Friday, September 22, 2017

22. Thai Mann.

    மறுநாள் மாலை நேரத்தில் எப்போதும் போல செல்லம்மா பாட்டி வீட்டிற்கு

வந்து சேர்ந்தாள்.முன்னால் கூடத்தில்,ஊஞ்சலில்,மெதுவாக ஆடியபடி ஒரு

புத்தகத்தில் மூழ்கி போயிருந்தான் விஜயன்.செல்லம்மாவை கண்டதும்,புன்-

-சிரிப்பை சிந்த விட்டான்.ஆனால் செல்லம்மா கண்டு கொண்டால்தானே!

அந்த கூடத்தில்,வெறும் ஊஞ்சல் மட்டும்தான் இருக்கிறது வேறு ஒன்றும்

இல்லை பாவனையில் சாதாரணமாக எப்போதும் உள்ளே போவது போல

உள்ளே போய் விட்டாள்.


    அம்மா சொன்னது நினைவிற்கு வந்தது.செல்லம்மா,இங்கிருந்து இருபது

கிலோமீட்டர் தொலைவிலுள்ள நகரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எட்.

படிப்பு படிக்கிறாளாம்.மாலையில் தன் வீட்டிற்கு சென்று,உடை மாற்றி விட்டு,

மறுநாள் கல்லூரிக்கு செல்ல தேவையான புத்தகங்களையும்,மாற்று உடை-

-களையும்,எடுத்துக் கொண்டு இங்கு அவளது பாட்டியின் துணைக்கு வந்து

விடுவாள்.காலையில் அவளது அம்மா வந்ததும் கல்லூரிக்கு கிளம்பி

விடுவாள்.பகல் முழுதும் அம்மா,பாட்டியையும்,பாட்டியின் வயல்

வரப்புகளையும்,பாட்டியின் வேலையாட்களின் உதவியுடன் கவனித்துக்

கொள்வார்.மாலையில் செல்லம்மா வந்ததும் தன் ஊர் பார்க்க கிளம்பி

விடுவார்.


    பாட்டியின் ஊர் இளவட்டங்களுக்கு செல்லம்மா  பேரில் கொள்ளை

ஆசை.ஆனால்,அருகில் செல்ல துணிச்சலில்லை.செல்லம்மா அவர்களிடம்

சொல்லி வைத்திருக்கிறாளாம்.தான்,தன் பாட்டியை கவனித்துக் கொள்ள,

பாட்டியின் ஊரில்தான் வாழ்க்கைப்பட போகிறாளாம்.ஆனால் யாருக்கு

என்று சொல்லவில்லை.அதனால் பாட்டி ஊரின் எல்லா இளைஞர்களும்

அடக்கி வாசித்தபடி வலம் வந்து கொண்டிருக்கிறார்களாம் .


    நேரே உள்ளே சென்ற செல்லம்மா," என்ன ஆத்தா! பார்க்க பரம சந்தோஷமா

 இருக்காப்பலே தெரியுது.புள்ளே  வந்த  உடனே என்ன ஒரு பூரிப்பு!ஒரு பத்து

பதினெஞ்சு வயசு குறைஞ்சு  அழகு கூடிடிச்சு போ!வயசு புள்ளையாட்டம்

வளைய,வளைய வந்து பம்பரமா வேலை பார்க்குறே!உன்னெயெ இப்படி

பாக்கத்தானே நா தவியாய் தவிச்சு கிடந்தேன்;மனசு நெறெஞ்சு போகுது

ஆத்தா!இந்த சந்தோஷம் ஒனக்கு ஆயுசுக்கும் கிடைக்கட்டும்னு ஐயனாரெ

வேண்டிக்கிறேன் ஆத்தா! பிறகு அவர் இஷ்டம் போல நடத்தட்டும் ".


   செல்லம்மா ஐயனாரை மனதார ஒரு நிமிடம் வேண்டிக் கொண்டாள்.

வேண்டுதல் முடிந்து நிமிர்ந்தவள், " ஏனாத்தா ! நீதான் இப்போ பரபரன்னு

சுறுசுறுப்பு ஆயிட்டேயே ! இனி நா எதுக்கு ஆத்தாவுக்கு,புள்ளைக்கு

 நடுவிலே?எத்தனே காலத்து கதெ பேச வேண்டியிருக்கு ஆத்தாவுக்கும்

புள்ளைக்கும் ? கதெ பேசிட்டே புள்ளைக்கும் வாய்க்கு வக்கணையா

சமைச்சுப் போட்டு சந்தோஷமா இரு ஆத்தா! என்ன சமாளிச்சுடுவே இல்லே?".

குரலில் ஏக கரிசனம்.


    வந்ததே கோபம் ஆத்தாவுக்கு." நல்ல இருக்கு புள்ளே நீ பேசற பேச்சு;

என்னோட  உசுரே நீதானே புள்ளே! நீ போயிட்டா, உசுரு இல்லமே வெறும்

சடலமா எம்புள்ளைய நானு எப்படி கொண்டாடரதாம்? ". பாட்டி முறுக்கிக்

கொள்வது தெரிந்தது. " சரி!சரி! ஒடனே கண்ணை  கசக்காதே! நா இருக்கேன்.

