

" பேச்சுத் துணை " தேவையாக இருந்தது.அவரை உள்ளே அழைத்து

உபசரித்தான்.பேச்சு சத்தம் கேட்டு,அம்மாவும்,செல்லம்மாவும் வெளியே

வந்தார்கள்.அவரது குசல விசாரிப்பு,கேட்பவர் மனதை நிறைத்தது.அம்மா

ஏதாவது சாப்பிட சொல்ல வற்புறத்த,அவர் திரும்பி வருபோது சாப்பிடுவதாக

வாக்களித்துவிட்டு,விஜயனை அழைத்துக் கொண்டு கிளம்பினார்.


      வழி நெடுக அவர் சொன்ன விஷயங்கள் யாவும் விஜயனை ஒரு புது

உலகத்திற்கு அழைத்துச் சென்றன.




                                                                                                     தொடரும்.........






                                                                                           


        

Friday, September 22, 2017

23.Thai Mann.

    விஜயன் ஊர் வந்து விளையாட்டாய் மூன்று மாதங்கள் கடந்து

விட்டன.அவன் குடும்பம் இருந்த சீமையிலிருந்து ஆளாளுக்கு எப்போது

திரும்பி வருவீர்கள் என்ற நச்சரிப்பு தொடர்ந்து கொண்டேயிருந்தது.விஜயன்

ஒன்றை கவனித்தான்.செல்லம்மா,தினமும் கல்லூரிக்கு கிளம்பும் நேரம்

குறைந்தது ஒரு நான்கைந்து பேராவது தங்கள் மருந்து சீட்டையும்,நகரத்தில்

மட்டுமேகிடைக்கும் வேறு,வேறுபொருட்களுக்கான விண்ணப்பத்தையும்

அதற்குஉண்டான தொகையையும்  செல்லம்மா கையில் தந்துவிட்டு

செல்வார்கள்.செல்லம்மாவும் கரிசனமாக அவரவர்களுக்கான

மருந்தையும், மீதி தொகையையும் சரியாக கொண்டு வந்து சேர்த்து

விடுவாள்.


     செல்லம்மாவை பார்க்கும் போதெல்லாம்,விஜயனுக்குள் ஒரு புதிய

சக்தி பிறப்பதை அவன் உணர்ந்தான்.அவள் தேனி போல சுறுசுறுப்பாய்

இயங்குவதை நாளெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.இந்த இளம்

வயதிலேயே அவளுக்கு ,தனக்கு எது தேவை?எது தேவையில்லை? என்பதில்

மிகத் தெளிவாக இருந்தாள்.அனாவசியமான,அர்த்தமற்ற வார்த்தைகள்

அவளிடமிருந்து பிறக்காது.அடுத்தவர்களிடமிருந்தும் பிறக்க விட மாட்டாள்.

இயன்றால், அடுத்தவர்களுக்கு உதவுவாள்.இயலவில்லை எனில்,தெளிவாக

கூறி  விடுவாள்.ஆனால்,தவறை,தவறு என்று சரியாக கூறுவதில் அவளுக்கு

நிகர் அவள்தான்.அதில் எந்த விதமான  பாராபட்சமும் இருக்காது.


     செல்லம்மாவின் சமையல்,அவளது ஆத்தாவின் சமையல் போலவே

அத்தனை சுவையாக இருக்கும்.இன்னும் சொல்லப் போனால்,அவளது

ஆத்தாவை கேட்டு,கேட்டு,விஜயனுக்கு பிடித்ததை எல்லாம் பிரியமாக

சமைத்து வைத்திருப்பாள்.அதன் ருசியே அவளது பாசத்தை அங்குலம்

அங்குலமாக புரிய வைக்கும்.ஆனால்,அவன் பொருள் தேடச் சென்றவன்,

பெற்றத் தாயை மறந்து,உற்றார்,உறவினர்களை மறந்து,தன் குடும்பத்திற்கு

உறவுகளை  பாலமாக்க மறந்து,இத்தனைக் காலமாக பொருளைத் தேடிக்

கொண்டே இருப்பது ,உண்மையில் அவளுக்கு புரியாத பெரும் புதிராக

இருந்தது.


      ஆனால்,தாய்க்கும்,பிள்ளைக்கும் நடுவில் பாசப் பிணைபபுக்கான அதிக

சந்தர்ப்பங்களை உருவாக்கியபடி இருந்தாள் செல்லம்மா.அவளது ,பாங்கான

பக்குவமானநடவடிக்கைகள்  விஜயனை ஆச்சரியப்படுத்திக்கொண்டே

இருக்கும்.அவைகள் ஏராளமான படிப்பினைகளை தந்துக் கொண்டே இருந்தன.

ஆனால் எக்காரணம் கொண்டும் விஜயன் பக்கம் அவள் திரும்புவதே இல்லை.

அவள்பாட்டிற்கு அவளது வேலைகளை பார்த்துக் கொண்டிருப்பாள்.விஜயன்

வந்ததிலிருந்து அவனது அக்கா எப்போதும் போல நித்தமும் வந்து மாலை

செல்லம்மா வரை தங்குவதில்லை.தினமும் காலையில் வந்து வேலையாட்-

-களுக்கு என்ன வேலையோ சொல்லி விட்டு,அம்மா,தம்பியோடு சிறிது நேரம்

அளவளாவி விட்டு சென்று விடுவாள்.


      கிராமம் ஆனதால்,காலையிலிருந்து,மாலை வரை ஏதாவது ஒரு

காரணத்தினால் யாராவது குசலம் விசாரித்தபடி வந்து போய்க் கொண்டு

இருந்தார்கள்.பொதுவாக அவர்களது பேச்சு வெள்ளந்தியாக இருக்கும்.

விஜயனை அவர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளை போல விசாரித்து விட்டு

செல்வார்கள்.விஜயனும் அக்காவுடன் தோப்பு துரவுகளுக்கு அவ்வப்போது

சென்று வந்ததால்,ஓரளவிற்கு கிராமத்து வாழ்க்கை பிடிப்பட்டது.

செல்லம்மாவை தவிர, அக்கா குடும்பத்தினர் யாவருக்கும் மிகவும்

பிடித்தவனான். மாமாவும் அவ்வப்போது அக்கம்,பக்கம் அழைத்துக் கொண்டு

போய்,அவனை அவன்  பக்கத்து ஜனங்களுக்கு அறிந்த முகமாக்கினார்.


     ஒரு பக்கம், விஜயன் தன் தொலை தூரக் குடும்பத்தை நினைத்து

மிகவும் விசனப்பட்டான்.மறுபக்கம்,இந்த கிராமத்து சூழ்நிலைக்கு ஒன்றி

அம்மாவுடனும்,அக்கா குடும்பத்தினருடனும்  நிரந்தரமாக தங்கி விடலாமா?

என்றும் மனதில் பேரவா  இருந்தது.இருதலைக் கொள்ளி எறும்பாக தனக்குள்

தவித்துக் கொண்டிருந்தான் விஜயன்.





                                                                                                தொடரும்...........