ஒம்புள்ளைக்கு என்னன்னா பிடிக்கும்னு சொல்லு! எல்லாத்தையும்தயார்

பண்றேன் ". பேசியபடியே  செல்லம்மா இன்னும் உள்ளே சென்று கொண்டி-

-ருந்தாள் .


    முற்றத்தில்  ஊஞ்சலில் மெதுவாக அசைந்தபடி  பாட்டிக்கும் பேத்திக்கும்

நடந்து கொண்டிருந்த உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தான் விஜயன்.

அந்த யதார்த்தமும்,கண்ணியமும் நிறைந்து தெளிந்த நீரோடையாக

சலனமின்றி பயணிக்கும் அந்த ஆழமான பாட்டிக்கும் பேத்திக்கும்

இடையிலான அன்பின் நிதர்சன ஸ்பரிசத்தை தென்றலாய் உணர்ந்தான்

விஜயன்.





                                                                                       தொடரும்......................   




 


   


Thursday, September 21, 2017

21.Thai Mann.

   அடுத்தநாள் முதல்,விஜயன்,தன் தாயிடம் சொல்லிவிட்டு,கிராமங்களின்

வயற் வரப்புகளில் நடை பயின்றான்.அவனது  யோசனையில் எல்லாம் கடும்

சீற்றத்துடன் வந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டுச் சென்ற அந்த புயல்

நினைவாகவே இருந்தது.எத்தனை பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும்

அந்தப் புயலை நேசிக்காமல் இருக்க முடியவில்லை.


   விஜயனின் தாய் எல்லாவற்றையும் விவரமாக சொன்னார்.தன் மகள்

வயிற்று  பேத்தியின் அருமை,பெருமைகளை விலாவாரியாக சொன்னார்.

அக்காவின் கடைக் குட்டி.படுச்சுட்டி.பெயர் பாரதி என்கிற செல்லம்மாவாம்.

அந்த பெயர் காரணத்தினால்--தானோ என்னவோ,சிறுமைகளை பொறுக்காத

 " அக்னி குஞ்சாக "இருக்கிறாள்.அக்காவின் வீட்டை, அக்காவும்,மாமாவும்

நிர்வகிப்பதில்லையாம்.இந்த அக்னி குஞ்சுதான் நிர்வகிக்கிறதாம்.


     இந்த அக்னி குஞ்சுவின் ஊரும்,அதன் பாட்டியின் ஊரும் அருகருகில்

இருந்ததனால்,இதற்கு மிகவும் கொண்டாட்டமாக போய்விட்டது.இல்லை

என்றால்,அதன் பாட்டியின் பாடு திண்டாட்டமாக  அல்லவா போயிருக்கும் ?

இது அதன் நிதர்சனமான வாதம்.தன் பாட்டி மீது ஏகத்திற்கு வாஞ்சை;

பாசம்;தன் பெற்றோர் மற்றும் தன் குடும்ப அங்கத்தினர்கள் ஒவ்வொருவர்

மீதும் உயிராக இருக்கிறதாம்.அவளுடைய அண்ணிமார்கள் இருவரும்

இவளிடம்தான் எல்லா நல்லது,நல்லது அல்லாத விஷயங்களையும் பகிர்ந்து

கொள்வார்களாம்.இருஊராருக்கும் செல்லப்பிள்ளையாம்.அதனால் இரு

ஊராரும் அவளைசெல்லமாக  " செல்லம்மா " என்றே அழைக்கிராற்களாம்,



    அம்மா சொல்ல,சொல்ல,விஜயனுக்கு செல்லம்மாவை மிகவும் பிடித்து

போனது.இந்தச் சுட்டிக் குழந்தையை பிறந்ததிலிருந்து,ஒரு தாய் மாமன்

ஸ்தானத்திலிருந்து அதன் குழந்தை பருவத்தை அங்குலம்,அங்குலமாக

ரசித்து, அதனுடன் ஆசை,ஆசையாய் விளையாடி,விரும்பியதல்லாம்

வாங்கித் தந்து,அழுதுக் கொண்டு வந்து நிற்கும் போதெல்லாம்,நான் " தாய்

மாமன் " இருக்கிறேன்  என்று அன்பாய் அரவணைத்து, இன்னும் அதன்

ஒவ்வொரு பருவத்திலும்,அதற்கு எழும் எல்லா சந்தேகங்களையும்,வயல்-

-வரப்புகள்  நடுவே கைப்பிடித்து அழைத்துக் கொண்டுச் சென்று,அதன்

வயதிற்கு ஏற்றவாறு புரியும்படி,சகல அங்க,அசைவுகளுடன் கதைகல் பல 

சொல்லிக்  கொண்டு செல்லும் அனுபவம்,அந்த வயல் வரப்பினூடே இந்த

மலர்செண்டு,அசைந்து,அசைந்து நடந்து வரும் அழகு,இன்னும் எத்தனை,

எத்தனையோ சந்தோஷங்களை இழந்த மிகப் பெரிய வருத்தத்தை விஜயன்

உணரலானான்.


    இன்னும் சொல்லப் போனால்,தன் உடன் பிறந்த அன்பு சகோதரியின்

குழந்தைகளுக்கு ஒரு  தாய் மாமனாக, தான் எந்த விதத்திலும்,எந்த வித

சந்தோஷத்தையும்  அந்தக் குழந்தைகள் தம்மிடம் பெறுவதற்கு தான் வாய்ப்பு

ஏற்படுத்தி தரவில்லை என்றக் குற்ற உணர்வால் குறுகிப் போனான் விஜயன்.

முதலில் தன் பெற்றோருக்கு ஒரு நல்ல மகனாக இருந்திருந்தால்தானே

அவர்களை சார்ந்த எல்லா உறவுகளும் திடமாக தொடர்ந்து கொண்டு

 இருந்திருக்கும். தெறித்த உண்மை அவனை சுட்டெரித்தது.


   " சரி இழந்ததை பற்றி யோசித்து,யோசித்து விசனப் படுவதால் யாருக்கு

என்ன பயன் விளைய போகிறது?.அவையெல்லாம் கடன் என்றுதான்

கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.அதாவது  " நன்றிக் கடன் " என்று.

இனி ஒவ்வொருவருக்கும் அந்த நன்றிக் கடனை திருப்பி செலுத்த

என்னென்ன வழி வகைகள் உண்டு என்பதை ஆராய்வதுதான் தனது

தலையாய பணி "  தெளிந்த விஜயன் நிமிர்ந்து, தன் நடையை தொடர்ந்தான்.

அதை ஆமோதித்த தென்றலும் விஜயனை ஆசுவாசப்படுத்தியது.







                                                                                         தொடரும் .............


 



Wednesday, September 20, 2017

20. Thai Mann.

    " புயலுக்குப் பின் அமைதி " என்று சாதாரணமாக கூறக்  கூடிய புயலா? வந்து

சென்றப் புயல்.அந்த புயலின் தோற்றமே " அச்சம் " என்ற சொல்லின் முழு

பரிமாணத்தை,தாய்,மகன் இருவரது மனதிலும் கருப்பு மையில் அச்சடித்தது

போல படிய வைத்து விட்டுப் போனது.அந்த ஆழமாக ,அழுத்தமாக ,மிகுந்த

ரணகள வலியுடன் படிந்து விட்ட அந்த கருப்பு மை அச்சை உணர்ந்த விஜயன்

சர்வ சக்தியையும் இழந்து சிலையாகி சமைந்து போனான்.அவனது தாயின்

நிலைமை விவரணைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது,


    நீண்ட நேர மயான அமைதிக்கு பிறகு விஜயனுக்கு ஒரு அடர் திரை விலகி,

தெளிவு பிறந்தது.எல்லாமே தெள்ளத் தெளிவாகின.இத்தனை ஆண்டுகளுக்கு

பிறகு, இத்தனை ஆயிரம் மைல்கள்  அப்பால் இருந்த தன்னை,அங்கு இருக்க

விடாமல்,தாய் மண்ணிற்கு சுண்டி இழுத்த சக்தி,இப்பொழுது  வந்து போனதே

இந்த புயலின் சக்திதான் என்பதை  அவனது உள்ளுணர்வு அவனுக்கு

உணர்த்தியது.


   அந்த மகா சக்தியின் மகிமையை உணர்ந்ததும்,விஜயன் தன்னை

சுதாரித்துக் கொண்டான்.அந்த சக்திக்கு தன் பாட்டியின் பால் கொண்டுள்ள

ஆழமான பரிவுதான்,அந்த அப்பழுக்கில்லாத பாசம்தான்,விஜயனின்

தலையாய பொறுப்பை உணர்த்தும் விதமாக அவனை கட்டி இழுத்து வந்து

அவனை தன்  தாயின்பால் சேர்த்திருக்கிறது.


   விஜயன் மனதின் வலிமையைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறான்.ஆனால்

இப்பொழுதுதான் அதன் வலிமையின் தீவிரத்தை,அதன் ஆக்ரோஷத்தை

நேரில் கண்டுக் கொண்டான்.அப்படியெனில் இத்தனை வலிமைப் பெற்ற

அந்த மனதில்,அது தன் பாட்டியின்பால் கொண்டுள்ள பாசமும் மிகவும்

வலிமையானதாகத்தான் இருக்க வேண்டும்.இந்த நிதர்சனத்தை சுளீரென

 சாட்டையடி வலியாய்  உணர்ந்தான்.தான் மறந்த அல்லது விலக்கிய தன்

தலையாய பொறுப்பை இந்த பிஞ்சு,தன் தோள் மீது சுமந்து,தன் பாட்டியின்

கௌரவத்தை கம்பீரமாக காத்து நின்றிருக்கிறது.தன்னை எண்ணி கூசிப்

போனான் விஜயன்.


   திரும்பி தாயை பார்க்க,அவனது தாய் அவனையே பார்த்துக் கொண்டு

இருந்தாள்.அதில் வேதனை மிகுந்திருந்தது.தன் மகனின் மரியாதையை

தன் பேத்திக் குன்ற செய்து விட்டாளே!தன் தாயின் பரிதவிப்பை உணர்ந்தான்

விஜயன்.எல்லா தாய்மார்களுக்கும் உள்ள நியாயமான பரிதவிப்புதான்.தன்

பிள்ளை எப்படிப் பட்டவனாயிருந்தாலும்,தன் கண் முன்னே யாரும்  தன்

மகனின் மரியாதைக்கு ஊரு விளைவிக்கக் கூடாது.என்னே ஒரு

தாய்மையின் நியாயத்தின் பெருமை.


    விஜயன் ஒரு முடிவுக்கு வந்திருப்பது போல தெரிந்தது,தன் தாயைப் பார்த்து

முறுவலித்தான்.அவனது தாய் அந்த முறுவலின் அழகை ரசிப்பது தெரிந்தது.

மெதுவாகத் தன்னை ஆசுவாசபடுத்திக் கொண்டான்  விஜயன்.





                                                                                      தொடரும்.............




Monday, September 18, 2017

19.Thai Mann.

   விஜயனின் கடிதம் மிகவும் சுவராஸ்யாமாக இருந்தது மீனாவிற்கு.

அந்தக் கடிதத்தை எத்தனை முறை படித்தாலும் சலிப்பு தட்டவேயில்லை.

மறுபடியும்,மறுபடியும்  படித்துக் கொண்டே இருந்தாள் .விஜயனிடமிருந்து

அடுத்தக் கடிதம் வரும்வரை இதையேதான் செய்துக் கொண்டிருப்பாள்

போலிருக்கிறது.விஜயனை சகட்டுமேனிக்கும் தூக்கியடித்த அந்தப் புயல்

இவ்வளவுத்தொலைவில் இருக்கும் மீனாவையும் விட்டு வைக்கவில்லை.

தனக்குள் வாரி சுருட்டிக் கொண்டது.மீனா,அந்த புயலுக்குள் ஒரு கதகதப்பை

உணர்ந்தாள். அந்த உணர்வு அவளுக்கு விசித்திரமாக இருந்தது.அந்த

விசித்திரத்தின் ஊடே மறுபடியும்,மறுபடியும் விஜயனின் கடிதத்தில்

 ஐக்கியமானாள் .


 
    இரண்டு நாளாக அம்மாவின் போக்கு ஸ்ரீதருக்கும் விசித்திரமாக இருந்தது.

அப்படி என்னதான் அப்பா எழுதி இருப்பார்.அப்பாவின் முதல் கடிதங்களை

எல்லாம் ஸ்ரீதரும் படித்திருக்கிறான்.சுகமான அனுபவம்தான்.மறுப்பதற்கு

இல்லை.ஆனால்,இந்த கடிதத்தை அம்மா இன்னும் படிக்க தரவேயில்லை.

அப்படி என்றால் ஏதாவது தனிப்பட்ட முறையில் எழுதி இருப்பாரோ?அப்படி

என்றால் அம்மா இப்படி பகிரங்கமாக படிப்பானேன்.ஒன்றும் விளங்கவில்லை

ஸ்ரீதருக்கு.அம்மா படித்து விட்டுத் தரட்டும் என்றபடி தொலைகாட்சி பெட்டிக்கு

உயிரூட்டினான்.அங்கிருந்தபடியே அம்மாவை அவ்வப்போது பார்வையால்

அளந்துக் கொண்டிருந்தான்,


   அம்மா அந்த கடிதத்தில் மூழ்கி போயிருந்தாள்.கடிதத்தில் விஜயன்

விவரித்த அந்தப்  பெண் புயலின் பிரவேசக் காட்சியை  நேரில் பார்த்துக்

கொண்டிருப்பது போலவே உணர்ந்தாள்.விஜயன் கடிதத்தில் தொடர்ந்தான்.


  " மாலையில் வந்த அந்த புயலில்,அதன்  வேகத்தில்,அதன் தாக்கத்திற்கு

ஈடாக ஒரு நேர்த்தியான அழகு ஒளிர்ந்து கொண்டிருந்தது. அந்த புயலின்

தாக்கம் சற்று மட்டுப்பட்டிருந்தால் கூட அந்த மாசு மருவற்ற அந்த

அழகை,ஆண்,பெண் என்ற வித்தியாசமும்,எந்த வயது வித்தியாசமுமின்றி

மிகவும் வாஞ்சையுடன் ரசித்திருப்பார்கள்.அத்தனை திருத்தமாக இருந்தது

அந்த பெண் புயல்".


   " அந்த பெண் புயலின் தாக்கத்தை  மனதாலும்,உடலாலும் எதிர் கொள்ளும்

சக்தியை,அம்மா,முழுவதுமாக இழந்து போனது அவரது தோற்றத்திலேயே

தெளிவாகிப் போனது.ஆனால் மீனா!எனக்கு அம்மாவை போல அந்த புயலின்

கடுமையான தாக்கம் அப்போதைக்கு உறைக்கவில்லை .அதன் சாத்வீகமான

அழகில் மெய் மறந்து போனேன்.நாம் இங்கிருந்து கிளம்பும்போது அதற்கு

இரண்டு வயது இருக்குமா?ஆனால் இப்பொழுது நீங்கள் எல்லோரும்

அதனைப்  பார்த்தால் அசந்துதான் போவீ ர்கள்.கிராமத்திற்கே உரித்தான அந்த

தெளிவான தைரியம்,அதன்  தோற்றத்திற்கு மெருகேற்றிக் கொண்டிருந்தது".


    "அந்தப்  பெண் புயல் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.ஏன் நான் அங்கு

நிற்பதையே ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.நேராக அம்மாவை

நோக்கிச் சென்றது.அம்மா அயர்ந்து போய் அமர்ந்திருந்தார்.அவர் முன்

தன்னை சரிபடுத்தி,நெறிபடுத்தி அமர்ந்தது.மேலும் தளர்ந்து போயிருந்த

அம்மாவின் முகவாயை உயர்த்திப்  பற்றி,அம்மாவின் கண்ணை உற்று

நோக்கியபடி அழுத்தமாக,திருத்தமாக,தெளிவாக கேட்டது .உருக்குலைந்துப்

போனேன் நான்".


   மீனாவிற்கு கடிதத்தை தொடர தைரியம் வரவில்லை.அப்படியே படிக்காமல்

விட்டு  விடலாமா? என்று முதல் முறை படிக்கும்போது தோன்றிய எண்ணம்

இப்போதும் தவறாமல் திரும்பவும் தோன்றியது.ஆனாலும் தொடர்ந்து

படித்தாள்.


   "அந்த பெண் புயல் கேட்டக் கேள்வி என்னத் தெரியுமா? "ஏனாத்தா?

எங்களுக்குத்தான் சொல்லிக் கொடுத்தியாக்கும் "தந்தை தாய் பேண் "

அப்படின்னு. உம்பிள்ளைக்கு சொல்லிக் கொடுக்க மறந்துட்டேப்போல".

அம்மாவிற்கும்,பிள்ளைக்கும் பலத்த சேதத்தை ஏற்படுத்தி விட்டு வெளியேறி

விட்டது அந்தக் கடும் புயல்.நான் அந்த புயலிலிருந்து மீண்டு வருவேனா மீனா

?.கடிதம் முடிந்திருந்தது,


 

                                                                                                தொடரும்...................
   


     

Friday, September 18, 2015

18.Thai Mann.

   விஜயன் தமக்கையின் வீட்டில் அந்த பத்ரகாளியின் வருகைக்காக இருட்டும்

வரைக்  காத்திருந்தும் அவள் வரவேயில்லை.வேறு வழியின்றி வீட்டில்

எல்லோரிடமும் விடைப் பெற்று சோர்ந்த முகத்துடன் வீடு வந்து சேர்ந்தான்.

தமக்கையின் வீட்டிலும் பெரும் அசௌகரியத்துடன் விஜயனை வழியனுப்பி

வைத்தார்கள்.


    விஜயனின் சோர்ந்த முகத்தை பார்த்ததும்,அவனது தாய்க்கு எல்லாமே

புரிந்து போயிற்று.ஆனால் தனது கண்ணான மகனை எப்படி ஆறுதல் கூ றி

அவனை தெளிவுப் படுத்துவது என்பதுதான் புரியவில்லை. மேலும் விவரம்

எதுவும் கேட்டு  தனது அருமை மகனை சங்கடப்படுத்த விரும்பாமல்  அவன்

அலுப்புத் தீர குளித்து விட்டு வரட்டும் என்று உள்ளே சென்று துண்டை எடுத்து

 வந்து அவன் தோள் மீது  போட்டு விட்டு அவனைக் கொல்லைப்புறம்

அனுப்பி வைத்தார்.


    ஆனால் அந்த குளிர்ந்த நீராலும் விஜயனை ஆசுவாசப்படுத்த

முடியவில்லை. தமக்கை வீட்டிற்கு புறப்பட்டபோது உண்டான உற்சாகம்

முற்றிலுமாக வடிந்து போனது.குளித்து முடித்து வந்து உண்ண அமர்ந்த

பின்னும் அவனது மனது ஒரு நிலையில் இல்லாமல் தத்தளித்துக் கொண்டே

இருந்தது.தட்டில் கன கம்பீரமாய் வீற்றிருக்கும்,ஆவிப் பறக்கும்,விதவிதமான,

கண்ணுக்கு இதமான உணவு பதார்த்தங்கள் அனைத்தையும் விஜயன் எவ்வித

உணர்வும் இன்றி பார்த்த வண்ணம் இருந்தான்.

 
     ஒரு  விஷயம் அவனது மனதை குடைந்துக் கொண்டே இருந்தது.ஒரு

இருபது இருபத்திரண்டு வயது பெண்ணிற்கு, ஏறக்குறைய இருபது ஆண்டுகள்

பணி  நிமித்தம் வெளி நாட்டில் இருந்து விட்டு தாயகத்திற்கு வந்திருக்கும்

தாய் மாமனை பார்க்க விரும்பாமல் தவிர்க்கிறாள் என்றால்,ஏதோ பெரிய

விஷயமாகத்தான் இருக்க வேண்டும்.அது என்னவாக இருக்கும் என்பது

விஜயனுக்கு பிடிபடவேயில்லை.


   "ஏம்ப்பா! என் மகனுக்கு எல்லாமே பிடிச்சதாதானே ஆசையா சமைச்சி,

அழகா தட்டிலே எடுத்து வச்சிருக்கேன்.எம்புள்ளை சாப்பிடற அழகை

கண்ணார பார்த்து ரசிக்கத்தானே பக்கத்திலேயே தவமா உக்காந்திருக்கேன்.

எதையுமே தொடாமே இப்படி பார்த்துட்டே இருந்தா எப்படி சாமி? இப்போ

எம்பையனோட   நாக்கு பழைய ருசி எல்லாத்தையும் மறந்திடிச்சோ?". என

விஜயனின்  அம்மா விஜயனின் கைப்பற்றி அரற்றத் தொடங்கவும் விஜயன்

விழித்துக் கொண்டான்.


   அம்மாவை நிமிர்ந்து பார்த்தான்.அம்மாவின் அன்பு காட்டாற்று வெள்ளமாக

பிரவாகமெடுப்பதைக் கண்டான்.அந்தப் பிரவாகத்தில் தன் உடலும்,உணர்வும்

ஒரு சேர அதிர்ந்துக் கொண்டிருப்பது புரிந்தது.தன் அம்மாவின் அருகாமை

அவளது முந்தானையில்தான் இருக்கிறது என்ற சூட்சமத்தைப் புரிந்துக்

கொண்டு அதைப் பற்றியப்படியே,அவளை சுற்றிச் சுற்றி வந்த தன் சிறு

வயது உலகம் அவன் கண்முன் விரிந்தது.


    தன் உடலையும்,உணர்வுகளையும் ஒருமுகப்படுத்தினான்."எனக்குப்

புரியாத புதிர்களெல்லாம் புரிகிறபோது புரியட்டும்.இப்போது அம்மாவை

எந்த விதத்திலும் சங்கடப்படுத்த வேண்டாம்" என முடிவெடுத்தவனாய்

தட்டிலிருந்த பதார்த்தங்களை கண்கள் விரியப் பார்த்தான்.


     சிறுப் பிள்ளைஆகி அம்மாவின் முன் கை நீட்ட,அம்மாவின் கண்ணில்

அருவியாய் நீர் ஊற்று தடம் பதித்தது.அதனை தன் முந்தானையால்

விலக்கியப்படி  தன் பிள்ளையின் நீட்டி,மடங்கி,மறுபடியும்,மறுபடியும்

நீட்டி,நீட்டி மடங்கும் கைகளில்,ஒவ்வொரு பலகாரமாக அதற்கான

சட்னி,சாம்பாருடன் தோய்த்து தோய்த்து வைத்து,பலகாரங்களின் ருசியை

பலமடங்காக்கினார் அம்மா.ரசித்து,ருசித்து உண்ட வண்ணம் இருந்த

விஜயனுக்கோ,தான் இப்போதுதான் தன் நீண்ட உறக்கத்திலிருந்து விழித்து

கொண்ட கும்பகர்ணனாய் உணர்ந்தான்.


    ஒவ்வொரு பலகாரமும்,அதற்கான சரியான இணையுடன் இணைந்து

அதற்கான பிரத்யோக ருசியுடன் நாக்கு மொட்டுகளில் கரைந்து அதற்கே

 உரித்தான உணர்வு பின்னணிகளை உசுப்பி விட்டது.மெய் மறந்து உண்டுக்

களித்தான் விஜயன். அதனைக் கண்டுக் களித்தாள் அவனது தாய்.


   என்றைக்கும் இல்லாது மிக ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றுத் திரும்பினான்

விஜயன்.கண்கள் பளிச்சென்று திறந்தன.மனதும்,சாணியில் மெழுகி,பரந்து

இடப்பட்ட வாசல் கோலம் போல குதூகலித்தது. விடிந்தும்,விடியாத காலை

நேரங்களின் பரிச்சயம் கவிதை.எல்லோரது மனதையும் தெளிவுப் படுத்திக்

கொண்டே செல்லும் தென்றல்.விஜயன் அம்மாவைத் தேடிக் கொண்டே

வெளியில் வர,அவனது தெருவே அகமும்,முகமும் அன்றலர்ந்த மலராய்

மலர்ந்து அவனுக்கு முகமன் கூறியது.இளகிப் போனான் விஜயன்.


   ஆனால் அன்று மாலையே அவனது இளகிய மனம் இறுகி போகும்படியாக

பூ ஒன்று புயலாகி வந்து நின்றது.






                                                                                                 தொடரும்...............    

   



       

Friday, July 3, 2015

17.Thai Mann.

      தமக்கையின் பதிலால் அதிர்ந்துதான் போனான் விஜயன்.பிறகு அங்கிருந்த

எல்லோரையும் ஒரு முறை உன்னிப்பாகப்  பார்த்தான்.எல்லோரது முகமும்

ஒரே உணர்ச்சியைத்தான் காட்டின. அதாவது ஒரே உணர்ச்சியை  அதாவது

ஒரு வகை திகில் நிறைந்த முகங்களாக தென்பட்டன.ஒன்றும் புரியாமல்

எல்லோரையும் இன்னொரு முறை உற்றுப் பார்த்தான்.


    "என்னக்கா! என்ன விஷயம்? செல்லம்மா பேரைக் கேட்டாலே ஏன்

எல்லோரும் ஒரு மாதிரியா இருக்கீங்க?நான் வருவது அவளுக்குத்

தெரியாதா? எல்லோருமே இங்கே இருக்கறப்போ அவள் மட்டும் எங்கே

போனாள்?.எவ்வளவு ஆசையா வந்திருப்பேன் ,எல்லோரையும் ஒண்ணா

பார்க்கலாம்னு.எங்கே அக்கா போயிருக்கா நம்மக் கடைக்குட்டி செல்லம்மா?".


   விஜயன் என்னமோ கேள்வி மேல் கேள்விக் கேட்டுக் கொண்டேதான்

இருந்தான். ஆனால் எந்தக் கேள்விக்கும்  பதில்தான் வரவே இல்லை.

குழம்பிப் போனான் விஜயன்.மாமாவைத் திரும்பிப் பார்த்தான்.

அவரிடமிருந்து நீண்ட பெருமூச்சுதான் பதிலாக வந்தது.அரண்டுப்

போனவனாய் எழுந்து தன் தமக்கையின் அருகில் வந்து அமர்ந்தான்.


    தமக்கையையே  உற்றுப் பார்த்தவாறு  இருந்தான்.அவனது நிலையை

சகஜமாக்க மாமா அவருக்கே உரிய சாதுரியத்துடன் விஜயனின் கவனத்தைத்

தன் பக்கம் திருப்பினார்."அது ஒண்ணுமில்லை தம்பி! செல்லம்மாவுக்கு உங்க

மேலேயும்,உங்க குடும்பத்து மேலேயும் சொல்லவொண்ணா கோபம்.அதை

"கோபம்" அப்படின்னு சாதாரணமா எடுத்துக்க முடியாது தம்பி! உங்கக்கா

சொன்ன மாதிரி பத்ரகாளி கோபம் தம்பி! எனக்கும் செல்லம்மாவோட அந்த

கடும் கோபம் நியாமானதுதான்னு படுது".


    மாமா என்னாவோ சாதாரணமாகத்தான் சொல்வது போல சொன்னார்.

ஆனால்,அதில் உள்ள வீரியம், சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் விதமாக

இல்லை.விஜயனுக்கு திக்கென்றிருந்தது.செல்லம்மாவை,கடைசியாக

ஒன்றரை வயதுக் குழந்தையாக தன்  தமக்கையின் இடுப்பில் ஒன்றி

இருந்தபோது பார்த்தது.இப்போது இவர்கள் எல்லோரும் தரும் அறிமுக

படலத்தை நினைத்தாலே ஒரு மாதிரி படபடவென்று இருந்தது.



                                                                           
                                                                                                                     தொடரும்...........  


          

Saturday, January 3, 2015

16.Thai Mann.

   தமக்கையின் வீட்டிற்குள் நுழைந்ததும் வீட்டின் குளிர்ச்சி மிகவும் இதமாக

இருந்தது விஜயனுக்கு.உயரமான உத்தரங்களும்,விஸ்தாரம் மிகுந்த

அறைகளும்,விசாலமான முற்றமும்,பரந்து விரிந்த வாசலும்,நேர்த்தியான

பாராமரிப்பும், அதனுடன் ஒன்றியிருந்த  தூய்மையும் மனத்தைக் கொள்ளைக்

கொண்டது.தேவையற்ற சாமான்கள் கண்களுக்குத் தட்டுப் படவேயில்லை.

எல்லாம் அதற்கான தனியறையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.விஜயன்

அனுமானித்தான்.


   வீட்டில் எல்லோரும் முக மலர்ச்சியுடந்தான் இருந்தார்கள்.ஆனால்

அதையும் மீறி ஒருக் கலவரம் அவ்வப்போது எல்லோரையும்த் தொற்றிக்

கொண்டு வருவதும்,போவதுமாக இருந்தது.மாமா,"என்னத் தம்பி!ரொம்ப

நாளைக்கப்புறம் ஊர் ஞாபகம் வந்திருக்குப் போல!ஓய்வுப் பெற்றக்

கையோட அப்படியே கிளம்பி வந்துட்டிங்க போலிருக்கு.சௌக்கியமா

இருக்கீங்களா?வீட்டிலே எல்லோரும் சௌக்கியமா இருக்காங்களா?

குடும்பத்தை அழைச்சுட்டு வர சௌகரியப்படலையா?"


    மாமா என்னவோ சாதாரணமாக எதார்த்தமாகத்தான் பாந்தமாகத்தான்

 கேட்டார்.ஆனால் விஜயனுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அவனுக்கே

அவன் எதற்கு வந்தான் ஏன் வந்தான்?எது அவனை இவ்வளவு ஆக்ரோஷமாக

இழுத்துக் கொண்டு வந்தது?எத்தனை நாட்களுக்கு அவனது தாய் மண்ணில்

தங்க உத்தேசித்திருக்கிறான்?என்பது புரிபடாத போது குடும்பத்தை எப்படி

அழைத்துக் கொண்டு வருவது?.


    விஜயன் மெளனமாக மாமாவை ஏறிட்டுப் பார்த்தான்.மாமாவிற்கும்

அவனது சங்கடம் புரிந்திருக்கும் போல."சரி விடுங்க தம்பி! உங்களை

அழைச்சுட்டு வந்தாப்போல உங்க சொந்த மண்ணும்,ஊற்றும் அவங்களையும்

வெகு நாள் காக்க வைக்காமை இங்கே  அவங்க சொந்த இடத்திலே கால் பதிய

வைக்கட்டும்".மாமாவின் ஆதங்கம் தெளிவாகப் புரிந்தது.தன் குடும்பத்தை

பார்க்கும் ஆவல் அவரது ஒவ்வொரு வார்த்தையிலும்,அவரது உடலின்

ஒவ்வொரு  அசைவிலும் துல்லியமாகத் தெரிந்தது.உடலின் மொழியை நாம்

சரியாக மொழிப் பெயர்க்க தெரிந்தோமானால்,அது உண்மையைத் தவிர

வேறு எதையும் சொல்வதில்லை என்பது நிதர்சனமாகப் புரியும்.


    அதற்குள் அவனது தமக்கை,அவரது இரு மகன்கள் மற்றும் மருமகள்கள்

மற்றும் பேரக்குழந்தைகள் உதவியுடன்,ஒரு பெரிய மேசையை  நடு வீட்டில்

வைத்து,அதன் மேல் ஒரு மெல்லிய வெள்ளைத் துணி விரித்து மாலை நேர

பலகாரங்களை சுட சுட ஒன்றன் பின் ஒன்றாக அழகாக பரப்பி வைத்தார்.

அந்த பலகாரங்களின் பலதரப்பட்ட இதமான  வாசங்களும்,அது பரப்பி

வைக்கப்பட்ட அழகும்,கண்களையும்,நாவையும் ஒரு சேர சுவைக்க

அழைத்தன.


    எல்லோரும் ஒன்றாக அங்கங்கு அமர்ந்து அளவளாவிக் கொண்டே

ருசித்து உண்டனர்.ஒரு குடும்பத்தின்,அதன் அங்கத்தினர்களின்  அன்பின்,

கௌரவத்தின் பலமான,ஆழமான இழையை  நாம் சென்ற சிறிது

நேரத்திற்கெல்லாம் நம்மால் இனம் கண்டுக் கொள்ள முடியும்.விஜயனின்

தமக்கையின் குடும்பத்தில் அந்த அன்பான,பண்பான இழை எல்லோரையும்,

எல்லோருடனும் அந்தந்த உறவு முறைக்கேற்ப நேர்த்தியாக பிணைக்கப்

பட்டிருந்தது.அது மட்டுமில்லாது,ஒவ்வொரு தம்பதிகளுக்கு இடையிலான

அந்த காதலும்,நேசமும் அதை அவர்கள் வெளிபடுத்தும் விதமும்,இதமும்

தென்றல் எழுதும் கவிதை.


     ஒருவருக்கொருவர் உபசரிப்பதென்ன!ஒருவரை ஒருவர்

பரிகாசிப்பதென்ன!அவர்களது சரீரம்தான் வெள்ளந்தியாக அதிகம்

பேசியது.அதில் எல்லா வகையான அன்பின் ஆழமும் பிரதிபலித்தது.மிகவும்

இனிமையான ஒரு அனுபவம் விஜயனுக்கு.சிறிது நேரம் ரசித்து,ருசித்து

உண்டபின் விஜயன் கேட்டான்."ஆமாக்கா!எங்கே  நம்மக் கடைக்குட்டி

செல்லம்மா?"உடனே அங்கே சிறு சலனமும் இல்லாத நிசப்தம்.

தமக்கையிடமிருந்து ஒரு பெரும் பெருமூச்சுடன் ஒரு திகிலான பதில்

வந்தது.


     "அவசரப் படாதே தம்பி!அந்த பத்ரகாளியே ருத்ரதாண்டவமாடி உனக்கு

தரிசனம் தருவாள்".






                                                                                             தொடரும்..........